பாலினப் பாகுபாடுகளைக் களைய உலக குழந்தைகள் நல அமைப்பு அழைப்பு!
ஜான்சிராணி அருளாந்து - வத்திக்கான்
"பெண்களின் கல்வி மற்றும் வேலைவாய்ப்புகளைத் தொடர்ந்து பாதித்து வரும் பாலினப் பாகுபாடுகளை, சிறுவயதிலிருந்தே களைய வேண்டியதன் அவசியத்தை வலியுறுத்தி, Save the Children எனப்படும் உலகளாவிய குழந்தைகள் நல அமைப்பு அனைத்துலகப் பெண்கள் தினத்தைக் கொண்டாடியுள்ளது.
"ஆண்களைவிட பெண்கள் கல்வியில் சிறப்பாகச் செயல்பட்ட போதிலும், வேலைவாய்ப்பில் அவர்கள் பெரும் தடைகளை எதிர்கொள்கின்றனர்" என்றும், "குறிப்பாக, ஆண்களுக்கும் பெண்களுக்குமான பாலின ஊதிய இடைவெளி இன்றும் ஒரு தொடர் சவாலாகவே உள்ளது" என்றும் அவ்வமைப்பு கவலை தெரிவித்துள்ளது.
மேலும் "ஐரோப்பிய ஊதியம் தொடர்பான வெளிப்படைத்தன்மை உத்தரவை (European Directive on Pay Transparency) இத்தாலி ஏற்க வேண்டும்" என்று பரிந்துரைத்துள்ள இவ்வமைப்பு, "சமமான ஊதியம் என்பது கல்வியில் நிலவும் பாலினப் பாகுபாடுகளைக் களைவதற்கான முயற்சிகளுடன் இணைந்தே இருக்க வேண்டும்" என்றும் வலியுறுத்தியுள்ளது.
"25 முதல் 34 வயதுக்குட்பட்ட பெண்களில் ஏறக்குறைய 40 விழுக்காட்டினர் பல்கலைக்கழகப் பட்டங்களைப் பெற்றிருந்தாலும், அவர்கள் அதிக வேலையின்மை விகிதத்தை எதிர்கொள்கின்றனர்" என்றும், "விருப்பமில்லாத நிலையிலும் பகுதி நேர வேலைகளில் ஈடுபடும் சூழலுக்கு அவர்கள் தள்ளப்படுகின்றனர் என்று ஆய்வுகள் வெளிப்படுத்தியுள்ளன" என்றும் இவ்வமைப்பு சுட்டிக்காட்டியுள்ளது.
இது குறித்து கருத்து தெரிவித்துள்ள இவ்வமைப்பின் நிறுவன உறவுகள் (Institutional Relations) பிரிவின் இயக்குநர் ஜியோர்ஜியா தெ எரிகோ (Giorgia D'Errico) அவர்கள், "பாலின ஊதிய இடைவெளியைக் களைவது சமூக சமத்துவத்தை மேம்படுத்துவதற்கும், குழந்தைப் வறுமையைக் குறைப்பதற்கும் மிக அவசியமானது" என்று குறிப்பிட்டுள்ளார்.
இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்