உக்ரைனில் குழந்தைகளின் நிலை உக்ரைனில் குழந்தைகளின் நிலை  

உக்ரைனில் குழந்தைகள் உயிரிழப்பு

உக்ரைனில் தொடரும் வன்முறை, குழந்தைகள் கொல்லப்படுதல் மற்றும் பொதுமக்களுக்கு தொடர்ந்து பேரழிவை ஏற்படுத்தும் தாக்குதல்களை நிறுத்த யுனிசெஃப் நிறுவனம் வலியுறுத்தல்

செபாஸ்தியான் வனத்தையன் – வத்திக்கான்

ஜனவரி 23, வெள்ளியன்று, உக்ரைனின் டோனெட்ஸ்க் பகுதியி;ல் நிகழ்ந்த தாக்குதலில் 5 வயதுக் குழந்தை மற்றும் அதன் தந்தை உயிரிழந்த செய்தி யுனிசெஃப் நிறுவனத்தை ஆழ்ந்த அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது என அதன் அறிக்கையொன்றில் கூறப்பட்டுள்ளது.

மேலும் இந்தத் தாக்குதலில் 12, 14, மற்றும் 16 வயதுடைய மூன்று சிறுமிகளும் காயமடைந்ததாகவும் அதன் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இரண்டு நாட்களுக்கு முன்பு, க்ரிவி ரிக் மீது நடத்தப்பட்ட வான்வழித் தாக்குதலில் 1, 8, மற்றும் 10 வயதுடைய மூன்று குழந்தைகள் காயமடைந்துள்ளனர் என்றும், இந்தத் தாக்குதல்கள் பள்ளிகளுக்கு அதிகமான சேதத்தை ஏற்படுத்தியதுடன் அப்பகுதியில் குடிநீர் வழங்கலையும் துண்டித்துள்ளன என்றும் கூறப்பட்டுள்ளது.

இதன் காரணமாக, உள்ளுர் அதிகாரிகள் மற்றும் யுனிசெஃப் நிறுவனம் உட்பட மனிதநேய அமைப்புகளிடமிருந்து அவசர மின்சார விநியோகங்களைச் சார்ந்திருக்கும் நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளனர் என்றும், கூடுதலாக, இரண்டு இரவுகளுக்கு முன்பு, ஒடெசா பகுதியில் நடந்த வான்வழித் தாக்குதலில் மேலும் 17 வயதுடைய சிறுவன் ஒருவன் உயிரிழந்துள்ளான் என்றும் அதன் அறிக்கையில் கவலை தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், "குழந்தைகளின் நல்வாழ்வு மற்றும் பாதுகாப்புக்காக அவர்கள் சார்ந்திருக்கும் பொதுமக்கள் பகுதிகள் மற்றும் அத்தியாவசிய உள்கட்டமைப்புகளைக் குறிவைத்து தாக்குதல் நடத்துவதை உடனடியாக நிறுத்த வேண்டும்" என்று யுனிசெஃப் நிறுவனம் அழைப்பு விடுத்துள்ளது.

குறிப்பாக, உக்ரைனில் தொடரும் இந்த வன்முறைத் தாக்குதல்கள், குழந்தைகள் மற்றும் குடும்பங்களுக்குத் தொடர்ந்து பேரழிவை ஏற்படுத்தி வருவதாகவும் அவ்வறிக்கையில் தனது மிகுந்த வேதனையை வெளிப்படுத்தியுள்ளது யுனிசெஃப் நிறுவனம்

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

26 ஜனவரி 2026, 12:01