டார்பூர் துயரம்: இருபது ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் சிதைக்கப்படும் குழந்தைப் பருவம்!
அபிசேக் ராஜா அலங்காரம் - வத்திக்கான்
உலகையே உலுக்கிய டார்பூர் (Darfur) நெருக்கடி ஏற்பட்டு இருபது ஆண்டுகள் கடந்துள்ள நிலையில், அப்பகுதிச் சிறுவர்கள் மீண்டும் கடுமையான வன்முறை மற்றும் இடப்பெயர்ச்சியால் பாதிக்கப்பட்டுள்ளனர் என்றும், அவர்களின் அடிப்படை உரிமைகள் பறிக்கப்பட்டு வருகின்றன என்றும் யுனிசெஃப் நிறுவனம் தெரிவித்துள்ளது.
டார்பூர்: 20 ஆண்டுகளுக்குப் பின் அச்சுறுத்தப்படும் குழந்தைப் பருவம்’ என்ற தலைப்பில் அண்மையில் வெளியிட்டுள்ள அறிக்கையொன்றில் இவ்வாறு கூறியுள்ள அந்நிறுவனம், சூடானின் உள்நாட்டுப் போர் எவ்வாறு பேரழிவை ஏற்படுத்தியுள்ளது என்பதைப் படம்பிடித்துக் காட்டுகிறது என்றும், பரவலான உயிரிழப்புகள், வாட்டும் பசி மற்றும் அத்தியாவசியச் சேவைகளின் முடக்கம் என அந்த மாநிலம் நிலைகுலைந்துள்ளதையும் இது சுட்டிக்காட்டியுள்ளது என்று அவ்வறிக்கை குறிப்பிட்டுள்ளது.
கடந்த 2005-ஆம் ஆண்டைக் காட்டிலும், தற்போதைய சூழலில் இந்த நெருக்கடி குறித்த உலகளாவிய விழிப்புணர்வும் கவனமும் பெருமளவு சரிந்துள்ளதாக யுனிசெப் நிறுவனம் கவலை தெரிவித்துள்ளது.
போர் தொடங்கியதிலிருந்து, குழந்தைகளுக்கு எதிரான 5,700-க்கும் மேற்பட்ட கடுமையான விதிமீறல்கள் உறுதி செய்யப்பட்டுள்ளன என்று குறிப்பிட்டுள்ள அதன் அறிக்கை, இதில் குறைந்தது 5,100 குழந்தைகள் பாதிக்கப்பட்டுள்ளனர் என்றும், 4,300-க்கும் அதிகமான குழந்தைகள் கொல்லப்பட்டுள்ளனர் அல்லது உடல் உறுப்புகளை இழந்துள்ளனர் என்றும் சுட்டிக்காட்டியுள்ளது.
இந்த ஆண்டின் தொடக்கத்தில் மட்டும், குறைந்தது 160 குழந்தைகள் கொல்லப்பட்டுள்ளனர் மற்றும் 85 பேர் காயமடைந்துள்ளனர் என்றும், அல் பாஷர் (Al Fasher) பகுதியில் ஏப்ரல் 2024 முதல் 1,500-க்கும் மேற்பட்ட விதி மீறல்கள் பதிவாகியுள்ள சூழலில் அங்கு நிலைமை மிகவும் மோசமாக உள்ளது என்றும் அவ்வறிக்கை குறிப்பிட்டுள்ளது.
டார்பூர் முழுவதும் குழந்தைகள் கல்வி, நலவாழ்வு மற்றும் பாதுகாப்பை இழந்து வருகின்றனர் என்றும், இலட்சக்கணக்கான மக்கள் இடம்பெயர்ந்துள்ளனர் என்றும் சுட்டிக்காட்டியுள்ள அதன் அறிக்கை, பலர் கிழக்கு சாட் (Chad) பகுதியில் உள்ள கட்ட நெரிசல் அதிகம் உள்ள பகுதிகளுக்குத் தப்பிச் செல்கின்றனர் என்றும், உள்கட்டமைப்பு மற்றும் வாழ்வாதாரங்கள் சீர்குலைந்து வருவதால் பசியும் நோயும் அதிகரித்து வருகின்றன என்றும் எடுத்துக்காட்டியுள்ளது.
தொடர்ந்து மனிதாபிமான முயற்சிகள் மேற்கொள்ளப்பட்ட போதிலும், சில பகுதிகளை அணுகுவதற்கான கட்டுப்பாடுகள், பாதுகாப்பற்ற சூழல் மற்றும் நிதிப் பற்றாக்குறை ஆகியவை உதவி வழங்குவதைக் கட்டுப்படுத்துகின்றன என்றும் அவ்வறிக்கை சுட்டிக்காட்டியுள்ளது.
குழந்தைகளின் பாதுகாப்பை உறுதிப்படுத்தவும், மனிதாபிமான உதவிகள் தடையின்றிச் சென்றடைவதை அனுமதிக்கவும் மோதலில் ஈடுபட்டுள்ள அனைத்துத் தரப்பினருக்கும் யுனிசெஃப் நிறுவனம் அவசர வேண்டுகோள் விடுத்துள்ளது.
தொடர்ந்து நிகழும் இந்தப் பேரவலத்தைத் தடுத்து நிறுத்தவும், தொடர்ச்சியான வாழ்வாதார உதவிகளை வழங்கவும் முன்வருமாறு அனைத்துலக நன்கொடையாளர்களை அவ்வமைப்பு கேட்டுக்கொண்டுள்ளது.
இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்