வாரம் ஒரு நிகழ்வு
டேனிகா அமிஷ் – வத்திக்கான்
நாம் இன்று அனுபவிக்கும் அனைத்து உரிமைகள், வசதிகள் மற்றும் நவீன முன்னேற்றங்கள் என ஒவ்வொன்றின் பின்னாலும் கோடிக்கணக்கான உழைப்பாளர்களின் இரத்தமும் வியர்வையும் கலந்திருக்கிறது. அந்த உழைப்பினை மனதார மதிப்பதற்கும், அவர்களின் அடிப்படை உரிமைகளை உலகிற்கு நினைவூட்டுவதற்கும் ஒவ்வொரு ஆண்டும் மே மாதம் 1-ஆம் நாள் ' அனைத்துலக தொழிலாளர் தினம்' கடைப்பிடிக்கப்படுகிறது. இந்த தினத்தின் வரலாறு 1886-ஆம் ஆண்டு அமெரிக்காவின் சிகாகோ நகரில் தொடங்கியது. அன்று தொழிலாளர்கள் தங்களின் அடிப்படை உரிமையான "ஒரு நாளில் 8 மணி நேர வேலை" என்ற கோரிக்கையை முன்வைத்து மிகப்பெரிய போராட்டத்தை நடத்தினார்கள். வரலாற்றில் ஷேர் மார்க்கெட் சம்பவம்' என்று அழைக்கப்படும் அந்தப் போராட்டம் தான் இன்றைய தொழிலாளர் உரிமைகளுக்கு வித்திட்டது.
அன்றைய போராட்டத்தின் முழக்கம் மிகவும் தெளிவானது: "8 மணி நேர வேலை, 8 மணி நேர ஓய்வு, 8 மணி நேரத் தனிப்பட்ட வாழ்க்கை" என்பதே அது. உழைப்பாளர்கள் தங்களின் குடும்பத்தோடும், சமூகத்தோடும் நேரத்தைச் செலவிடவும், உடல் நலத்தைப் பேணவும் இந்த 8 மணி நேர வேலை முறை இன்று உலகம் முழுவதும் சட்டபூர்வமாக அங்கீகரிக்கப்பட்டுள்ளது. தொழிலாளர் என்று சொன்னால் அவர்கள் ஒரு குறிப்பிட்ட பிரிவினர் மட்டும் அல்ல. வயலில் பாடுபடும் விவசாயி, வானளாவிய கட்டிடங்களை எழுப்பும் தொழிலாளர், தொழிற்சாலை பணியாளர், ஊரைச் சுத்தப்படுத்தும் தூய்மைப் பணியாளர், வாகன ஓட்டுநர்கள் எனத் தங்களின் உழைப்பால் இந்த உலகை இயக்கும் ஒவ்வொருவருமே தொழிலாளர்கள் தான்.
உழைப்பாளர்களுக்குச் சில அடிப்படை உரிமைகள் உள்ளன. உழைப்புக்கேற்ற நியாயமான கூலி, பாதுகாப்பான வேலைச் சூழல், முறையான ஓய்வு நேரம், மருத்துவப் பாதுகாப்பு மற்றும் எல்லாவற்றுக்கும் மேலாக மனித நேயத்துடன் கூடிய மரியாதை ஆகியவை அவர்களுக்குக் கிடைக்க வேண்டும். இவை சலுகைகள் அல்ல, மாறாக உழைப்பாளர்களின் பிறப்புரிமைகள். ஆயினும், இன்றைய நவீன உலகிலும் தொழிலாளர்கள் பல சவால்களைச் சந்தித்து வருகின்றனர். உழைப்புக்கேற்ற கூலி கிடைக்காமை, வேலை பாதுகாப்பு இல்லாத ஒப்பந்த முறை மற்றும் பெண் தொழிலாளர்கள் சுரண்டப்படுவது போன்ற சிக்கல்கள் இன்றும் தீர்க்கப்படாத சவால்களாகவே உள்ளன. இவற்றுக்கு எதிராகக் குரல் கொடுப்பது ஒரு நாகரிகச் சமூகத்தின் கடமையாகும். பெண் தொழிலாளர்களின் பங்கு இச்சமூகத்தில் போற்றுதலுக்குரியது. அவர்கள் குடும்பம், வேலை மற்றும் சமூகம் என மூன்றையும் ஒரே நேரத்தில் தனது தோள்களில் சுமக்கும் வலிமையான உழைப்பாளிகள். அவர்களுக்கு ஆண்களுக்கு நிகரான சமமான கூலியும், பணியிடத்தில் உரிய பாதுகாப்பும், மரியாதையும் வழங்கப்பட வேண்டியது மிக அவசியமாகும்.
