தேடுதல்

ஊட்டச்சத்து குறைபாட்டினால் பாதிக்கப்பட்டுள்ள குழந்தைகள் ஊட்டச்சத்து குறைபாட்டினால் பாதிக்கப்பட்டுள்ள குழந்தைகள் 

ஊட்டச்சத்து செறிவூட்டப்பட்ட உணவு பற்றாக்குறையால் பாதிக்கப்படும் குழந்தைகள்!

ஊட்டச்சத்து செறிவூட்டப்பட்ட உணவு, கடுமையான ஊட்டச்சத்து குறைபாட்டிற்காக உலக நலவாழ்வு அமைப்பால் (WHO) பரிந்துரைக்கப்பட்ட ஒரே வெளிநோயாளிக்கான சிகிச்சை முறையாகும். இதன் மூலம் குழந்தைகளுக்கு வீட்டிலேயே சிகிச்சை அளிக்க முடிவதால், மருத்துவமனையில் அனுமதிப்பதையும் அதற்கான செலவுகளையும் குறைக்க முடிகிறது.

அபிசேக் ராஜா அலங்காரம் -‌ வத்திக்கான்

ஐந்து வயதிற்குட்பட்ட குழந்தைகளிடையே காணப்படும் மிகத் தீவிரமான ஊட்டச்சத்து குறைபாட்டை (Severe Acute Malnutrition) குணப்படுத்துவதில் செறிவூட்டப்பட்ட நிலக்கடலை விழுது ஒரு முக்கிய உணவாக இருந்து வருகிறது. "சமைக்காமல் நேரடியாக உண்ணத் தயாராக உள்ள சிகிச்சைக்கான உணவான" (RUTF), இது கடந்த 30 ஆண்டுகளாக பல கோடிக்கணக்கான குழந்தைகளின் உயிரைத் காப்பாற்றியுள்ளது.

இன்று, ஏறத்தாழ 4.28 கோடி குழந்தைகள் தீவிரமான ஊட்டச்சத்து குறைபாட்டினால் பாதிக்கப்பட்டுள்ளனர், இதில் 1.22 கோடி குழந்தைகளின் நிலை மிகவும் மோசமடைந்துள்ளது. அதிகரித்து வரும் மோதல்கள், காலநிலை மாற்றங்கள் மற்றும் நிதி பற்றாக்குறை போன்ற சவால்களுக்கு மத்தியில், இந்த ஊட்டச்சத்து செறிவூட்டப்பட்ட உணவு (RUTF) எவ்வித தடையும் இன்றி தேவையில் உள்ள அனைவருக்கும் கிடைப்பதை உறுதி செய்வது முன்பை விடவும் இப்போது மிகவும் இன்றியமையாததாக உள்ளது.

ஊட்டச்சத்து குறைபாட்டினால் பாதிக்கப்பட்டுள்ள குழந்தைகளின் உயிர் காக்கும் சிகிச்சையில் இந்த ஊட்டச்சத்து செறிவூட்டப்பட்ட உணவின் தாக்கத்தை எடுத்துரைத்த யுனிசெஃப் நிர்வாக இயக்குனர் கேத்தரின் ரஸ்ஸல் அவர்கள், மேலும் "இந்த உணவின் மூலம் குடும்பங்கள் தங்கள் குழந்தைகளுக்கு வீட்டிலேயே சிகிச்சை அளிக்க முடிவதால், மருத்துவமனையில் அனுமதிப்பதையும் அதற்கான செலவுகளையும் குறைக்க முடிகிறது" என்று குறிப்பிட்டுள்ளார்.

"கடுமையான ஊட்டச்சத்து குறைபாடுள்ள குழந்தைகளுக்கு உயிரிழக்கும் ஆபத்து மிக அதிகம்" என்றும், "ஆனால் இந்த ஊட்டச்சத்து செறிவூட்டப்பட்ட உணவின் மூலம் பாதிக்கப்பட்ட குழந்தைகளில் 90 விழுக்காடு குழந்தைகள் குணமடைந்துள்ளனர்" என்றும் கேத்தரின் ரஸ்ஸல் தெரிவித்துள்ளார்.

1996 ஆம் ஆண்டில் அறிமுகப்படுத்தப்பட்ட இந்த ஊட்டச்சத்து செறிவூட்டப்பட்ட உணவு (RUTF), கடுமையான ஊட்டச்சத்து குறைபாட்டிற்காக உலக நலவாழ்வு அமைப்பால் (WHO) பரிந்துரைக்கப்பட்ட ஒரே வெளிநோயாளிக்கான சிகிச்சை முறையாகும். 2025 ஆம் ஆண்டில் மட்டும், யுனிசெஃப் நிறுவனம் 25.5 கோடி குழந்தைகளை பரிசோதித்து, 90 இலட்சத்திற்கும் அதிகமானோருக்கு சிகிச்சை அளித்துள்ளது. ஒரு வழக்கமான சிகிச்சைக்கு 6 முதல் 8  வார கால இடைவெளியில் 150 சிறு பைகள் தேவைப்படுகின்றன.

ஒவ்வொரு 92 கிராம் அளவுள்ள சிறு பையும் 500 கலோரிகளையும், குழந்தைகள் மீண்டும் வலிமை பெறுவதற்கு இன்றியமையாத ஊட்டச்சத்துக்களையும் வழங்குகிறது. உலகிலேயே மிக அதிக அளவில் இவற்றை வாங்கும் அமைப்பான யுனிசெஃப், 2003 ஆம் ஆண்டு முதல் 870 கோடி சிறு பைகளை பாதிக்கப்பட்ட குழந்தைகளுக்கு அளித்துள்ளது. 21 உற்பத்தியாளர்களைக் கொண்ட உள்ளூர் உற்பத்தி வசதிகள் நெருக்கடி காலங்களில் விரைவாகச் செயல்பட உதவியுள்ளன. இதனால் எத்தியோப்பியா போன்ற நாடுகள் குறிப்பிடத்தக்க அளவு பயனடைந்துள்ளன.

இந்த ஊட்டச்சத்து செறிவூட்டப்பட்ட உணவு-RUTF குழந்தைகளின் உயிர்வாழும் விகிதத்தை அதிகரித்திருந்தாலும், ஒவ்வொரு குழந்தையும் இந்த உயிர் காக்கும் ஊட்டச்சத்தைப் பெறுவதை உறுதி செய்ய தொடர்ச்சியான முதலீடும் விரிவாக்கமும் அவசியம் என்று யூனிசெஃப் அழைப்பு விடுத்துள்ளது.

யுனிசெஃப் நிறுவனம்

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

06 மே 2026, 15:07