நெறி காட்டும் ஆளுமைகள்
அருள்முனைவர் சேவியர் அந்தோனி சே.ச.
ஒரு தாய் பெண் குழந்தையைப் பெற்றெடுத்தாள். தன் குழந்தையை ஒருமுறை பார்க்கத் துடித்த அந்தத் தாயிடம், என்ன சொல்வதென்று தெரியாமல் மருத்துவச்சி கைகளைப் பிசைந்து கொண்டு நின்றாள். பதறிப்போன தாய், "ஏன் இப்படி நிற்கிறாய்? என் குழந்தைக்கு என்ன ஆச்சு? ஒருவேளை இறந்து பிறந்துவிட்டதா?" என்று கண்ணீரோடு கேட்டாள். அதற்கு அந்த மருத்துவச்சி, "இல்லை அம்மா, குழந்தை சாகவில்லை... ஆனால் இறந்திருக்கலாம்" என்று கூறினாள். "ஏன் அப்படிச் சொல்கிறாய்?" என்று தாய் அதிர்ச்சியுடன் கேட்டபோது, "உங்கள் குழந்தைக்குக் கண்ணும் தெரியாது, காதும் கேட்காது. பேசும் திறனும் அற்றே பிறந்திருக்கிறது" என்றாள் மருத்துவச்சி.
இந்தச் செய்தி தாயைப் பேரதிர்ச்சியில் ஆழ்த்தினாலும், அடுத்த கணமே அவள் தீர்க்கமாக "குறைகள் ஆயிரம் இருந்தாலும், இது என் குழந்தை!" என்று சொன்னாள்: அந்தத் தாய் தன் குழந்தையை அரவணைத்து, வைராக்கியத்துடன் வளர்த்தாள். அந்தக் குழந்தைக்கு ஒளியும் ஒலியும் நிறைந்த வெளி உலகம் இல்லைதான், ஆனால் கற்றுக்கொள்ளும் ஆற்றல் மிக்க 'மூளை உலகம்' இருந்ததே! இல்லாததை எண்ணிப் புலம்பாமல், இருப்பதை வைத்து தன் மகளைச் செதுக்கினாள் அந்தத் தாய்.
எதிர்காலத்தில் அந்தக் குழந்தை 'பிரெய்லி' முறையில் எழுதக் கற்றுக்கொண்டு, உலகமே வியக்கும் சாதனை படைத்தது. அவர்தான் தன்னம்பிக்கைத் தாரகை ஹெலன் கெல்லர். ஐம்பது நாடுகளுக்கு மேல் பயணம் செய்து, பார்வையற்றவர்களுக்குத் தன் எழுச்சியால் ஒளியூட்டி சரித்திரம் படைத்தார். தூக்கத்தில் நாம் காணும் காட்சிகளை விட, அகக்கண்கள் காட்டும் இதயக் காட்சிகள் இறைவனுக்கு மிகவும் நெருக்கமானவை. ஆம், சாதனையாளர்களுக்கு உடல் குறையும் ஒரு அழகான வாய்ப்பே. தங்களுக்கு இருப்பதை வைத்து வெற்றியைத் தேடும் வீரியம் கொண்ட அன்னையர்கள் இருக்கும் வரை, எந்தக் குறையும் ஒரு தடையல்ல!
இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்