தேடுதல்

ஊட்டச்சத்துக் குறைபாட்டில் குழந்தைகள் ஊட்டச்சத்துக் குறைபாட்டில் குழந்தைகள்   (AFP or licensors)

ஐந்தாவது பிறந்தநாளுக்கு முன்பே உயிரிழந்த 49 இலட்சம் குழந்தைகள்!

முதன்முறையாக, கடுமையான ஊட்டச்சத்துக் குறைபாட்டினால் நேரடியாக ஏற்பட்ட உத்தேச இறப்பு எண்ணிக்கையை உள்ளடக்கியுள்ள இந்த அறிக்கை, "2024-ஆம் ஆண்டில் 1 முதல் 59 மாத வயதுடைய குழந்தைகளில் 1 இலட்சத்திற்கும் அதிகமான குழந்தைகள் இதனால் உயிரிழந்துள்ளன" என்று கூறியுள்ளன.

அபிசேக் ராஜா அலங்காரம் - வத்திக்கான்

"கடந்த 2024-ஆம் ஆண்டில் 23 இலட்சம் பச்சிளம் குழந்தைகள் உட்பட ஏறத்தாழ 49 இலட்சம் குழந்தைகள் தங்களின் ஐந்து வயதுக்கு முன்பே உயிரிழந்துள்ளனர்" என்று யுனிசெஃப் உள்ளிட்ட உலகளாவிய அமைப்புகள் கவலை தெரிவித்துள்ளன.

மார்ச் 12, வியாழனன்று, ஐக்கிய நாடுகள் அவையின் உலகளாவிய அமைப்புகளான யுனிசெஃப், உலக நலவாழ்வு அமைப்பு, உலக வங்கி மற்றும் ஐ.நா. பொருளாதார மற்றும் சமூக விவகாரத் துறை (UN/DESA) ஆகியவை வெளியிட்டுள்ள அறிக்கையொன்றில் இவ்வாறு கூறியுள்ளன.  

குழந்தைகள் இறப்பு விகிதத்தின் அண்மைய நிலைகள் மற்றும் போக்குகள் குறித்து ஆராயும் இவற்றின் அறிக்கை, உலகளவில் ஐந்து வயதுக்குட்பட்ட குழந்தைகளின் இறப்பு விகிதம், முந்தைய நிலையோடு ஒப்பிடும்போது கடந்த 2000-ஆம் ஆண்டிலிருந்து பாதிக்கும் மேலாகக் குறைந்துள்ளதாகத் தெரிவித்துள்ளது.

இருப்பினும், "கடந்த 2015-ஆம் ஆண்டிலிருந்து இந்த முன்னேற்றம் அதிகளவில் குறைந்துள்ளது" என்றும் "குழந்தைகளின் இறப்பைக் குறைக்கும் விகிதம் 60 விழுக்காட்டிற்கும் மேலாக வீழ்ச்சியடைந்துள்ளது" என்றும் இவற்றின் அறிக்கை சுட்டிக்காட்டியுள்ளது.

முதன்முறையாக, கடுமையான ஊட்டச்சத்துக் குறைபாட்டினால் நேரடியாக ஏற்பட்ட உத்தேச இறப்பு எண்ணிக்கையை உள்ளடக்கியுள்ள இந்த அறிக்கை, "2024-ஆம் ஆண்டில் 1 முதல் 59 மாத வயதுடைய குழந்தைகளில் 1 இலட்சத்திற்கும் அதிகமான குழந்தைகள் இதனால் உயிரிழந்துள்ளன" என்று கூறியுள்ளது.

ஆனால், மறைமுக பாதிப்புகள் மற்றும் இறப்பை சரியாகப் பதிவு செய்யாமல் இருத்தல் போன்ற காரணங்களால் உண்மையான இறப்பு எண்ணிக்கை இதைவிட அதிகமாக இருக்க வாய்ப்புள்ளது என்று குறிப்பிட்டுள்ள இவற்றின் அறிக்கை, "குறைந்த செலவிலான மருத்துவத் தலையீடுகள் மற்றும் தரமான நலவாழ்வு வசதிகள் மூலம் இந்த இறப்புகளில் பெரும்பாலானவற்றைத் தடுத்திருக்க முடியும்" என்று தெளிவுபடுத்தியுள்ளது.

"தற்போது ஐந்து வயதுக்குட்பட்ட குழந்தைகளின் உயிரிழப்புகளில் பாதிக்கும் மேலானவை பச்சிளம் குழந்தைகளின் இறப்புகளாகவே உள்ளன" என்றும் "கரு முழுமையாக வளர்ச்சி அடைவதற்கு முன்னதாகவே இடம்பெறும் குழந்தை பிறப்பு மற்றும் பேறுகால சிக்கல்களும் குழந்தை பிறந்த முதல் மாதத்திற்குப் பிறகு, மலேரியா, நிமோனியா மற்றும் வயிற்றுப்போக்கு போன்ற தொற்று நோய்களுமே இத்தகைய இறப்புகளுக்கு காரணம்" என்றும் இவற்றின் அறிக்கை சுட்டிக்காட்டியுள்ளது.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

19 மார்ச் 2026, 13:34