கதைகள் ஆயிரம் கதைகள் ஆயிரம்  

கதைகள் ஆயிரம்

"நம்மிடம் ஏதுமில்லை" என்பது ஞானம். "நம்மால் முடியும்" என்பது தன்னம்பிக்கை.

அருள்முனைவர் சேவியர் அந்தோனி சே.ச.

ஆணவமிக்க சிங்கம் ஒன்று காடே அதிரும்படி கர்ஜித்தது. "இந்தக் காட்டிலேயே என்னைவிடப் பெரியவன் ஒருவன் உண்டோ?" என்று அகந்தையோடு அலைந்தது. சிங்கத்தின் கேள்விக்கு, மற்ற விலங்குகள் பயந்துபோய் தக்க பதிலைத் தந்து தப்பிக்கப் பார்த்தன:

காரா பசு பணிவாகச் சொன்னது, "நீரே வெள்ளை உள்ளத்தவர்!" ஒட்டகச்சிவிங்கி ஒத்துக்கொண்டது, "நீரே உயரத்தால் உயர்ந்தவர்!" நரி நயமாகச் சொன்னது, "நீரே கூர்மையான புத்தியுள்ளவர்!"யாரைக் கேட்டாலும் தமக்கு மிகுந்த மரியாதை கிடைப்பதாக எண்ணி, சிங்கத்திற்குச் செருக்கு மேலும் கூடியது. வெறும் இதமான பேச்சுகளைக் கேட்டு அதன் ஆணவம் அதிகமானது; கர்வத்தோடு நடைபோட்டது.

அப்போது அந்தப் பக்கமாக ஆனந்தமாகக் குளித்துக் கொண்டிருந்த ஒரு யானையிடம் சென்றது சிங்கம். போன வேகத்தில் தெனாவட்டாக அதன் முதுகைக் கீறிக்கொண்டே கேட்டது, "இந்தக் காட்டிலே என்னைவிடப் பெரியவன் உண்டோ? பதில் சொல்!" காலால் தட்டிவிட்டதாலும், கர்வமாய் மிரட்டியதாலும் யானைக்குக் கோபம் பொங்கியது. அது தன் துதிக்கையால் சிங்கத்தை ஒரே அடியாக வாரிச் சுருட்டியது; அடித்துத் துவைத்து, அப்படியே தூக்கித் தூரப் போட்டது. பக்கத்து மாமரத்தின் மேல் பரிதாபமாய் விழுந்த சிங்கம், மரண அடி பட்டு முனகியது. சன்னமான குரலில் அது முணுமுணுத்தது: "என்ன இது? கேட்ட கேள்விக்குப் பதில் தெரியவில்லை என்றால், தெரியவில்லை என்று சொல்ல வேண்டியதுதானே? அதற்காக இப்படியா செய்வார்கள்?"

"நம்மிடம் ஏதுமில்லை" என்பது ஞானம். "நம்மால் முடியும்" என்பது தன்னம்பிக்கை. "என்னால் மட்டுமே முடியும்" என்பது தன்னம்பிக்கை அல்ல, அது தலைகனம். ஆகாயத்தில் இருக்கிறோம் என ஆட்டம் போடாதே நண்பா! தவறி விழுந்தால், தரையில் இருப்பவனை விட உனக்குத்தான் பாதிப்பு அதிகம்.

 

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

04 மே 2026, 14:09