ஐரோப்பா மற்றும் மத்திய ஆசியாவில் தட்டம்மை பாதிப்புகள் குறைந்துள்ளன!
ஜான்சி ராணி அருளாந்து - வத்திக்கான்
ஐரோப்பிய ஒன்றியத்தைச் சேர்ந்த 53 நாடுகளின் ஆரம்பத் தரவுகளின்படி, ஐரோப்பா மற்றும் மத்திய ஆசியாவில் தட்டம்மை பாதிப்புகள் 2025-ஆம் ஆண்டில் கணிசமாகக் குறைந்துள்ளன என்று யுனிசெஃப் மற்றும் உலக நலவாழ்வு அமைப்பு தெரிவித்துள்ளன.
பிப்ரவரி 11, புதனன்று, வெளியிட்டுள்ள அறிக்கையொன்றில், இவ்வாறு தெரிவித்துள்ள அவ்வமைப்புகள் "கடந்த 2024-ஆம் ஆண்டில் 1,27,412-ஆக இருந்த தட்டம்மை பாதிப்புகள், 2025-ஆம் ஆண்டில் 33,998-ஆகக் குறைந்துள்ளன" என்றும் "இது ஏறத்தாழ 75 விழுக்காடு வீழ்ச்சியாகும்" என்றும் குறிப்பிட்டுள்ளன.
"தட்டம்மை பாதிப்புகள் குறைவதில் நல்ல முன்னேற்றம் ஏற்பட்டிருந்தாலும், அது மீண்டும் பரவுவதற்கான ஆபத்து இன்னும் குறையவில்லை" என்றும், "தடுப்பூசி முகாம்கள் உள்ளிட்ட பயனுள்ள தொற்றுநோய் தடுப்பு நடவடிக்கைகள் காரணமாகவே இந்த வீழ்ச்சி ஏற்பட்டுள்ளது" என்றும் அவ்வமைப்புகள் கூறியுள்ளன.
இருப்பினும், தட்டம்மை வைரஸ் தொடர்ந்து பரவி வருவதாலும், குறிப்பாகத் தடுப்பூசி போடும் விகிதம் குறைவாக உள்ள சமூகங்களில் இதன் தாக்கம் இருப்பதாலும், இந்த முன்னேற்றம் நிலையற்றது என்று இரு அமைப்புகளும் வலியுறுத்தியுள்ள நிலையில் கடந்த மூன்று ஆண்டுகளில் மட்டும், இவ்வொன்றியத்தில் 2,00,000-க்கும் அதிகமானோர் தட்டம்மையால் பாதிக்கப்பட்டுள்ளனர் என்றும் எடுத்துக்காட்டியுள்ளன.
மேலும், வழக்கமான தடுப்பூசி செலுத்தும் முறையை மேம்படுத்த வேண்டியதன் அவசியத்தையும், தொற்றுநோய்களுக்குத் தகுந்த நேரத்தில் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டியதன் தேவையையும் அவ் வமைப்புகள் வலியுறுத்தியுள்ளன.
தற்போது 19 நாடுகளில் தட்டம்மைத் தொற்று ஒரு குறிப்பிட்ட பகுதிக்குள் நிலைத்துப் பரவும் (Endemic) சூழல் காணப்படுவது கவலைக்குரியதாக உள்ளதை சுட்டிக்காட்டியுள்ள அவ்வமைப்புகள், "கடந்த 2024-ஆம் ஆண்டில் இத்தகைய நாடுகளின் எண்ணிக்கை 12-ஆக மட்டுமே இருந்தது" என்றும், "இது தட்டம்மை நோயை முற்றிலுமாக ஒழிப்பதற்கான முயற்சியில் ஏற்பட்டுள்ள பின்னடைவைப் பிரதிபலிக்கிறது" என்றும் தெரிவித்துள்ளன.
எதிர்காலத்தில் நோய் பரவுவதைத் தடுக்கவும், இப்பகுதிகளின் பாதுகாப்பை உறுதிப்படுத்தவும் அரசுகள், நலவாழ்வு அமைப்புகள் மற்றும் பொதுமக்களுக்கு இடையிலான தொடர்ச்சியான ஒத்துழைப்பு மிகவும் அவசியமாகும் என்றும் அவ்வமைப்புகள் தெரிவித்துள்ளன.
இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்