ஆன்றோர் வாக்கு
மேதகு ஆயர் சிங்கராயன்
அன்பு சகோதரர் சகோதரிகளே, “ஆன்றோர் வாக்கு” என்ற இந்தச் சிந்தனைத் தொடரில் இன்று ஒரு சிறிய கருத்தைப் பகிர்ந்து கொள்ள விரும்புகிறேன். நம்மில் ஒவ்வொருவரும் நல்லவர்களாக வாழ விரும்புகிறோம். ஆனால் பல நேரங்களில் அத்தகைய நல்ல வாழ்வை முழுமையாக வாழ முடியாமல் போகிறது. இதைப் பற்றி அறிஞர் அலெக்சாண்டர் செசில் கூறும் ஒரு சிந்தனை நமக்கு வழிகாட்டுகிறது:
“பாவச் செயல் எதுவும் செய்யாதே; கோபமான சொல்லைச் சொல்லாதே; நீ இயேசுவுக்கு உரியவன்.”
உலகின் பெரும்பாலான மதங்கள், “கடவுள் நம் தந்தை; நாம் அவருடைய பிள்ளைகள்” என்ற உண்மையை வலியுறுத்துகின்றன. கடவுளின் பிள்ளைகளாக வாழ விரும்புகிறவர்கள், அவரது இயல்புக்கு ஏற்ற செயல்களைச் செய்ய வேண்டும். அலெக்சாண்டர் செசில், கடவுளின் பிள்ளைகளாகவும் இயேசுவுக்கு உரியவர்களாகவும் வாழ இரண்டு விஷயங்களைத் தவிர்க்க வேண்டும் என்று கூறுகிறார்:
முதலாவது – பாவச் செயல்களைச் செய்யாதிருத்தல்
பொதுவாக யாரும் விரும்பி தவறு செய்வதில்லை. ஆனால் சூழ்நிலைகள், பலவீனங்கள், பிறரின் அழுத்தம் அல்லது கவனக்குறைவு போன்ற காரணங்களால் நாம் தவறான செயல்களில் ஈடுபட நேரிடுகிறது. அவ்வாறு செய்யும்போது, கடவுளின் பிள்ளைகளாக வாழ வேண்டிய அழைப்பிலிருந்து விலகிச் செல்கிறோம்.
இரண்டாவது – கோபமான சொற்களைப் பேசாதிருத்தல்
கோபம் என்பது மனிதனுக்கு இயல்பாக இருக்கும் ஒரு உணர்ச்சி. ஆனால் அந்தக் கோபத்தை வெளிப்படுத்தும் விதம்தான் முக்கியம். கோபத்தின் காரணமாக பிறரைப் புண்படுத்தும் வார்த்தைகளைப் பேசுவதும், அவர்களுக்கு தீங்கு விளைவிக்கும் செயல்களைச் செய்வதும் தவறாகும். அதற்கான பொறுப்பு நம்முடையதே.
எனவே, அன்பானவர்களே, இயேசுவுக்கு உரியவர்களாகவும், கடவுளின் அன்புப் பிள்ளைகளாகவும் வாழ நாம் முயற்சி எடுப்போம். பாவத்தைத் தவிர்த்து, கோபமான வார்த்தைகளுக்குப் பதிலாக அன்பும் இரக்கமும் நிறைந்த சொற்களைப் பேசுவோம்.
இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்.