கைவிடப்பட்டோரின் புகலிடமான கொட்டோலெங்கோ இல்லம்!
அபிசேக் ராஜா அலங்காரம் - வத்திக்கான்
பெரு நாட்டின் அரேகிபா (Arequipa) நகரில் இயங்கி வரும் கொட்டோலெங்கோ இல்லம் (Cottolengo Home), சமூகத்தால் கைவிடப்பட்ட மற்றும் தீவிர உடல், மனநல சவால்களைக் கொண்ட பெண் குழந்தைகள் மற்றும் இளம்பெண்களின் புகலிடமாகத் திகழ்கிறது.
புனித ஜோசப் பெனடிக்ட் கொட்டோலெங்கோவின் ஆன்மீகப் பாரம்பரியத்தைப் பின்பற்றி, 2002-ஆம் ஆண்டு அவரது அருள்சகோதரிகளால் இந்த இல்லம் தொடங்கப்பட்டது. கடும் வறுமை மற்றும் புறக்கணிப்புக்கு உள்ளானவர்களுக்கு வெறும் தங்குமிடமாக மட்டுமல்லாமல், ஒரு அன்பான குடும்பமாக இது உருவெடுத்துள்ளது.
தற்போது அருள்சகோதரிகள், தன்னார்வலர்கள் மற்றும் பணியாளர்களின் ஒருங்கிணைந்த உழைப்பால், இங்குள்ளவர்களுக்குத் தனிப்பட்ட கவனிப்பு, மறுவாழ்வு மற்றும் கல்வி வழங்கப்படுகிறது. ஒரு காலத்தில் நிர்வாகியாக இருந்து, இப்போது இங்கு பணியாற்றும் அருள்சகோதரி மரியா கான்ஃபியான்சா அவர்கள், இந்த குழந்தைகளை "சதையால் ஆன நற்செய்தி" (The Gospel in the Flesh) என்று போற்றுகிறார். இக்குழந்தைகளுக்குப் பணி செய்வதையே அவர் தனது வாழ்வின் உயரிய அழைப்பாகக் கருதுகிறார்.
இந்த இல்லத்தில் வாழும் தீவிர புறக்கணிப்பிலிருந்து மீட்கப்பட்டு படிப்படியாக அடிப்படைத் திறன்களைக் கற்றுக் கொண்ட ஜோவன்னாவின் கதையும், வலுவற்ற நிலையிலும் மன உறுதியுடன் வாழும் பிராங்கிட்டோவின் வாழ்க்கையும், மனித மாண்பை மீட்டெடுக்கும் உறுதியுடன் செயல்படும் இந்த இல்லத்தின் பணியை எதிரொளிக்கின்றன.
இங்கு வாழும் பலர் வன்முறை, வறுமை மற்றும் சமூகப் புறக்கணிப்பால் பாதிக்கப்பட்டவர்கள் ஆவர். இவர்களில் சிலர் பிறந்தவுடனேயே கைவிடப்பட்ட நிலையில் மீட்கப்பட்டவர்கள் என்பதும் குறிப்பிடத்தக்கது.
நிதி மற்றும் மருத்துவ சவால்களுக்கு மத்தியிலும், இந்த இல்லம் வாழ்நாள் முழுவதற்குமான கவனிப்பை உறுதி செய்வதோடு, ஒவ்வொரு நபருக்கும் மாண்புமிக்க வாழ்க்கையை வழங்க பெரும் முயற்சி எடுத்து வருகிறது. இங்குள்ள பள்ளி மற்றும் பணிமனைகள் இந்த இல்லத்தில் வாழ்பவர்களின் வளர்ச்சி, சமூக நல்லிணக்கம் மற்றும் படைப்பாற்றலை ஊக்குவிப்பதில் பெரும் பங்காற்றுகின்றன.
அன்பு, அரவணைப்பு மற்றும் நம்பிக்கையின் மூலம், கொட்டோலெங்கோ இல்லம் "பறிக்கப்பட்ட குழந்தைப்பருவத்தை" மீட்டெடுத்து, ஒவ்வொரு மனித உயிரும் அளவற்ற மதிப்புடையது என்பதற்கான ஒரு வாழும் சான்றாகத் திகழ்கிறது.
இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்