மத்திய தரைக்கடல் படகு விபத்தில் குழந்தைகள் உட்பட பலர் பலி!
ஜான்சி ராணி அருளாந்து - வத்திக்கான்
மத்தியதரைக்கடல் பகுதியில் அமைந்துள்ள வடமேற்கு லிபியாவின் சுவாரா (Zuwara) கடற்கரை அருகே நெரிசலான இரப்பர் படகு கவிழ்ந்ததில், இரண்டு குழந்தைகள் உட்பட குறைந்தது 53 புலம்பெயர்ந்தோர் உயிரிழந்ததாக அனைத்துலக இடம்பெயர்வுக்கான அமைப்பு (IOM) தெரிவித்துள்ளது.
பிப்ரவரி 5, வியாழனன்று இரவு 11:00 மணியளவில் புறப்பட்ட அந்தப் படகு, ஏறத்தாழ ஆறு மணி நேரப் பயணத்திற்குப் பிறகு கவிழ்ந்ததில் இரண்டு நைஜீரிய பெண்கள் மட்டுமே உயிர்தப்பினர் என்று அவ்வமைப்பு தெரிவித்துள்ளது.
மொத்தம் 55 பேர் பயணித்த அந்தப் படகில் உயிர் பிழைத்த இரு பெண்களில் ஒரு பெண் தனது கணவரை இழந்ததாகவும், மற்றொருவர் படகு கவிழ்ந்து வேகமாகத் தண்ணீர் நிரம்பியபோது தனது இரண்டு குழந்தைகள் நீரில் மூழ்கியதைக் கண்டதாகவும் அவ்வமைப்பு கூறியுள்ளது
மேலும் மத்திய தரைக்கடல் பாதை, உலகின் மிக ஆபத்தான புலம்பெயர்வுப் பாதைகளில் ஒன்று என்பதை இந்தத் துயரச் சம்பவம் கோடிட்டுக் காட்டுவதாக அவ்வமைப்பு எடுத்துக்காட்டியுள்ளது.
கடந்த 2025-ஆம் ஆண்டில் இந்தப் பாதையில் 1,300-க்கும் மேற்பட்ட புலம்பெயர்ந்தோர் காணாமல் போயுள்ளனர் என்றும் மேலும் இந்த ஆண்டின் தொடக்கத்தில் இருந்து குறைந்தது 484 பேர் உயிரிழந்ததாகவோ அல்லது காணாமல் போனதாகவோ பதிவாகியுள்ளது என்றும் அவ்வமைப்பு கூறியுள்ளது.
ஆள் கடத்தல் மற்றும் ஆபத்தான கடல் கடப்பு உள்ளிட்ட தொடர்ச்சியான பாதிப்புகள் இருந்தபோதிலும், ஐரோப்பாவை அடைய முயற்சிக்கும் புலம்பெயர்ந்தோருக்கு லிபியா ஒரு முக்கியமான போக்குவரத்து புள்ளியாகத் தொடர்கிறது.
இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்