தண்ணீரைக் காக்கப் போராட்டம் தண்ணீரைக் காக்கப் போராட்டம்  

பெண் குழந்தைகளின் கல்வி மற்றும் பாதுகாப்பை வலியுறுத்தும் யுனிசெஃப்

"180 கோடி மக்கள் தங்களது வீடுகளில் பாதுகாப்பான குடிநீர் வசதி கிடைக்காமல் இருக்கின்றனர் என்றும், பாதுகாப்பான நீர் மற்றும் நலவாழ்வு வசதி என்பது உயிர்வாழ்வதற்கு மட்டுமல்லாமல், பாலின சமத்துவத்தை மேம்படுத்துவதற்கும் மிக முக்கியமானது" என்றும் வலியுறுத்தியுள்ளது யுனிசெஃப் நிறுவனம்.

அபிசேக் ராஜா அலங்காரம் -‌ வத்திக்கான்

தூய்மையான நீர் மற்றும் நலவாழ்வு வசதிகள் இல்லாத காரணத்தால் ஐந்து வயதிற்குட்பட்ட ஏறத்தாழ 1,000 குழந்தைகள் உயிரிழக்கும் அவலநிலை தொடர்வதாக கவலை தெரிவித்துள்ளது யுனிசெஃப் நிறுவனம்.

மார்ச் 22, ஞாயிறன்று, 'எங்குத் தண்ணீர் தடையின்றி கிடைக்கிறதோ, அங்குச் சமத்துவம் வளரும்' என்ற கருப்பொருளோடு கொண்டாடப்பட்ட உலகத் தண்ணீர் தினத்தை முன்னிட்டு வெளியிட்டுள்ள அறிக்கையொன்றில் இவ்வாறு தெரிவித்துள்ளது யுனிசெஃப் நிறுவனம்.

"180 கோடி மக்கள் தங்களது வீடுகளில் பாதுகாப்பான குடிநீர் வசதி கிடைக்காமல் இருக்கின்றனர் என்றும், பாதுகாப்பான நீர் மற்றும் நலவாழ்வு வசதி என்பது உயிர்வாழ்வதற்கு மட்டுமல்லாமல், பாலின சமத்துவத்தை மேம்படுத்துவதற்கும் மிக முக்கியமானது" என்றும் வலியுறுத்தியுள்ளது அந்நிறுவனம்.

மேலும் "மூன்றில் இரண்டு குடும்பங்களில் பெண்களே தண்ணீர் சேகரிக்கிறார்கள்" என்றும், இந்தப் பணிக்காக அவர்கள் நாளொன்றுக்கு ஏறத்தாழ  25 கோடி மணிநேரத்தைச் செலவிடுகிறார்கள்" என்றும் குறிப்பிட்டுள்ள அதன் அறிக்கை, 10 முதல் 19 வயதுக்குட்பட்ட 15.6 கோடி சிறுமிகளுக்கு இன்னும் அடிப்படை நலவாழ்வு சேவைகள் கிடைக்காத நிலையில் அவர்களின் நலவாழ்வு, மாண்பு மற்றும் கல்வியில் ஏற்படும் கடுமையான பாதிப்புகளையும் சுட்டிக்காட்டியுள்ளது.

இது பற்றி கருத்து தெரிவித்துள்ள யுனிசெஃப் நிறுவனத்தின் நிர்வாக இயக்குநரான கேத்தரின் மேரி ரஸ்ஸல் அவர்கள், "உலகளாவியத் தண்ணீர் நெருக்கடி என்பது வெறும் சுற்றுச்சூழல் பிரச்சனை மட்டுமல்ல, இது சமூக நீதி சார்ந்த பிரச்சனை" என்றும், "தூய்மையான நீர் மற்றும் நலவாழ்வு வசதி கிடைப்பது என்பது சிறுமிகள் தங்கள் கல்வியைத் தொடரவும், நலமுடன் வாழவும், அவர்களின் வாழ்க்கைத் தரத்தை மேம்படுத்தவும் வழிவகுக்கிறது" என்றும் தெரிவித்துள்ளார்.

மேலும் "தொடர்ந்து காலநிலை மாற்றத்தைத் தாங்கக்கூடிய தீர்வுகளை வழங்கவும், நீர் மேலாண்மையில் பெண் தலைமையை ஊக்குவிக்கவும் அரசுகள் மற்றும் ஒரே எண்ணம் கொண்ட பிற நிறுவனங்களுடன் இணைந்து யுனிசெஃப் நிறுவனம் செயல்பட்டு வருகிறது" என்றும் கூறியுள்ளார் ரஸ்ஸல்.

அதேவேளையில், "கடந்த 2025-ஆம் ஆண்டில் 89 இலட்சம் பெண்கள் மற்றும் சிறுமிகளுக்கு மாதவிடாய் காலத்தில் உடல் நலத்தைப் பேணுவதற்கு உதவியதன் மூலம் அவர்களின் கல்வி மற்றும் மாண்பை மேம்படுத்தியுள்ளது" என்றும்  குறிப்பிட்டுள்ளார் ரஸ்ஸல்

இறுதியாக, "உலகளாவியத் தண்ணீர் நெருக்கடிக்குத் தீர்வு உண்டு, ஆனால் நாம் குழந்தைகளுக்காகவும், குறிப்பாக, பெண் குழந்தைகளுக்காகவும் அந்தத் தீர்வை முன்னெடுக்கும்போது மட்டுமே அது முழுமையடையும்" என்றும் குறிப்பிட்டுள்ளார் ரஸ்ஸல்

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

24 மார்ச் 2026, 13:04