தேடுதல்

ஆன்றோர் வாக்கு ஆன்றோர் வாக்கு  

ஆன்றோர் வாக்கு

ஒருவர் நம்முடன் இருக்கும் போதே அவருக்கு அன்பு காட்டவும், உதவி செய்யவும், அவருடைய தேவைகளை கவனிக்கவும் நாம் கற்றுக்கொள்ள வேண்டும்.

மேதகு ஆயர் சிங்கராயன்

நம் வாழ்விற்கு மிகவும் முக்கியமான ஒரு சிந்தனையை உங்களுடன் பகிர்ந்து கொள்ள விரும்புகிறேன். அர்னால்டு ஜார்ஜ் என்பவர், “Living need charity more than the dead” என்று கூறியுள்ளார். அதாவது, இறந்தவர்களை விட வாழ்ந்து கொண்டிருப்பவர்களுக்கே அன்பும் உதவியும் மிகவும் தேவை என்பதே அதன் பொருள். இதனை விளக்கும் ஒரு நிகழ்வு நினைவுக்கு வருகிறது. ஒரு ஊரில் வயதான ஒருவர் வாழ்ந்து வந்தார். அவருடைய வாழ்க்கையின் கடைசி சில ஆண்டுகளில் அவருடன் யாரும் இல்லை. அவருடைய பிள்ளைகள் வேறு ஊர்களில் வசித்து வந்தனர். தனிமையிலேயே அவர் தனது வாழ்க்கையை நடத்திக் கொண்டிருந்தார். ஒருநாள் அவர் இறந்துவிட்டார்.

அந்தச் செய்தியைக் கேட்டதும், அவருடைய பிள்ளைகள், உறவினர்கள் மற்றும் நண்பர்கள் அனைவரும் வந்து சேர்ந்தனர். அவரை அடக்கம் செய்வதற்காக கல்லறைக்குச் செல்லும்போது, நிறைய உணவுப் பொருட்கள், துணிமணிகள் மற்றும் பல்வேறு பரிசுப் பொருட்களை எடுத்துச் சென்றனர்.அதைப் பார்த்தபோது எனக்கு ஒரு எண்ணம் தோன்றியது. இன்று அவர்கள் எடுத்துச் செல்லும் இந்தப் பொருட்களில் பாதியையாவது அவர் உயிருடன் இருந்தபோது கொடுத்திருந்தால், ஒருவேளை அவர் இன்னும் சில மாதங்களோ அல்லது ஆண்டுகளோ மகிழ்ச்சியாக வாழ்ந்திருப்பார்.

நண்பர்களே, நம்மிடமும் இதுபோன்ற ஒரு பழக்கம் இருக்கிறது. ஒருவர் இறந்த பிறகு அவர்மீது நாம் கொண்டிருந்த அன்பை வெளிப்படுத்த முயல்கிறோம். ஆனால் அவர் உயிரோடு இருந்தபோது அந்த அன்பை வெளிப்படுத்தத் தவறிவிடுகிறோம். உண்மையில், அன்பு தேவைப்படுவது இறந்தவர்களுக்கு அல்ல; வாழ்ந்து கொண்டிருப்பவர்களுக்கே. ஒருவர் நம்முடன் இருக்கும் போதே அவருக்கு அன்பு காட்டவும், உதவி செய்யவும், அவருடைய தேவைகளை கவனிக்கவும் நாம் கற்றுக்கொள்ள வேண்டும். வாழ்வோருக்கு அன்பு செலுத்துவோம். அவர்கள் வாழ்வை மகிழ்ச்சியாக்குவோம். அதன்மூலம் நாமும் நிறைவான வாழ்க்கையை வாழ்வோம்.

அனைவருக்கும் என் அன்பான வாழ்த்துகள்.

 

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்.

17 ஜூன் 2026, 14:06