ஈரானிலிருந்து ஆப்கான் குழந்தைகள் திரும்புவதால் மனிதாபிமான நெருக்கடி!
செல்வராஜ் சூசைமாணிக்கம் - வத்திக்கான்
"ஈரானில் இருந்து குடும்பங்கள் ஆப்கானிஸ்தானுக்குத் திரும்புவதால், இடம்பெற்று வரும் மத்திய கிழக்கு மோதல்கள், குறிப்பாக, குழந்தைகளுக்கு மனிதாபிமான நெருக்கடியை அதிகரித்து வருகின்றன" என்று கூறியுள்ளது யுனிசெஃப் நிறுவனம்.
மார்ச் 10, செவ்வாய்க்கிழமையன்று நடைபெற்ற ஐ.நா. செய்தியாளர் கூட்டம் ஒன்றில், யுனிசெஃப் நிறுவனத்தின் ஆப்கானிஸ்தான் பிரதிநிதி தாஜுதீன் ஓயேவாலே அவர்கள், அனைத்துலக ஆதரவு அவசரத் தேவையாக உள்ளது என்பதை எடுத்துரைத்துள்ளார்.
"2025-ஆம் ஆண்டில், வன்முறையிலிருந்து தப்பி, குழந்தைகளுடன் கூடிய பல குடும்பங்கள் உட்பட, ஏறக்குறைய 30 இலட்சம் ஆப்கானியர்கள் திரும்பி உள்ளனர்" என்று உரைக்கும் அதன் அறிக்கை, "இந்தக் குடும்பங்களில் உள்ள குழந்தைகளில் பலர் சோர்வடைந்து, ஊட்டச்சத்துக் குறைபாடுடன், உடனடி மருத்துவ உதவி தேவைப்படும் நிலையில் உள்ளனர்" என்று குறிப்பிட்டுள்ளது.
மேலும் ஆதரவற்ற குழந்தைகள் கடத்தல் மற்றும் வன்முறைக்கு ஆளாகும் ஆபத்து அதிகரித்துள்ளது என்றும் கவலை தெரிவித்துள்ளது அதன் அறிக்கை.
"யுனிசெஃப் நிறுவனம், புலம்பெயர்ந்தோருக்கான ஐக்கிய நாடுகளின் ஆணையத்துடன் (UNHCR) இணைந்து, ஊட்டச்சத்துப் பரிசோதனைகள், தடுப்பூசிகள் மற்றும் குழந்தை பாதுகாப்பு போன்ற அத்தியாவசிய சேவைகளை வழங்குகிறது" என்றும் எடுத்துக்காட்டியுள்ளது அந்நிறுவனத்தின் அறிக்கை.
"அதேவேளையில், அதிகரித்து வரும் உதவித் தேவையை நிவர்த்தி செய்வதற்கு ஆப்கானிஸ்தானின் உள்கட்டமைப்பு போராடி வருகிறது" என்றும், "இலட்சக் கணக்கான குழந்தைகளுக்கு அவசர உதவி தேவைப்படுகிறது" என்றும் சுட்டிக்காட்டியுள்ளது அவ்வறிக்கை.
"ஆப்கானிஸ்தானுக்கான மனிதாபிமான மறுமொழித் திட்டத்திற்கு 10 விழுக்காடு மட்டுமே நிதி வழங்கப்படுகிறது" என்றும், "நெருக்கடியைத் தணிக்க விமானப் போக்குவரத்துப் பொருட்கள் உட்பட பன்னாட்டு ஆதரவை அதிகரிக்க வேண்டும்" என்றும் கேட்டுக்கொண்டுள்ளது யுனிசெஃப் நிறுவனம்.
இறுதியாக, மண்டிலப் பகுதிகளில் பாதிக்கப்படக்கூடிய குழந்தைகள் மற்றும் குடும்பங்களைப் பாதுகாப்பதற்கான அதன் முயற்சிகளை விரிவுபடுத்துவதில் உறுதியாக உள்ளதையும் அவ்வறிக்கையில் எடுத்துக்காட்டியுள்ளது யுனிசெஃப் நிறுவனம்.
இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்