புர்கினா பாசோவில் நிலவும் மோதல் மற்றும் அமைதியின்மையால் மக்களின் இடம்பெயர்வு புர்கினா பாசோவில் நிலவும் மோதல் மற்றும் அமைதியின்மையால் மக்களின் இடம்பெயர்வு   (AFP or licensors)

மத்திய சாஹெல் பகுதியில் 75 இலட்சம் குழந்தைகளின் அவலநிலை

மாலியில் அண்மையில் நிகழ்ந்த வன்முறைகள் அப்பகுதியின் பாதுகாப்பற்ற நிலையை உறுதிப்படுத்தியுள்ளன. நைஜர், புர்கினா பாசோ மற்றும் மாலி ஆகிய நாடுகளில் 36 இலட்சத்திற்கும் அதிகமான மக்கள் இடம்பெயர்ந்துள்ளனர்.

அபிசேக் ராஜா அலங்காரம் -‌ வத்திக்கான்

ஆப்பிரிக்காவின் மத்திய சாஹெல் பகுதியில் உள்ள குழந்தைகளிடையே பரவலாக மீள்திறன் அறிகுறிகள் காணப்பட்டாலும், அண்மையில் மேற்கொள்ளப்பட்ட பதினான்கு நாட்கள் ஆய்விற்குப் பிறகு, அங்குள்ள மனிதாபிமானச் சூழல் மிகுந்த கவலை அளிக்கக் கூடியதாகவே உள்ளது.

தொடர்ச்சியான பாதுகாப்பின்மை, காலநிலை மாற்ற அதிர்ச்சிகள் மற்றும் சமூக பொருளாதார நெருக்கடிகள் ஆகியவை‌ தொடர்ந்து இலட்சக்கணக்கான மக்களை, குறிப்பாகக் குழந்தைகளை பாதித்து வருகின்றன.

மாலியில் அண்மையில் நிகழ்ந்த வன்முறைச் சம்பவங்கள் அந்த நாட்டின் பாதுகாப்பற்ற நிலையை வெளிச்சம்போட்டுக் காட்டுகின்றன. இப்பகுதி முழுவதும் ஏறத்தாழ 75 இலட்சம் குழந்தைகள் அவசர உதவியை எதிர்நோக்கியுள்ளனர்; மேலும் நைஜர், புர்கினா பாசோ மற்றும் மாலி ஆகிய நாடுகளில் இருந்து 36 இலட்சத்திற்கும் அதிகமான மக்கள் தங்கள் இருப்பிடங்களை விட்டு இடம்பெயர்ந்துள்ளனர்.

இத்தகைய இன்னல்களுக்கு மத்தியிலும் சமூகங்கள் மீண்டெழுந்து வருவதும், சந்தைகள் மீண்டும் திறக்கப்படுவதும் மேலும் அரசுகள் குழந்தைகளின் நலனுக்கு முன்னுரிமை அளித்து வருவதும் நம்பிக்கையான சூழல் தொடர்ந்து நீடிப்பதை உணர்த்துகின்றன.

கொலை, கடத்தல் என குழந்தைகளுக்கு எதிரான 1,500-க்கும் மேற்பட்ட கொடூரமான குற்றங்கள் பதிவாகியுள்ளன. 2025-ஆம் ஆண்டில் ஏறத்தாழ 8,400 பள்ளிகள் மூடப்பட்டுள்ளதால், கல்வி மற்றும் அடிப்படை நலவாழ்வு வசதிகள் இன்றி குழந்தைகளின் எதிர்காலம் பெரும் அச்சுறுத்தலுக்கு உள்ளாகியுள்ளது.

சவால்களுக்கு மத்தியிலும் யுனிசெஃப் நிறுவனம் மற்றும் உள்ளூர் சமூகங்கள் இணைந்து செயல்பட்டு வருகின்றன. சாஹேல் குழந்தைகளின் துணிச்சலை ஒரு பலவீனமாகப் பார்க்காமல், அவர்களுக்குத் தேவையான அவசர உதவிகளை வழங்க வேண்டியது உலக நாடுகளின் கடமையாகும். அவர்களைக் கைவிடுவது என்பது மனிதநேயத்திற்கு இழைக்கப்படும் துரோகம் என்பதே இங்கு வலியுறுத்தப்படுகிறது.

யுனிசெஃப் நிறுவனம் 

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

28 ஏப்ரல் 2026, 13:46