நெறி காட்டும் ஆளுமைகள்
அருள்முனைவர் சேவியர் அந்தோனி சே.ச.
தொடுதிரை உலகின் முடிசூடா மன்னனாகத் திகழ்ந்து, தொழில்நுட்ப உலகின் உச்சங்களைத் தொட்ட ஆப்பிள் நிறுவனத்தின் நிறுவனர் ஸ்டீவ் ஜாப்ஸ், தனது 56-வது வயதிலேயே மரணத்தைத் தழுவினார். அவர் சாவின் விளிம்பில் இருந்தபோது மருத்துவமனையில் கூறியதாக இணையத்தில் உலா வரும் வரிகள் இவை: 'நான் வணிக உலகின் வெற்றிகளின் உச்சிக்குச் சென்றவன். பிறர் பார்வையில் என் வாழ்க்கை மிக வெற்றிகரமானதுதான். எனது பணிச்சுமைகளுக்கு மத்தியிலும் சில மகிழ்ச்சியான தருணங்களை நான் கடந்து வந்திருக்கிறேன். ஆனால், பணமும் வசதிகளும் மட்டுமே வாழ்க்கை இல்லை என்பதை, என் வாழ்வின் இறுதித் தருணத்தில்தான் உணர்கிறேன். இதோ, இந்த மரணப் படுக்கையில் படுத்துக்கொண்டு என் கடந்த கால வாழ்க்கையைத் திரும்பிப் பார்க்கிறேன். இதுவரை நான் பெற்ற அங்கீகாரம், பணம், புகழ், சொத்து, செல்வாக்கு என எல்லாமே அர்த்தமற்று, இந்த மரணத்தின் முன்னால் செல்லாக் காசுகளாய் தோற்றுப் போய் நிற்பதை என் மனதார உணர்கிறேன். இந்த இருட்டு அறையில், என் உயிரைக் காக்கப் போராடும் மருத்துவ இயந்திரங்களின் மெல்லிய சத்தம் மட்டுமே என் காதுகளில் ரீங்காரமிடுகிறது. கடவுளின் மூச்சுக்காற்றையும் மரணத்தையும் மிக அருகில் உணர்கிறேன்.
வாழ்க்கைக்குத் தேவையான பணத்தைச் சம்பாதித்த பிறகு, பணத்தோடு தொடர்பில்லாத, நம் மனதோடு தொடர்புடைய சிலவற்றை நாம் சம்பாதிக்கத் தொடங்க வேண்டும் என்பதை இப்போதுதான் புரிகிறேன். அது அழகான குடும்ப உறவாகவோ, நல்ல நட்பாகவோ, கலையாகவோ அல்லது நம் இளமைக் காலக் கனவாகவோ இருக்கலாம். அவைதான் வாழ்க்கையின் உண்மையான சொத்துக்கள். அதை விடுத்து, பணத்தை மட்டுமே மையமாகக் கொண்டு ஓடும் வாழ்க்கை மனிதனை முற்றிலும் திசைமாற்றி விடுகிறது; என் வாழ்க்கையைப் போல! நாம் பணத்தால் வாங்கிய மகிழ்ச்சிகள் எல்லாமே வெறும் மாயைதான்.' ஆம், வெற்றியின் உச்சங்களைத் தொட்டவர்கள் தான், வாழ்க்கையின் வெறுமையையும் கண்டறிந்து உலகிற்கு எச்சரிக்கை செய்கிறார்கள். மரண வாசலில் நாம் சேர்க்கும் சொத்துக்கள் அனைத்தும் வெறும் காகிதங்களாகவே நின்றுவிடுகின்றன.
இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்