தேடுதல்

லெபனோன் குழந்தைகள் லெபனோன் குழந்தைகள்  

லெபனோன் குழந்தைகளின் பாதுகாப்பை உறுதி செய்யுங்கள்!

லெபனோனில் வன்முறை அதிகரித்து வரும் சூழலில் குழந்தைகள் கண்டிப்பாகப் பாதுகாக்கப்பட வேண்டும் என்றும், அதிகரிக்கும் பதற்றமான சூழ்நிலையை தணிக்கப்பட வேண்டும் என்றும் அறிக்கையொன்றில் வேண்டுகோள் விடுத்துள்ளது யுனிசெஃப் நிறுவனம்.

அபிசேக் ராஜா அலங்காரம் -‌ வத்திக்கான்

"லெபனோன் நாடு முழுவதும் தொடர்ந்து இடம்பெற்று வரும் தாக்குதல்கள் காரணமாக, ஆயிரக்கணக்கான குடும்பங்கள் தங்களின் குழந்தைகளுடன் பாதுகாப்பான இடத்தைத் தேடித் தங்கள் வீடுகளை விட்டு வெளியேற வேண்டிய கட்டாயத்திற்குத் தள்ளப்பட்டுள்ளனர்" என்றும், "இதனால் அங்கு மனிதாபிமானச் சூழல் தொடர்ந்து மோசமடைந்து வருகிறது" என்றும் யுனிசெஃப் நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கையொன்றில் தெரிவித்துள்ளது.

பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு நலவாழ்வு பராமரிப்பு, உளவியல் ரீதியான ஆதரவு, பாதுகாப்பான குடிநீர் மற்றும் அவசர உதவி உள்ளிட்ட அடிப்படை சேவைகளை வழங்கி வரும் யுனிசெஃப் நிறுவனம், இடம்பெயர்ந்தவர்களில் பலர் தற்காலிக முகாம்களில் தஞ்சமடைந்துள்ளதாகவும், ஏற்கனவே மக்களின் நெரிசல் அதிகமுள்ள இந்த முகாம்களில் தற்போது அடிப்படைத் தேவைகளை பூர்த்தி செய்ய இயலாத நிலை ஏற்பட்டுள்ளதாகவும் சுட்டிக்காட்டியுள்ளது.

மேலும் தாமதங்களால் ஏற்படும் இழப்பை லெபனோனில் உள்ள குழந்தைகளால் இனியும் தாங்க முடியாது என்பதையும், உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டியது மிகவும் அவசியம் என்பதையும் அதன் அறிக்கையில் சுட்டிக்காட்டியுள்ளது.

வன்முறை அதிகரித்து வரும் சூழலில் குழந்தைகள் கண்டிப்பாகப் பாதுகாக்கப்பட வேண்டும் என்றும், அதிகரிக்கும் பதற்றமான சூழ்நிலையை தணிக்கப்பட வேண்டும் என்றும் வலியுறுத்தும் அதன் அறிக்கை,  மேலும் பாதிப்புகள் ஏற்படாமல் தடுக்கவும் துரிதமான முயற்சிகளை மேற்கொள்ளவும் அழைப்பு விடுத்துள்ளது.

மேலும் உலகளாவிய ஏற்றத்தாழ்வுகளின் தீவிரத் தன்மையை எடுத்துக்காட்டியுள்ளதுடன், வலுவற்ற மற்றும் போர்ச் சூழலால் பாதிக்கப்பட்ட நாடுகளில் உள்ள குழந்தைகள் ஐந்து வயதுக்கு முன்பே இறப்பதற்கான வாய்ப்பு வளர்ந்த நாடுகளில் ஒப்பிடும்போது மூன்று மடங்கு அதிகமாக உள்ளது என்று கவலை தெரிவித்துள்ளது அவ்வறிக்கை.

குறிப்பாக, குழந்தைகளின் உயிர்வாழ்விற்காக செய்யப்படும் முதலீடுகள் குறிப்பிடத்தக்க சமூக மற்றும் பொருளாதார நன்மைகளைத் தருகின்றன என்பதற்கான போதிய ஆதாரங்கள் இருந்தபோதிலும், பன்னாட்டு நிதி உதவி குறைந்து வருவதால் இன்றியமையாத தாய்-சேய் நலத் திட்டங்களை செயல்படுத்துவதில் பெரும் நெருக்கடி  ஏற்பட்டுள்ளதையும் அதன் அறிக்கை சுட்டிக்காட்டியுள்ளது.

மோதல் தொடர்ந்து நீடித்து வருவதால், அனைத்து உலக நாடுகளும் தாமதமின்றி செயல்பட்டு ஆயிரக்கணக்கான அப்பாவி உயிர்களைப் பாதிக்கும் இந்தத் தீவிரமான நெருக்கடியைத் தவிர்க்க வேண்டும் என்று உலகெங்கிலும் உள்ள மனிதநேய அமைப்புகள் தொடர்ந்து வலியுறுத்தி வருவதையும் அவ்வறிக்கை எடுத்துரைத்துள்ளது.

சஹாரா பாலைவனத்தின் தெற்குப் பகுதியில் உள்ள ஆப்பிரிக்க நாடுகளில் 58 விழுக்காடு குழந்தை இறப்புகள் பதிவாகியுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

20 மார்ச் 2026, 13:57