தேடுதல்

ஆப்கானிஸ்தான் - பஸ்கிஸ்தான் எல்லைப் பிரச்னையால் பாதிப்பு ஆப்கானிஸ்தான் - பஸ்கிஸ்தான் எல்லைப் பிரச்னையால் பாதிப்பு   (AFP or licensors)

குழந்தைகள் உயிரிழப்பு குறித்து யுனிசெஃப் கவலை!

தொடர்ந்து அனைத்துத் தரப்பினரையும் நிதானத்தைக் கடைப்பிடிக்குமாறும், அனைத்துலக மனிதாபிமான மற்றும் மனித உரிமைகள் சட்டங்களை மதித்து நடக்குமாறும் வலியுறுத்தியுள்ள யுனிசெஃப் நிறுவனம், 'குழந்தைகள் எல்லா நேரங்களிலும் பாதுகாக்கப்பட வேண்டும்' என்பதையும் உறுதிப்படத் தெரிவித்துள்ளது.

ஜான்சிராணி அருளாந்து - வத்திக்கான்

தெற்காசியாவில் அமைந்துள்ள ஆப்கானிஸ்தான்-பாகிஸ்தான் எல்லைப் பகுதியில் போர் தீவிரமடைந்து வரும் நிலையில், குழந்தைகள் உயிரிழப்பு குறித்த தனது ஆழ்ந்த கவலையை தெரிவித்துள்ளது யுனிசெஃப் நிறுவனம்.

மார்ச் 2, திங்களன்று, வெளியிட்டுள்ள அறிக்கையொன்றில் இவ்வாறு கவலை தெரிவித்துள்ள அந்நிறுவனம், கடந்த ஆண்டு கிழக்கு ஆப்கானிஸ்தானில் ஏற்பட்ட நிலநடுக்கத்தில் உயிர் பிழைத்த குடும்பங்கள், இப்போது எல்லைக்கு அருகிலுள்ள புலம்பெயர்ந்தோர் முகாம்களில் இருந்து வெளியேற வேண்டிய கட்டாயத்திற்குத் தள்ளப்பட்டுள்ளனர் என்றும், இதனால் பல குழந்தைகள் உட்பட 17,000 பேர் இடம்பெயர்ந்துள்ளனர் என்றும் கூறியுள்ளது.

இதுகுறித்து கருத்துத் தெரிவித்துள்ள தெற்காசியாவிற்கான யுனிசெஃப் நிறுவனத்தின் மாநில இயக்குனர் சஞ்சய் விஜேசேகரா அவர்கள், வன்முறையில் பல குழந்தைகள் கொல்லப்பட்டதையும் அல்லது காயமடைந்ததையும் உறுதிப்படுத்தியுள்ளார்.

இந்நிலையில், ஆப்கானிஸ்தானுக்கான ஐக்கிய நாடுகளின் உதவித் திட்ட அமைப்பான யுனாமா (UNAMA) மற்றும் இதர முகமைகளுடன் இணைந்து இந்த அறிக்கைகளை உறுதிப்படுத்தும் முயற்சிகள் நடைபெற்று வருகின்றன. இருப்பினும், இதில் குழந்தைகளே பெருமளவில் பாதிக்கப்படுகின்றனர் என்பது தெளிவாகத் தெரிய வந்துள்ளது.

மேலும், இந்த முகாம்கள் தங்குமிடம், மருத்துவம், தூய்மையான நீர் மற்றும் கல்வி போன்ற முக்கியமான சேவைகளை வழங்கி வருகின்றன. ஆனால், தற்போது மீண்டும் தொடங்கியுள்ள இந்த மோதல் அவர்களின் துயரத்தை மேலும் மோசமாக்கியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

பாகிஸ்தானின் வடமேற்கு பகுதியில் அமைந்துள்ள கைபர் பக்துன்வா மாநிலத்தில் அதிகரித்து வரும் பதற்றங்கள் காரணமாக 138 பள்ளிகள் மூடப்பட்டுள்ள நிலையில், இது கல்வியை சீர்குலைத்துள்ளதுடன், தடுப்பூசி செலுத்தும் பணிகளையும் தாமதப்படுத்தியுள்ளது என்றும், நோய்த்தொற்று, ஊட்டச்சத்துக் குறைபாடு மற்றும் வன்முறை போன்ற ஆபத்துகள் தொடர்ந்து அதிக அளவிலேயே நீடிக்கின்றன என்றும் அதன் அறிக்கை எடுத்துக்காட்டியுள்ளது.

தொடர்ந்து அனைத்துத் தரப்பினரையும் நிதானத்தைக் கடைப்பிடிக்குமாறும், அனைத்துலக மனிதாபிமான மற்றும் மனித உரிமைகள் சட்டங்களை மதித்து நடக்குமாறும் வலியுறுத்தியுள்ள யுனிசெஃப் நிறுவனம்,  'குழந்தைகள் எல்லா நேரங்களிலும் பாதுகாக்கப்பட வேண்டும்' என்பதையும் உறுதிப்படத் தெரிவித்துள்ளது.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

05 மார்ச் 2026, 13:16