கதைகள் ஆயிரம்
அருள்முனைவர் சேவியர் அந்தோனி சே.ச.
எள் விதை தந்த தன்னம்பிக்கை
பன்னீர் பன்னிரண்டாம் வகுப்பு அரசுப் பொதுத்தேர்வை நெருங்கிக் கொண்டிருந்தான். சுற்றி இருப்பவர்கள் ஆளாளுக்கு ஒரு அறிவுரை சொல்லி அவனை அச்சுறுத்தினார்கள். வானொலியும் தொலைக்காட்சியும் பதற்றத்தை அதிகமாக்கின. "அப்படிப் படி, இப்படி மனப்பாடம் பண்ணு, அதைச் சாப்பிடு" எனப் புத்திமதி சொல்லிப் பலரும் பேரின்பம் கண்டனர். ஆனால், பன்னீரோ மிரண்டு போனான். இவ்வளவு பாடங்களையும் என்னால் படிக்க முடியுமா? ஒரு விவசாயியின் மகனான என் மூளைக்கு இவ்வளவு சக்தி உண்டா?" எனத் தன்மீதே சந்தேகம் கொண்டான். தன்னம்பிக்கை இன்றித் தளர்ந்து போனான்; நிம்மதி இழந்து நொறுங்கிப் போனான். படிக்காதவரான அவனது தந்தை மகனின் மனவேதனையைக் கவனித்தார். ஒரு மாலை வேளையில், மகனை வயல்வெளிக்கு அழைத்துச் சென்றார். அங்கே நிலத்தை உழுது விதைகளை விதைத்துக் கொண்டிருந்தார் அப்பா. மண்ணில் விழுந்த எள் விதைகளின் வடிவம் பன்னீரின் கண்களை உறுத்தியது. "எவ்வளவு சிறிய விதை இது! மண்ணுக்குள் புதைந்து போகும் இந்தச் சிறிய விதை எப்படித்தான் பிழைத்து முளைக்குமோ?" எனப் பரிதாபப்பட்டான் பன்னீர்.
இயற்கை கற்பித்த பாடம்:
சில நாட்களுக்குப் பிறகு, மீண்டும் அந்த வயல்வெளிக்கு வந்தான் பன்னீர். ஆச்சரியம்! அந்தச் சிறிய எள் விதைகள் மண்ணைத் துளைத்துக் கொண்டு பசுமையாக முளைத்து நின்றன. வியப்புடன் நின்ற மகனிடம் அந்தப் படிக்காத தந்தை சொன்னார்: "பார்த்தாயா மகனே! ஒரு மில்லி மீட்டர் கூட தேறாத இந்தச் சிறிய எள் விதை, தன்னை விடப் பல மடங்கு எடையுள்ள ஒரு கிலோ மண்ணைத் தள்ளிக்கொண்டு வெளியே வருவதைப் பார்த்தாயா? அதன் துளிர்விடும் சக்தியைப் பார்த்தாயா? உன் மூளையும் அப்படித்தான் என் செல்ல மகனே! என தந்தை தொடர்ந்தார்: "உன் ஆற்றலை நீயே ஆராய்ந்து பார். உனக்குள் இருக்கும் மனப்பாட சக்தியையும், சிந்திக்கும் திறனையும் வெளிக் கொண்டு வா. உன்னால் மகத்தான மதிப்பெண்களைப் பெற முடியும். 'என்னால் முடியாது' என்ற எண்ணத்தை உதறித் தள்ளு.
பன்னீருக்குள் இருந்த பயம் விலகியது. ஆற்றல் மாறாக் கோட்பாட்டை விளக்கிய ஆல்பர்ட் ஐன்ஸ்டீன் ஒருமுறை சொன்னார்: "என்னால் முடியாது என்று ஒதுங்கியவர்களுக்கு நான் நன்றி சொல்கிறேன். அவர்களால் தான் நான் இன்று இவ்வளவு சாதித்திருக்கிறேன்." தந்தை காட்டிய எள் விதை, பன்னீருக்குள் அறிவொளியையும், அசைக்க முடியாத தன்னம்பிக்கையையும் விதைத்தது.
இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்