எரிபொருள் விலை உயர்வால் அவதிப்படும்  இலங்கை மீனவர்கள் எரிபொருள் விலை உயர்வால் அவதிப்படும் இலங்கை மீனவர்கள் 

எரிபொருள் விலை உயர்வால் இலங்கை மீனவர்கள் பாதிப்பு

“ஒரு மீன்பிடிக் கப்பலை இயக்குவதற்கு 6,000 முதல் 14,000 லிட்டர் டீசல் வரை தேவைப்படும் நிலையில், அதிகரித்துள்ள எரிபொருள் விலை பல படகு உரிமையாளர்களுக்கு தாங்க முடியாத பொருளாதார சுமையை தருகிறது” - ருவன் பெர்னாண்டோ

அபிசேக் ராஜா அலங்காரம் – வத்திக்கான்

தொடர்ச்சியான மோதல்கள் மற்றும் அதிகரித்து வரும் நாடுகளுக்கிடையேயான அரசியல் நிலையற்ற தன்மையால் உலக சந்தையில் கச்சா எண்ணெய் விலை உயர்ந்துள்ளதாக யூக்கான் செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.

இதனையடுத்து எரிபொருள் விலை கடுமையாக உயர்ந்துள்ளதால், கடலுக்குச் செல்வதில் தாங்கள் பெரும் சிரமத்தை எதிர்கொள்வதாக இலங்கை மீனவர்கள் தெரிவித்துள்ளனர். மேலும், மீன்பிடிக்க கடலுக்குச் செல்வதற்குத் தேவையான டீசல் செலவை இனி மீனவர்களால் தாங்க முடியாது எனவும் அவர்கள் எச்சரித்துள்ளனர்.

எரிபொருள் விலையேற்றத்தால் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ள மீனவர்களுக்கு அரசு உடனடியாக நிவாரணம் வழங்க வேண்டும் என வலியுறுத்தி, இலங்கை மீனவர் சங்கத்தினர் மார்ச் 10, செவ்வாயன்று, அந்நாட்டு அரசிற்கு எழுதியுள்ள கடிதத்தில் இந்த எச்சரிக்கையை விடுத்துள்ளனர்.

"எரிபொருள் விலை உயர்வு காரணமாக பலர் வேலை நிறுத்தத்தில் ஈடுபடும் நிலை ஏற்பட்டுள்ளது" என்றும் "அரசு இதில் உடனடியாகத் தலையிட்டு மீனவர்களுக்கு எரிபொருளுக்கான நிதி உதவி வழங்க வேண்டும்" என்றும் இலங்கை நெடுநாள் மீன்பிடி படகு உரிமையாளர்கள் சங்கம் வலியுறுத்தியுள்ளது.

இலங்கை பெட்ரோலிய நிறுவனத்தின் தரவுகளின்படி, ஒரு லிட்டர் உயர்தர டீசலின் விலை 24 ரூபாய் அதிகரித்து 353 ரூபாயாக உயர்ந்துள்ளது. இதேபோல், அதிக அழுத்தத்தைத் தாங்கக்கூடிய, உயர் தர எரிபொருளான ஆக்டேன் 95 எனும் பெட்ரோல் 25 ரூபாய் அதிகரித்து 365 ரூபாயாகவும், மண்ணெண்ணெய் விலை லிட்டருக்கு 13 ரூபாய் அதிகரித்து 195 ரூபாயாகவும் உயர்ந்துள்ளது.

இது குறித்து கருத்து தெரிவித்துள்ள இலங்கை நெடுநாள் மீன்பிடி படகு உரிமையாளர்கள் சங்கத்தின் செயலாளர் ருவன் பெர்னாண்டோ அவர்கள், "ஒரு மீன்பிடிக் கப்பலை இயக்குவதற்கு 6,000 முதல் 14,000 லிட்டர் டீசல் வரை தேவைப்படும் நிலையில், அதிகரித்துள்ள எரிபொருள் விலை பல படகு உரிமையாளர்களுக்கு தாங்க முடியாத பொருளாதார சுமையை தருகிறது" என்று கூறியுள்ளார்.

மேலும் "மீனவர்களால் எரிபொருள் விலையேற்றத்தை சமாளிக்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளதால் நீண்டநாள் கடலில் மீன் பிடிக்கும் படகுகளின் சேவை நிறுத்தப்படும் ஆபத்து உள்ளது" என்று எச்சரித்துள்ள பெர்னான்டோ அவர்கள், இது குறித்து அரசு விரைவில் நடவடிக்கை எடுக்க வலியுறுத்தும் விதமாக இந்த வாரம் மீன்பிடித்துறை அமைச்சரைச் சந்திக்க இருப்பதாகவும் தெரிவித்துள்ளார்.

"பன்னாட்டு விமானங்கள் குறைவாக இயக்கப்படுவதால், ஏற்றுமதி சந்தையில் மீன்களுக்கான ஏற்றுமதி விலை வீழ்ச்சியடைந்துள்ளது" என்றும் "இதனால் மீனவர்களின் நிலை மேலும் மோசமடைந்துள்ளது" என்றும் கூறியுள்ளார் பெர்னாண்டோ. (UCAN) 

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

17 மார்ச் 2026, 13:32