தேடுதல்

சிகிச்சை பெறும் குழந்தைகள் சிகிச்சை பெறும் குழந்தைகள்   (ANSA)

183 இலட்சம் குழந்தைகளுக்குப் புதுவாழ்வு அளித்த BCU திட்டம்

தடுப்பூசி போடத் தவறிய குழந்தைகளைக் கண்டறிவது முதல் அவர்களுக்குத் தடுப்பூசி போட்டு கண்காணிப்பது வரை அனைத்தையும் மேம்படுத்தியதன் மூலம், நலவாழ்வுத் துறையின் செயல்பாடுகளை BCU திட்டம் வலுப்படுத்தியுள்ளது.

ஜான்சிராணி அருளாந்து - வத்திக்கான்

உலக நலவாழ்வு நிறுவனம் (WHO), யுனிசெஃப் (UNICEF) மற்றும் கவி (Gavi) எனப்படும் அமைப்பு ஆகியவற்றின் தலைமையிலான Big Catch-Up (BCU ) திட்டம், 36 நாடுகளில் 1 முதல் 5 வயதுக்குட்பட்ட 183 இலட்சம் குழந்தைகளைச் சென்றடைந்துள்ளதுடன், 100 மில்லியனுக்கும் அதிகமான தடுப்பூசி அளவுகளை வழங்கியுள்ளது.

கோவிட்-19 பெருந்தொற்றினால் ஏற்பட்ட நோய் எதிர்ப்புச் சக்தி இழப்புகளை மீட்டெடுப்பதற்காகத் தொடங்கப்பட்ட இந்த முயற்சி, குறிப்பாக Zero-dose குழந்தைகள், அதாவது இதுவரை ஒருமுறை கூட தடுப்பூசி பெறாத குழந்தைகளை மையமாகக் கொண்டு செயல்படுத்தப்பட்டது.

2023 மற்றும் 2025-ஆம் ஆண்டுகளுக்கு இடையில், இதுவரை தடுப்பூசியே பெறாத  ஒரு கோடியே இருபத்தி மூன்று இலட்சம் குழந்தைகள் இத்திட்டத்தின் மூலம் பயனடைந்துள்ளனர். அதேவேளை 150 இலட்சம்குழந்தைகள் தட்டம்மை தடுப்பூசிகளைப் பெற்றுக்கொண்டனர்.

மேலும், போலியோ ஒழிப்பு முயற்சிகளுக்கு ஆதரவாக இரண்டு கோடியே முப்பது லட்சம் போலியோ தடுப்பூசி அளவுகள் வழங்கப்பட்டன. தற்போது இறுதி கட்டத்தை எட்டியுள்ள இந்த முயற்சி, குறைந்தது இரண்டு கோடியே பத்து இலட்சம் குழந்தைகளைச் சென்றடைய வேண்டும் என்ற தனது இலக்கை அடையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

தற்போது ஏற்பட்டுள்ள முன்னேற்றங்களுக்கு மத்தியிலும், வழக்கமான நோய்த்தடுப்பு முறையே மிகவும் நிலையான தீர்வாகும் என்று உலகளாவிய அமைப்புகள் வலியுறுத்துகின்றன. தடுப்பூசி போடப்படாத குழந்தைகளில் பெரும்பாலானோர், நலவாழ்வு வசதிகள் குறைவாக உள்ள பலவீனமான மற்றும் போர்ச் சூழல் நிலவும் பகுதிகளில் வசிக்கின்றனர். இத்திட்டத்தில் பங்கேற்றுள்ள 36 நாடுகள் மட்டுமே, உலகளவில் தடுப்பூசி போடப்படாத குழந்தைகளில் ஏறத்தாழ 60 விழுக்காட்டை கொண்டுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.

தடுப்பூசி போடத் தவறிய குழந்தைகளைக் கண்டறிவது முதல் அவர்களுக்குத் தடுப்பூசி போட்டு கண்காணிப்பது வரை அனைத்தையும் மேம்படுத்தியதன் மூலம், நலவாழ்வுத்  துறையின் செயல்பாடுகளை BCU திட்டம் வலுப்படுத்தியுள்ளது. குறிப்பாக, இதற்கு முன்பு கவனிக்கப்படாமல் விடுபட்டுப்போன 1 முதல் 5 வயதுக்குட்பட்ட குழந்தைகளையும் இத்திட்டம் முறையாகச் சென்றடைந்துள்ளது.

யுனிசெஃப்  நிறுவனம் 

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

24 ஏப்ரல் 2026, 11:52