தேடுதல்

நெறி காட்டும் ஆளுமைகள் நெறி காட்டும் ஆளுமைகள்  

நெறி காட்டும் ஆளுமைகள்

"நாம் எப்படிப் பிறந்தோம் என்பது இயற்கையின் கையில்; ஆனால், நாம் எப்படி நினைவுகூரப்படுவோம் என்பது நம் செயல்களின் கையில்!"

அருள்முனைவர் சேவியர் அந்தோனி சே.ச.

ஆல்பிரட் நோபல், 'டைனமைட்' எனும் சக்திவாய்ந்த வெடிமருந்தைக் கண்டுபிடித்த மாபெரும் விஞ்ஞானி. அதன் மூலம் அவர் அளவற்ற செல்வத்தைச் சேர்த்திருந்தார். ஒரு நாள் அதிகாலை, வழக்கம் போல் செய்தித்தாளை வாசித்துக் கொண்டிருந்த நோபலுக்குப் பேரிடி காத்திருந்தது. மரண வியாபாரி ஆல்பிரட் நோபல் மரணம் என்ற தலைப்பில் ஒரு செய்தியை அவர் வாசித்தார். உண்மையில் இறந்தது அவரது சகோதரர், ஆனால் பத்திரிகை தவறுதலாக ஆல்பிரட் நோபல் இறந்துவிட்டதாகச் செய்தி வெளியிட்டிருந்தது. தான் இறந்துவிட்டதாக வந்த செய்தியை விட, அதில் தன்னைப்பற்றியிருந்த குறிப்பு அவரை நிலைகுலைய வைத்தது. பல உயிர்களைப் பலிவாங்கும் வெடிமருந்தைக் கண்டுபிடித்தவர்; ஒரு மரண வியாபாரி என்று அந்தச் செய்தி அவரைச் சித்தரித்திருந்தது.

நான் இறந்த பிறகு உலகம் என்னை இப்படித்தான் நினைவில் வைத்திருக்குமா? இதுதான் எனது வாழ்க்கையின் அடையாளமா? என்று அவர் மனதிற்குள் கலங்கினார். அந்த நொடியே ஒரு தீர்க்கமான முடிவெடுத்தார். அழிவின் மூலம் தான் ஈட்டிய சொத்துக்கள் அனைத்தையும் ஒன்று திரட்டினார். மனித குலத்திற்கு நன்மை செய்யும் அறிவியல் கண்டுபிடிப்புகளுக்கும், உலக அமைதிக்காகப் பாடுபடுபவர்களுக்கும் உயரிய விருதுகளை வழங்க ஒரு அறக்கட்டளையை நிறுவினார். அவைதான் இன்று உலகம் போற்றும் 'நோபல் பரிசுகள்'. அன்னை தெரசா போன்ற மகத்தான மனிதர்களுக்கு வழங்கப்பட்ட அந்த அமைதிப் பரிசு, நோபலின் இந்த மனமாற்றத்தால் உருவானதே. அன்று 'மரண வியாபாரி' என்று அழைக்கப்பட்ட ஆல்பிரட் நோபல், இன்று மனிதநேய விஞ்ஞானியாகவும் அமைதி விஞ்ஞானியாகவும் வரலாற்றில் நிலைத்து நிற்கிறார். பலர் வரலாற்றில் உயர்கின்றனர்; ஆனால், வெகு சிலரே வரலாற்றையே உயர்த்துகின்றனர். அந்தச் சிலரில் ஆல்பிரட் நோபல் மிக முக்கியமானவர்.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

19 மே 2026, 12:22