ஆப்கானிஸ்தானில் பெண்களின் நிலை ஆப்கானிஸ்தானில் பெண்களின் நிலை   (AFP or licensors)

ஆப்கானிஸ்தானில் முடக்கப்படும் பெண் கல்வி மற்றும் வேலைவாய்ப்பு!

ஆப்கானிஸ்தானில் பெண்கள் மீதான கல்வி மற்றும் வேலைவாய்ப்புக் கட்டுப்பாடுகளால் அந்த நாடு எதிர்கொள்ளவிருக்கும் மோசமான சமூக-பொருளாதார விளைவுகள் குறித்து யுனிசெஃப் தனது அறிக்கையில் கவலை தெரிவித்துள்ளது.

அபிசேக் ராஜா அலங்காரம் -‌ வத்திக்கான்

ஆப்கானிஸ்தானில் பெண் கல்வி மற்றும் பெண்களின் வேலைவாய்ப்பு மீதான தொடர்ச்சியான கட்டுப்பாடுகள் காரணமாக, 2030-ஆம் ஆண்டிற்குள் ஏறத்தாழ 20,000 பெண் ஆசிரியர்களையும் 5,400 நலவாழ்வுப் பணியாளர்களையும் அந்த நாடு இழக்க நேரிடும் என்று யுனிசெஃப் நிறுவனம் கவலை தெரிவித்துள்ளது.

ஆப்கானிஸ்தானில் பெண் கல்வி மற்றும் பெண்களின் உழைப்புப் பங்கேற்பு இல்லாமையால் ஏற்படும் விளைவுகள் என்ற தலைப்பில், அண்மையில் வெளியிட்டுள்ள அறிக்கையொன்றில் இவ்வாறு கூறியுள்ள அந்நிறுவனம், 2023 ம் ஆண்டு பொது நிர்வாகத்தில் 21 விழுக்காடாக இருந்த பெண்களின் பங்கேற்பு 2025 ஆம் ஆண்டு 17.7 விழுக்காடாக குறைந்துள்ளதை சுட்டிக்காட்டியுள்ளது.

மேலும் இந்தக் கட்டுப்பாடுகளால் அந்த நாடு ஆண்டுதோறும் 84 மில்லியன் அமெரிக்க டாலர் பொருளாதார இழப்பைச் சந்தித்து வருகிறது என்று குறிப்பிட்டுள்ள அதன் அறிக்கை, குழந்தைகள் மீதான தீவிரமான பாதிப்புகளையும் சுட்டிக்காட்டியுள்ளது.

பெண் செவிலியர்கள் மற்றும் மருத்துவர்களின் தட்டுப்பாடு பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கான சிகிச்சை முறைகளை முடக்கிவிடும் என்றும், குறிப்பாக, கலாச்சார நடைமுறைகளால் பெண்கள் ஆண் மருத்துவர்களிடம் சிகிச்சை பெறுவதில் சிக்கல் உள்ள சூழலில், இத்தகைய தடைகள் தாய்-சேய் ஆரோக்கியத்திற்குப் பெரும் அச்சுறுத்தலாக அமையும் என்றும் அதன் அறிக்கை கவலை தெரிவித்துள்ளது.

செப்டம்பர் 2021 முதல் பெண் குழந்தைகளுக்கு உயர்நிலைக் கல்வி தடை செய்யப்பட்டதிலிருந்து, 10 இலட்சம் சிறுமிகள் கல்வி கற்கும் வாய்ப்பை இழந்துள்ளனர் என்று சுட்டிக்காட்டியுள்ள அதன் அறிக்கை, இந்தத் தடை 2030 வரை நீடித்தால், 20 இலட்சத்திற்கும் அதிகமான பெண் குழந்தைகள் பாதிக்கப்பட வாய்ப்புள்ளது என்றும் தெரிவித்துள்ளது.

யுனிசெஃப் தொடர்ந்து பல இலட்சம் குழந்தைகளுக்குக் கல்வி ஆதரவை வழங்கி வந்தாலும் ஏற்கனவே பெண் ஆசிரியர்களின் எண்ணிக்கை 9 விழுக்காட்டிற்கும் மேலாகக் குறைந்துள்ளதால் இந்த விவகாரத்தில் உடனடி நடவடிக்கை தேவை என்று அந்நிறுவனம் எச்சரித்துள்ளது. ஆப்கானிஸ்தானின் எதிர்கால வளர்ச்சி மற்றும் நலனைப் பாதுகாக்க, பெண் கல்விக்கான தடையை நீக்கவும், அனைவரையும் உள்ளடக்கிய கற்றல் முறையில் முதலீடு செய்யவும் அந்த அமைப்பு அழைப்பு விடுத்துள்ளது.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

29 ஏப்ரல் 2026, 12:59