தேடுதல்

துயரத்தின் பிடியில் மத்திய கிழக்கு குழந்தைகள் துயரத்தின் பிடியில் மத்திய கிழக்கு குழந்தைகள்  

மத்திய கிழக்கு மோதலில் 340-க்கும் மேற்பட்ட குழந்தைகள் உயிரிழப்பு!

ஈரான், லெபனோன் மற்றும் பிற பாதிக்கப்பட்ட பகுதிகளில் நடமாடும் மருத்துவக் குழுக்கள், தடுப்பூசிகள் மற்றும் உளவியல் சமூக ஆதரவு உள்ளிட்ட அவசர கால உதவிகளை வழங்கி வருவதாக தனது அறிக்கையில் சுட்டிக்காட்டியுள்ளது யுனிசெஃப் நிறுவனம்.

ஜான்சிராணி அருளாந்து - வத்திக்கான்

மத்திய கிழக்கில் தீவிரமடைந்து வரும் மோதல்கள் தொடங்கி ஒரு மாதத்திற்கும் மேலாகியுள்ள நிலையில், அந்தப் பகுதி முழுவதும் 340-க்கும் மேற்பட்ட குழந்தைகள் கொல்லப்பட்டுள்ளதாகவும், ஆயிரக்கணக்கானோர் காயமடைந்துள்ளதாகவும் யுனிசெஃப் நிறுவனம் கவலை தெரிவித்துள்ளது.

மார்ச் 31, செவ்வாயன்று, வெளியிட்டுள்ள அறிக்கையொன்றில் இந்தத் தகவலை வழங்கியுள்ள அந்நிறுவனம், குண்டுவீச்சுகள் மற்றும் கட்டாய வெளியேற்றங்களால் 12 இலட்சத்திற்கும் அதிகமான குழந்தைகள் புலம்பெயர்ந்தோர்களாகத் தஞ்சம் புகுந்துள்ளனர் என்று கூறியுள்ளது.

இவ்வாறு தஞ்சம் புகுந்துள்ளவர்களில் பெருபாலானோர் மன உளைச்சலுக்கு ஆளாக்கியுள்ளதுடன், அவர்களின் கல்வி, நலவாழ்வு  மற்றும் பாதுகாப்பு ஆகியவற்றைப் பெருமளவில் கேள்விக்குறியாக்கியுள்ளது என்றும் அதன் அறிக்கை சுட்டிக்காட்டியுள்ளது.

இது பற்றி கருத்து தெரிவித்துள்ள யுனிசெஃப் நிறுவனத்தின் நிர்வாக இயக்குநரான கேத்தரின் மேரி ரஸ்ஸல் அவர்கள், "இந்தப் பகுதியில் உள்ள குழந்தைகள் பயங்கரமான வன்முறைகளை எதிர்கொண்டு வருகின்ற அதேவேளையில், அவர்களைப் பாதுகாக்க வேண்டிய அமைப்புகளே தாக்குதலுக்கு உள்ளாகின்றன" என்றும் "பொதுமக்களைப் பாதுகாக்கவும், குழந்தைகளின் உரிமைகளை நிலைநாட்டவும் உடனடி நடவடிக்கை தேவை" என்றும் வலியுறுத்தியுள்ளார்.

ஈரான், லெபனோன் மற்றும் பிற பாதிக்கப்பட்ட பகுதிகளில் நடமாடும் மருத்துவக் குழுக்கள், தடுப்பூசிகள் மற்றும் உளவியல் சமூக ஆதரவு உள்ளிட்ட அவசர கால உதவிகளை வழங்கி வருவதாக அதன் அறிக்கை சுட்டிக்காட்டியுள்ளது. 

மேலும் உலகளாவிய விநியோகத் தடைகளைச் சீர்செய்து, தேவையில் இருக்கும் குழந்தைகளுக்கு அத்தியாவசிய உதவிகள் சென்றடைவதை உறுதி செய்து வருகிறது என்று அதன் அறிக்கை தெரிவித்துள்ளது.

அனைத்துலக மனிதநேயச் சட்டத்தின்படி, பொதுமக்களும் அவர்களுக்கான உள்கட்டமைப்புகளும் எப்போதும் பாதுகாக்கப்பட வேண்டும் என்பதை வலியுறுத்தியுள்ள  அவ்வறிக்கை, பகைமை உணர்வுகளையும் மோதல்களையும் உடனடியாக நிறுத்துமாறு தொடர்ந்து அழைப்பு விடுத்துள்ளது.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

01 ஏப்ரல் 2026, 14:15