தேடுதல்

புலம்பெயர்ந்த குழந்தைகள் புலம்பெயர்ந்த குழந்தைகள்   (AFP or licensors)

புலம்பெயர்ந்த குழந்தைகளின் பாதுகாப்பை உறுதி செய்ய வலியுறுத்தல்!

புலம்பெயர்ந்த குழந்தைகளைப் பாதுகாக்கும் சட்டங்களை இயற்றவும், தடுப்புக் காவலுக்கு மாற்றான வழிமுறைகளை உறுதிப்படுத்தவும், அவர்களின் ஒருங்கிணைப்பு மற்றும் பராமரிப்பிற்கான பாதுகாப்பான வழிமுறைகளை வழங்கும் சட்டங்களை நிறைவேற்றவும் சட்டமியற்றும் பொறுப்பில் உள்ள நாடாளுமன்ற உறுப்பினர்களை இருபது சமூக ஆர்வலர் குழுக்கள் வலியுறுத்தியுள்ளன.

அபிசேக் ராஜா அலங்காரம் -‌ வத்திக்கான்

ஐரோப்பிய ஒன்றியத்தின் கட்டாயத் திருப்பி அனுப்புதல் ஒழுங்குமுறை குறித்த அண்மைக்கால LIBE குழுவின் முடிவை நிராகரிக்குமாறு ஐரோப்பிய நாடாளுமன்றத்திற்கு அழைப்பு விடுத்துள்ளன சமூக ஆர்வலர் குழுக்கள்

Save the Children எனப்படும் உலகளாவிய குழந்தைகள் நல அமைப்பு இத்தாலியின் அனைத்துலக பொதுமன்னிப்பு அமைப்பு மற்றும் இத்தாலியின் காரித்தாஸ் உள்ளிட்ட இருபது சமூக ஆர்வலர் குழுக்கள் ஐரோப்பிய ஒன்றியத்தின் திருப்பி அனுப்பும் ஒழுங்குமுறை குறித்த ஐரோப்பிய ஒன்றியத்தின் சிவில் உரிமைகள், நீதி மற்றும் உள்துறை விவகாரக் குழுவின் (LIBE) அண்மைய சமரசத்தை நிராகரிக்குமாறு ஐரோப்பிய நாடாளுமன்றத்தை வலியுறுத்தியுள்ளன.

"இந்தக் குழுவின் தற்போதைய முன்மொழிவு, புலம்பெயர்ந்த குழந்தைகளை 24 மாதங்கள் வரை தடுப்புக் காவலில் வைக்கவும், குடும்ப உறவுகளின் துணை இல்லாமல் பாதுகாப்பற்ற நாடுகளுக்கு அவர்களை நாடு கடத்தவும் வழிவகை செய்கிறது" என்றும், " இதனால் ஆயிரக்கணக்கான ஆதரவற்ற சிறுவர்களையும் குடும்பங்களையும் ஆபத்தான சூழலுக்கு உட்படுத்தும் வாய்ப்புள்ளது" என்றும் இவ்வமைப்புகள் எச்சரித்துள்ளன.

மேலும் தற்போது முன்மொழியப்பட்டுள்ள திட்டங்கள் குழந்தைகளின் நலனைப் பாதுகாக்கத் தவறுவதுடன், ஐரோப்பிய ஒன்றியத்தின் அடிப்படை உரிமைகளையும் உலகளாவிய தரநிலைகளையும் மீறுவதாக இவ்வமைப்புகள் சுட்டிக்காட்டியுள்ளன.

பெல்ஜியம் நாட்டின் சட்ட ரீதியான தலைநகரமான பிரசெல்ஸில் மார்ச் 26, வியாழனன்று நடைபெற்ற பொது வாக்கெடுப்பிற்கு முன்னதாக, புலம்பெயர்ந்த குழந்தைகளைப் பாதுகாக்கும் சட்டங்களை இயற்றவும், தடுப்புக் காவலுக்கு மாற்றான வழிமுறைகளை உறுதிப்படுத்தவும், அவர்களின் ஒருங்கிணைப்பு மற்றும் பராமரிப்பிற்கான பாதுகாப்பான வழிமுறைகளை வழங்கும் சட்டங்களை நிறைவேற்றவும் சட்டமியற்றும் பொறுப்பில் உள்ள நாடாளுமன்ற உறுப்பினர்களை இந்தக் குழுக்கள்  வலியுறுத்தியுள்ளன.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

27 மார்ச் 2026, 15:16