தேடுதல்

காசாவின் தற்போதைய நிலைகுறித்து எச்சரிக்கை!

காசா நெருக்கடி மோசமடைவதாக கிழக்கத்திய பாலஸ்தீன அகதிகளுக்கான ஐக்கிய நாடுகள் நிவாரண மற்றும் வேலைவாய்ப்பு முகமையின் (ஐ.நா.ஆர்.டபிள்யூ.ஏ) தலைவர் பிலிப் லசாரினி எச்சரிக்கை. உலக நாடுகள் பாராமுகமாய் இருக்க வேண்டாம் என வலியுறுத்தல்.

செபாஸ்தியான் வனத்தையன் – வத்திக்கான்

ஜனவரி 12, திங்களன்று திருத்தந்தை பதினான்காம் லியோ அவர்களுடனான சந்திப்பைத் தொடர்ந்து, காசா மற்றும் மேற்குக் கரையில் கிழக்கு பாலஸ்தீன புலம்பெயர்ந்தோருக்கான ஐக்கிய நாடுகள் நிவாரண மற்றும் பணி முகமையின் செயல்பாடுகளைத் தடுப்பதால் பேரழிவுத் தாக்கங்கள் ஏற்படும் என்று அதன் தலைவர் பிலிப் லசாரினி அவர்கள் எச்சரித்துள்ளார்.

வத்திக்கான் செய்திகளுக்கு வழங்கிய நேர்காணல் ஒன்றில் இவ்வாறு தெரிவித்த லசாரினி அவர்கள், காசா, மேற்குக் கரை மற்றும் கிழக்கு எருசலேமில் தீவிரமடைந்து வரும் மனிதாபிமானமற்ற நெருக்கடிநிலை, கல்வி, நலவாழ்வு, மற்றும் அடிப்படை சேவைகளை வழங்குவதில் இவ்வமைப்பின் முக்கியப் பங்களிப்புக் குறித்த விவாதங்கள் முக்கியத்துவம் பெற்றிருந்ததாகக் கூறினார்.

இஸ்ரேல்-பாலஸ்தீன மோதலுக்கு அரசியல் தீர்வு இல்லாததே இவ்வமைப்பின் தொடர்ச்சியான இருப்பு பிரதிபலிக்கிறதுவே தவிர, அது ஒரு நிறுவனத் தோல்வி அல்ல என்று கூறிய லாசாரினி அவர்கள், வளர்ந்து வரும் பொதுமக்களின் தேவைகளுக்கு மத்தியில், சில நன்கொடை வழங்கும் நாடுகள் நிதி ஒதுக்கீட்டைக் குறைப்பது என்பது முரண்பாடாக உள்ளது என்று தனது கவலையையும் வெளிப்படுத்தினார்.

காசாவின் குழந்தைகள் எதிர்கொள்ளும் பேரதிர்ச்சிகளை எடுத்துரைத்த அவர், கல்வியைத் தாமதப்படுத்துவது ஒரு “தலைமுறை இழப்பை” உருவாக்கும் என்றும், எதிர்கால தீவிரவாதத்தைத் தூண்டும் ஆபத்தை விளைவிக்கும் என்றும் எச்சரித்தார் அவர்.

அனைத்துலக ஊடகங்கள் இரண்டு ஆண்டுகளுக்கும் மேலாக அந்தப் பகுதிக்குச் செல்வதற்குத் தடை விதிக்கப்பட்டுள்ள நிலையில், காசா குறித்து தொடர்ந்து செய்திகளை வெளியிடுமாறு பத்திரிகையாளர்களை அவர் கேட்டுக்கொண்டார்.

ஒன்றிப்பு மற்றும் நம்பிக்கையின் செய்தியாக திருத்தந்தையின் ஆதரவை வரவேற்று தனது நேர்காணலை நிறைவுசெய்த லசாரினி அவர்கள், அனைத்துலகச் சமூகம் இந்த அமைப்பினைப் புறக்கணிப்பதற்குப் பதிலாக, தீர்வின் ஒரு பகுதியாகப் பார்க்க வேண்டும் என்று வலியுறுத்தினார்.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

13 ஜனவரி 2026, 12:19