தேடுதல்

ஆன்றோர் வாக்கு ஆன்றோர் வாக்கு  

ஆன்றோர் வாக்கு

விவிலியம் நம் வாழ்வின் ஒவ்வொரு நிலையிலும், ஒவ்வொரு நேரத்திலும் நம்மோடு இருக்குமென்றால், அதுவே நமக்குச் சிறந்த வானதூதனாக அமையும்.

மேதகு ஆயர் சிங்கராயன்

எனக்குத் தெரிந்த ஒரு பாட்டி எப்போதும் கையில் ஒரு பையையும், அதனுள் ஒரு விவிலியப் புத்தகத்தையும் வைத்திருப்பார்கள். அவர் கோவிலுக்குச் சென்றாலும், கடைவீதிக்குச் சென்றாலும், ஏன்... உறங்கச் செல்லும்போதும் கூட அந்த விவிலியம் அவரோடே இருக்கும். "எல்லா நேரங்களிலும் ஏன் இவர்கள் விவிலியத்தைச் சுமந்து செல்கிறார்கள்?" என்று நான் வியந்ததுண்டு.அந்தத் தருணத்தில் தான், Addy Thomas என்ற அறிஞர் சொன்ன ஒரு கூற்று என் நினைவுக்கு வந்தது. அவர் இவ்வாறு குறிப்பிடுகிறார்:

"என் படுக்கையைச் சுற்றி நான்கு வானதூதர்கள் எப்போதும் இருக்கிறார்கள். ஒருவர் என்னைப் பாதுகாக்க, ஒருவர் எனக்காக ஜெபிக்க, மற்ற இருவரும் என் ஆன்மாவைக் கடவுளிடம் கொண்டு செல்ல அங்கே நிற்கிறார்கள்."

இங்கே அவர் குறிப்பிடுவது நான்கு நற்செய்தி நூல்களை (மத்தேயு, மாற்கு, லூக்கா, யோவான்). இந்த நற்செய்தி நூல்கள் நம் வாழ்விற்கு வழிகாட்டுபவை; நமக்கு உண்மையான பாதுகாப்பை அளிக்கக்கூடியவை. நாம் விழித்திருக்கும்போதும், உறங்கும்போதும் இறைவனின் பாதுகாப்பை நமக்கு உறுதி செய்யும் ஆற்றல் இந்த இறைவார்த்தைகளுக்கு உண்டு. நண்பர்களே, நான் உங்களை எப்போதும் பைபிளைச் சுமந்து செல்லுங்கள் என்று சொல்லவில்லை. ஆனால், விவிலியத்தோடு உங்களுக்கு இருக்கும் அந்தத் தொடர்பு இன்னும் ஆழப்பட வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன். விவிலியத்தை நீண்ட நேரம் வாசிக்க வேண்டும் என்பதில்லை; நேரம் கிடைக்கும்போதெல்லாம் ஒரு சில நிமிடங்கள், ஒரு சில வசனங்களை வாசித்தாலே போதுமானது.

இன்றைய நவீன கணினி மற்றும் அலைபேசி யுகத்தில், நம் கையில் இருக்கும் செல்போன்களிலேயே விவிலியம் வந்துவிட்டது. அதிலிருந்தும் நாம் அவ்வப்போது வாசிக்கலாம். விவிலியம் நம் வாழ்வின் ஒவ்வொரு நிலையிலும், ஒவ்வொரு நேரத்திலும் நம்மோடு இருக்குமென்றால், அதுவே நமக்குச் சிறந்த வானதூதனாக அமையும். இந்த முயற்சியைத் தொடங்குவோம். உங்கள் அனைவருக்கும் வாழ்த்துக்கள்!

 

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

06 மே 2026, 15:17