குழந்தைகளைப் பாதுகாக்க யுனிசெஃப் அனைத்துலக நாடுகளுக்கு அழைப்பு!
ஜான்சிராணி அருளாந்து - வத்திக்கான்
ஈரானின் தலைநகரம் தெஹ்ரானில் அதிகரித்து வரும் வன்முறை மற்றும் அது குழந்தைகள் மீது ஏற்படுத்தியுள்ள பேரழிவைக் குறித்து தனது ஆழ்ந்த கவலையைத் தெரிவித்துள்ளது யுனிசெஃப் நிறுவனம்.
தொடர்ந்து இப்பகுதி முழுவதும் தீவிரமடைந்து வரும் இராணுவத் தாக்குதல்களால், இதுவரை ஏறத்தாழ 180 குழந்தைகள் கொல்லப்பட்டுள்ளதாகவும், மேலும் பலர் காயமடைந்துள்ளதாகவும் அண்மைய அறிக்கைகள் உறுதிப்படுத்தியுள்ளன.
"தெற்கு ஈரானின் மினாப் பகுதியில் உள்ள ஷாஜரே தையீபே (Shajareh Tayyebeh) பெண்கள் தொடக்கப் பள்ளியில் பிப்ரவரி 28, சனிக்கிழமையன்று நிகழ்ந்த தாக்குதல் மிகவும் துயரமான சம்பவம்" என்றும், "மாணவிகள் வகுப்பில் இருந்தபோது நடத்தப்பட்ட இந்தத் தாக்குதலில் 168 சிறுமிகள் கொல்லப்பட்டனர்" என்றும் இவ்வறிக்கை எடுத்துக்காட்டியுள்ளது.
"7 முதல் 12 வயது வரையிலான அந்தப் பிஞ்சுகள், உயிரிழந்த அப்பாவி மக்களின் ஒரு பகுதி மட்டுமே" என்றும் "ஈரானின் மற்ற ஐந்து இடங்களில் நடத்தப்பட்ட கூடுதல் தாக்குதல்களில் மேலும் 12 குழந்தைகள் கொல்லப்பட்டுள்ளனர்" என்றும் அதன் அறிக்கை சுட்டிக்காட்டியுள்ளது.
மேலும் "இந்தக் கொடூரமான தாக்குதல்கள், மோதல் நிலவும் பகுதிகளில் குழந்தைகளின் பாதுகாப்பற்ற சூழலை வெளிக்காட்டுகின்றன" என்று குறிப்பிட்டுள்ள அதன் அறிக்கை, "பாதிக்கப்பட்ட குடும்பங்கள் மற்றும் சமூகங்கள் மீது இது நீண்டகால மன உளைச்சலையும் ஆழமான பாதிப்பையும் ஏற்படுத்தும்" என்று எச்சரித்துள்ளது.
"மோதல்கள் நிலவும் காலங்களிலும், குழந்தைகளையும் கல்வி நிறுவனங்களையும் பாதுகாக்க வேண்டும் என்பது அனைத்துலக மனிதநேயச் சட்டத்தின் கட்டாயமாகும்" என்றும், "கல்வி நிலையங்கள் எப்போதும் பாதுகாப்பான புகலிடங்களாக இருக்க வேண்டும்" என்றும் அவ்வறிக்கை வலியுறுத்தியுள்ளது.
"தொடர்ந்து இடம்பெற்று வரும் வன்முறைகள் அத்தியாவசியக் கட்டமைப்புகளையும் சேதப்படுத்தியுள்ளன" என்றும் "இந்தத் தாக்குதல்களில் குறைந்தது 20 பள்ளிகளும் 10 மருத்துவமனைகளும் சேதப்படுத்தப்பட்டுள்ளன" என்றும் தெரிவித்துள்ள அவ்வறிக்கை, "இது பாதிக்கப்பட்ட பகுதிகளில் உள்ள குழந்தைகளுக்குக் கல்வி மற்றும் நலவாழ்வுச் சேவைகள் கிடைப்பதற்குக் கூடுதல் தடையாக மாற்றியுள்ளது" என்றும் கவலை தெரிவித்துள்ளது.
"பொதுமக்களின் உயிர்களை, குறிப்பாகக் குழந்தைகளின் உயிர்களைப் பாதுகாப்பதற்கும், போரின் கோரப்பிடியிலிருந்து அவர்களைக் காப்பதற்கும், அனைத்துலகச் சட்டக் கடமைகளுக்கு அனைத்துத் தரப்பினரும் கட்டுப்பட வேண்டும்" என்று கேட்டுக்கொண்டுள்ளது யுனிசெஃப் நிறுவனம்.
இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்