காசா குழந்தைகள் காசா குழந்தைகள்  

மத்திய கிழக்கு போரில் அதிகளவில் குழந்தைகள் பாதிப்பு!

ஏறத்தாழ 4.48 கோடி குழந்தைகள் ஏற்கனவே அதிக மோதல் நிலவும் பகுதிகளில் வசித்து வரும்‌ நிலையில் தற்போது, லெபனோனில் 350-க்கும் மேற்பட்ட பள்ளிகள் தங்குமிடங்களாக மாற்றப்பட்டுள்ளன என்று குறிப்பிட்டுள்ள யுனிசெஃப் நிறுவனத்தின் அறிக்கை.

அபிசேக் ராஜா அலங்காரம் -‌ வத்திக்கான்

மத்திய கிழக்கில் இடம்பெற்று வரும் போரில் கடந்த 23 நாட்களில் 2,100-க்கும் மேற்பட்ட குழந்தைகள் கொல்லப்பட்டுள்ளன அல்லது காயமடைந்துள்ள நிலையில், அங்கு அதிகரித்து வரும் மனிதாபிமான நெருக்கடி குறித்து பெரும் கவலை தெரிவித்துள்ளது யுனிசெஃப் நிறுவனம்.

மார்ச் 23, திங்களன்று, வெளியிட்டுள்ள அறிக்கையொன்றில் இவ்வாறு கவலை தெரிவித்துள்ள அந்நிறுவனம், மோதல் தொடங்கியதில் இருந்து ஒவ்வொரு நாளும் சராசரியாக 87 குழந்தைகள் பாதிக்கப்படுகின்றனர் என்றும் ஈரான், லெபனோன், இஸ்ரேல் மற்றும் குவைத் உள்ளிட்ட நாடுகளில் உயிரிழப்புகள் ஏற்பட்டுள்ள சூழலில் மிகக் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ள நாடாக லெபனோன் விளங்குகிறது என்றும் தெரிவித்துள்ளது.

ஏறத்தாழ 4.48 கோடி குழந்தைகள் ஏற்கனவே அதிக மோதல் நிலவும் பகுதிகளில் வசித்து வரும்‌ நிலையில் தற்போது, லெபனோனில் 350-க்கும் மேற்பட்ட பள்ளிகள் தங்குமிடங்களாக மாற்றப்பட்டுள்ளன என்று குறிப்பிட்டுள்ள அதன் அறிக்கை, இதன் காரணமாக, ஏறத்தாழ ஒரு இலட்சம் மாணவர்கள் இடம்பெயரும் சூழலுக்கு தள்ளப்பட்டுள்ளனர் என்றும் கூறியுள்ளது.

இந்தப் பேரழிவைத் தடுக்க அனைத்து உலக நாடுகளும் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அழைப்பு விடுத்துள்ள யுனிசெஃப் நிறுவனத்தின் துணை நிர்வாக இயக்குனர் டெட் சைபன் அவர்கள், "இம்மோதலால் நீர் மற்றும் நலவாழ்வு அமைப்புகள் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், லெபனோனில் பொதுச் சேவைகள் முடங்கும் ஆபத்து உள்ளது" என்று கூறியுள்ளார்.

"இனியும் மோதல் நீடித்தால் இன்னும் பல இலட்சக்கணக்கான குழந்தைகள் பாதிக்கப்படுவர்" என்று தனது வேதனையை வெளிப்படுத்தியுள்ள சைபன் அவர்கள், "அதிகரித்து வரும் இந்த நெருக்கடியைச் சமாளிக்க 2,793 கோடியே 50 இலட்சம் ரூபாய் அளவிற்கு உடனடி நிதியுதவிக்கான கோரிக்கையை விடுத்துள்ளது" என்றும் குறிப்பிட்டுள்ளார்.

மேலும் இடம்பெயர்ந்த குடும்பங்களுக்கு உணவு, நீர் மற்றும் கல்வி வழங்குவதில் யுனிசெஃப் தொடர்ந்து கவனம் செலுத்தி வருகிறது" என்றும், இருப்பினும், கிடைக்கக்கூடிய உதவிகளை விட மக்களின்  அடிப்படைத் தேவைகள் மிக அதிகமாக உள்ளன என்றும் கூறியுள்ளார் சைபன்.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

26 மார்ச் 2026, 13:36