ஹர்முஸ் நீரிணையில் கப்பல்கள் மற்றும் படகுகள் ஹர்முஸ் நீரிணையில் கப்பல்கள் மற்றும் படகுகள் 

உலகப் பொருளாதாரத்திற்கு ஹர்முஸ் நீரிணை நெருக்கடியால் புதிய அச்சுறுத்தல்!

எண்ணெய் விலை உயர்வு மற்றும் தட்டுப்பாடு ஆகியவை ஏற்கனவே ஆசியா மற்றும் ஐரோப்பியக் கண்டங்களை பாதிக்கத் தொடங்கிவிட்டன.

அபிசேக் ராஜா அலங்காரம் -‌ வத்திக்கான்

ஹர்முஸ் நீரிணையில் அதிகரித்து வரும் நெருக்கடியானது கோடிக்கணக்கான மக்களை வறுமைக்குள் தள்ளக்கூடும் என்றும், உலகளாவிய பசியை அதிகரிக்கச் செய்யும் என்றும், உலகளாவிய அளவில் பொருளாதார நெருக்கடியை உருவாக்கும் என்றும் ஐக்கிய நாடுகள் அவையின் பொதுச் செயலர் அந்தோனியோ குட்டரெஸ் அவர்கள் கவலை தெரிவித்துள்ளார்.

இந்த முக்கியமான கப்பல் போக்குவரத்துப் பாதையில் ஏற்படும் இடையூறுகள் எண்ணெய், எரிவாயு, உரம் மற்றும் பிற அத்தியாவசியப் பொருட்களின் பரிமாற்றத்தை கட்டுப்படுத்துவதுடன், ஏற்கனவே பலவீனமாக உள்ள உலகப் பொருளாதாரத்தை மேலும் நெருக்கடிக்குள்ளாக்குகின்றன என்றும் ஐ நா பொதுச்செயலர் தெரிவித்துள்ளார்.

உலகளாவிய பொருளாதார வளர்ச்சி 3.4 விழுக்காட்டிலிருந்து 3.1 விழுக்காடாக குறையக்கூடும்" என்றும் அதே வேளையில் பணவீக்கம் 4.4 விழுக்காடாக உயரக்கூடும் என்றும் ஐநா அவையின் கணிப்புகள் தெரிவித்துள்ளன.

ஹர்முஸ் நீரிணையின் இந்த இடையூறுகள் விரைவில் முடிவுக்கு வந்தாலும் கூட, பொருள்களின் போக்குவரத்து சீரடைய பல மாதங்கள் ஆகலாம் என கூறியுள்ள ஐநா பொதுச் செயலர், இத்தகைய பதற்றமான சூழல் நீடித்தால், ஏறத்தாழ 3.2 கோடி மக்கள் வறுமையின் பிடியில் சிக்கக்கூடும் என்றும் 4.5 கோடிக்கும் அதிகமானோர் கடும் பசியை எதிர்கொள்ள நேரிடும் என்றும் எச்சரித்துள்ளார்.

அனைத்துலக கடல்சார் அமைப்பு போன்ற நிறுவனங்கள் பாதுகாப்பான கப்பல் போக்குவரத்துப் பாதைகளை உறுதி செய்ய முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றன என்றும், இதற்கிடையில், எண்ணெய் விலை உயர்வு மற்றும் தட்டுப்பாடு ஆகியவை ஏற்கனவே ஆசியா மற்றும் ஐரோப்பியக் கண்டங்களை பாதிக்கத் தொடங்கிவிட்டன என்றும் ஐநா அவை தெரிவித்துள்ளது.

இந்த நெருக்கடியைச் சமாளிக்க கடல்சார் போக்குவரத்தைச் சீரமைப்பதோடு மட்டுமல்லாமல், புதைபடிவ எரிபொருட்களின் (Fossil Fuels) தேவையைக் குறைக்க புதுப்பிக்கத்தக்க எரிசக்திக்கு (Renewable Energy) மாறுவதை விரைவுபடுத்துமாறு ஐநா அவை வலியுறுத்தியுள்ளது.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

02 மே 2026, 13:49