குழந்தைத் தொழிலாளர் முறை என்பது ஒரு சமூகக் குற்றமாகும். குழந்தைகள் கைகளில் கருவிகளை ஏந்தி உழைக்க வேண்டியவர்கள் அல்ல; அவர்கள் பள்ளிக்கூடம் சென்று கல்வி கற்கவும், மைதானத்தில் விளையாடி மகிழவும் வேண்டியவர்கள். குழந்தைத் தொழிலாளர் முறையை வேரோடு ஒழிப்பது ஒவ்வொரு பொறுப்புள்ள குடிமகனின் கடமையாகும். தொழிலாளர் தினம் என்பது வெறும் விடுமுறைக்காகக் கொண்டாடப்படும் நாள் அல்ல. இது உழைப்பாளர்களின் தியாகங்களை நினைவுகூரும் ஒரு நாளாகவும், அவர்களின் உரிமைகள் குறித்த விழிப்புணர்வை மக்களிடையே ஏற்படுத்தும் நாளாகவும் அமைகிறது. ஒவ்வொரு தொழிலாளியும் தனது உரிமைகளை அறிந்து, விழிப்புடன் இருக்க இது ஒரு நல்ல வாய்ப்பாகும். இந்தியாவைப் பொறுத்தவரை, மே 1-ஆம் தேதியைத் தொழிலாளர் தினமாக முதன்முதலில் கொண்டாடிய பெருமை நமது சென்னை நகரையே சேரும். 1923-ஆம் ஆண்டு சிங்காரவேலர் தலைமையில் சென்னையில் தான் முதன்முதலாக இந்தத் தினம் அனுசரிக்கப்பட்டது. தொழிலாளர் உரிமைகளைப் பாதுகாப்பதில் தமிழ்நாடு எப்போதும் முன்னோடி மாநிலமாகத் திகழ்கிறது.
தொழிலாளர்கள் இல்லையெனில் இந்த உலகில் எதுவுமே இயங்காது. நாம் வாழும் வீடுகள், உண்ணும் உணவு, நாம் பயன்படுத்தும் போக்குவரத்து வசதிகள், ஏன் இந்த நகரங்களே இருக்காது. தேசத்தின் பொருளாதாரத்தையும் முன்னேற்றத்தையும் தாங்கிப் பிடிக்கும் தூண்கள் அவர்களே. அவர்களே தேசத்தின் உண்மையான நாயகர்கள். இந்தத் தினத்தின் முதன்மையான நோக்கம் உழைப்புக்குச் சரியான மரியாதை பெற்றுத் தருவதே ஆகும். ஒருவரின் உழைப்பைச் சுரண்டுவதும், அவர்களுக்கு உரிய அங்கீகாரம் தராமல் இருப்பதும் மிகப்பெரிய அநீதியாகும். சமூக நீதியை நிலைநாட்டவும், உழைக்கும் வர்க்கத்திற்குத் தேவையான பாதுகாப்பை உறுதி செய்யவும் நாம் அனைவரும் உறுதி எடுக்க வேண்டும். இன்றைய உலகிற்கு தொழிலாளர் தினம் சொல்லும் செய்தி மிகவும் எளிமையானது: "உழைப்பாளியை மதிக்கும் சமூகம் தான் உண்மையில் முன்னேறிய சமூகமாகும்." உழைப்பின் மதிப்பைக் குறைத்து மதிப்பிடுவதும், உழைப்பவர்களைத் தாழ்வாகக் கருதுவதும் நாகரிகமற்ற செயலாகும். மரியாதை இல்லாத உழைப்பு என்பது ஒரு சமூக அநீதியாகும்.
கிறிஸ்தவ விசுவாசத்தின் அடிப்படையில், இன்று நமது தாய் திருச்சபை தொழிலாளர்களின் பாதுகாவலராகப் புனித சூசையப்பரை நமக்கு முன்மாதிரியாகக் காட்டுகிறது. தச்சுத் தொழில் செய்து, தனது வியர்வையையும் உழைப்பையும் இறைவனுக்குக் காணிக்கையாக்கியவர் அவர். "உழைக்கும் தொழிலாளர்களின் தந்தை" என்று போற்றப்படும் அவர், உழைப்பு என்பது வெறும் பிழைப்புக்கான வழி மட்டுமல்ல, அது கடவுளுக்குச் செய்யும் ஒரு புனிதமான பணி என்பதை நமக்கு உணர்த்துகிறார். எனவே, நாமும் நமது பணிகளைப் புனித சூசையப்பரைப் போல அர்ப்பணிப்போடும் நேர்மையோடும் செய்ய இந்த நாளில் அருள் வேண்டுவோம்.நாம் அன்றாட வாழ்வில் சந்திக்கும் தொழிலாளர்களை அன்போடும் மரியாதையோடும் நடத்துவோம். அவர்களின் உழைப்புக்கு உரிய மதிப்பைக் கொடுப்போம். "உழைப்பை மதிப்போம் - உழைப்பாளரைப் பாதுகாப்போம்" என்ற முழக்கத்தோடு, தேசத்தின் பலமாக விளங்கும் அனைத்து உழைப்பாளர்களுக்கும் நமது நன்றிகளைத் தெரிவித்துக் கொள்வோம்.
இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்