தொடரும் வன்முறை சம்பவங்கள் தொடரும் வன்முறை சம்பவங்கள்   (AFP or licensors)

மாலியில் தொடரும் வன்முறையிலிருந்து குழந்தைகளைப் பாதுகாக்க யுனிசெஃப் அறைகூவல்

ஏப்ரல் 25 முதல் மாலியின் பமாக்கோ, மொப்தி, காவோ, கட்டி மற்றும் கிதால் ஆகிய பகுதிகளில் நிகழ்ந்து வரும் தொடர் வன்முறைத் தாக்குதல்கள் குறித்து யுனிசெஃப் (UNICEF) தனது ஆழ்ந்த கவலையை வெளிப்படுத்தியுள்ளது. இந்தத் தாக்குதல்கள் அப்பாவிப் பொதுமக்களையும், குறிப்பாகக் குழந்தைகளின் பாதுகாப்பையும் கடுமையாக அச்சுறுத்தியுள்ளன.

அபிசேக் ராஜா அலங்காரம் -‌ வத்திக்கான்

ஏப்ரல் 25, சனிக்கிழமை முதல் மாலியின் பல்வேறு பகுதிகளில், குறிப்பாக பமாக்கோ முதல் கிதால் வரை அரங்கேறிய வன்முறைகள் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளன. அங்கு தொடர்ந்து வரும் பாதுகாப்பற்ற சூழலால், எதிர்காலத் தலைமுறையினரான குழந்தைகளே சொல்லொணாத் துயரங்களுக்கு ஆளாகிறார்கள் என்பதையே இந்த தாக்குதல்கள் மீண்டும் ஒருமுறை நிரூபித்துள்ளன.

இந்தத் தாக்குதல்களின் போது குழந்தைகள் உள்பட பல பொதுமக்கள் கொல்லப்பட்டுள்ளனர் மற்றும் காயமடைந்துள்ளனர். மேலும் காயமடைந்த குழந்தைகளுக்கு தற்போது உள்ளூர் நலவாழ்வு மையங்களில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

மொப்தி (Mopti) பகுதியில் உள்ள ஒரு பாடசாலை இலக்கு வைக்கப்பட்டு தாக்கப்பட்டிருப்பது குறித்து கவலையைத் தெரிவித்துள்ள யுனிசெஃப் நிறுவனம், ஆயுதமேந்திய குழுக்களின் ஆக்கிரமிப்பு மற்றும் அப்பகுதியில் வெடிபொருட்கள் கண்டெடுக்கப்பட்டதே இந்தத் துயரச் சம்பவத்திற்குக் காரணம் எனச் சுட்டிக்காட்டியுள்ளது. இந்த வன்முறைச் செயலால், குறைந்தபட்சம் 300 குழந்தைகளின் கல்வி கற்கும் அடிப்படை உரிமை பறிக்கப்பட்டுள்ளது.

மேலும், காவோ (Gao) பகுதியில் உள்ள ஒரு சமூக நலவாழ்வு மையமும் தாக்குதலுக்கு உள்ளாகியுள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. இதன் விளைவாக, ஏறத்தாழ 2,700 குழந்தைகளின் அடிப்படை நலவாழ்வுச் சேவைகள் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளன. இந்தத் துயரச் சம்பவங்களைத் தொடர்ந்து, பள்ளிகளும் நலவாழ்வு மையங்களும் எப்போதும் பாதுகாப்பான இடங்களாகவே இருக்க வேண்டும் என்றும், அவை ஒருபோதும் வன்முறைத் தாக்குதல்களுக்கு இலக்காகக் கூடாது என்றும் யுனிசெஃப் நிறுவனம் வலியுறுத்தியுள்ளது.

பொதுமக்கள் பயன்படுத்தும் உள்கட்டமைப்பை உடனடியாகப் பாதுகாக்கவும், அனைத்துலக மனிதாபிமான சட்டத்தின் கீழ் உள்ள கடமைகளுக்கு இணங்கவும் அழைப்பு விடுத்துள்ள யுனிசெஃப் நிறுவனம், குழந்தைகளின் உயிர் அல்லது உடல் உறுப்புகளை இழக்கச் செய்தல், பள்ளிகள் மற்றும் நலவாழ்வு மையங்கள் மீதான தாக்குதல்கள் மற்றும் மனிதாபிமான உதவிகளுக்கான தடை உள்ளிட்ட குழந்தைகளுக்கு எதிரான கடுமையான மீறல்களை நிறுத்தவும் தடுக்கவும் கோரிக்கை விடுத்துள்ளது.

மனிதாபிமானப் பணியாளர்கள் குழந்தைகளையும் குடும்பங்களையும் பாதுகாப்பாகவும் தடையின்றியும் அணுக வேண்டும் என்றும் தெரிவித்துள்ள யுனிசெஃப் நிறுவனம், அண்மைய பாதுகாப்பற்ற சூழலுக்குப் பதிலளிக்கும் விதமாக, பிற நிறுவனங்களுடன் இணைந்து குழந்தைகள் பாதுகாப்பு, நலவாழ்வு, ஊட்டச்சத்து, துப்புரவு, நீர் மற்றும் கல்வி ஆகிய துறைகளின் மூலம் பாதிக்கப்பட்ட மக்களுக்குத் தொடர்ந்து ஆதரவளித்து வருகிறது.

இந்த வன்முறைத் தாக்குதல்களால் பாதிக்கப்பட்டுள்ள குழந்தைகள் மற்றும் அவர்களது குடும்பங்களுக்குத் தேவையான அனைத்து ஆதரவையும் வழங்கவும், வேகமாக மாறிவரும் மனிதாபிமானச் சூழலை எதிர்கொள்ளவும் யுனிசெஃப் முழு அர்ப்பணிப்புடன் செயல்பட்டு வருகிறது. மாலியில் உள்ள ஒவ்வொரு குழந்தையும் எவ்விதமான வன்முறையுமின்றி, பாதுகாப்பான சூழலில் வாழ்வதை உறுதி செய்வதே எமது தலையாய இலக்கு என அந்த அமைப்பு தெரிவித்துள்ளது.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

04 மே 2026, 12:19