தேடுதல்

ஈரானில் நிலவிவரும் அமைதியற்ற சூழல் ஈரானில் நிலவிவரும் அமைதியற்ற சூழல்  

ஈரானில் குழந்தைகளைப் பாதுகாக்க யுனிசெஃப் வேண்டுகோள்!

"அனைத்துக் குழந்தைகளும் வன்முறை மற்றும் பாதிப்புகளில் இருந்து பாதுகாக்கப்பட வேண்டும். அவர்களின் உயிர், சுதந்திரம் மற்றும் அவர்களின் உடல் மற்றும் மன நலம் ஆகியவை எவ்வித ஆபத்திற்கும் உள்ளாக்கப்படக்கூடாது" : யுனிசெஃப் நிறுவனம்.

ஜான்சி ராணி அருளாந்து - வத்திக்கான்

ஈரானில் தொடர்ந்து இடம்பெற்று வரும் பொதுமக்களின் போராட்டங்களுக்கு இடையே, குழந்தைகள் மற்றும் பதின்ம வயதினர் கொல்லப்படுவதும் காயமடைவதும் குறித்த செய்திகள் தங்களுக்கு மிகுந்த கவலையை அளிப்பதாக யுனிசெஃப் நிறுவனம் தெரிவித்துள்ளது.

மத்திய கிழக்கு மற்றும் வட ஆப்பிரிக்க மாநிலத்தின் யுனிசெஃப் நிறுவனத்தின் இயக்குநர் எட்வார்ட் பிக்பெடர் அவர்கள், "பாதிக்கப்பட்ட குடும்பங்களின் நிலை குறித்து நாங்கள் மிகவும் வருந்துகிறோம்" என்றும், "அவர்களின் துயரத்தில் நாங்களும் துணை நிற்கிறோம்" என்றும் தெரிவித்துள்ளார்.

"ஈரானிய அதிகாரிகள், போராட்டத்தில் ஈடுபடுபவர்கள், சமூகங்கள் மற்றும் குடும்பங்கள் என அனைவரும் குழந்தைகளைப் பாதுகாப்பதற்குத் தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் எடுக்க வேண்டும்" என்று கேட்டுக்கொண்டுள்ளார் பிக்பெடர்.

 "பாதுகாப்புப் படையினர் தேவையற்ற அல்லது அளவுக்கு அதிகமான வலிமையைப் பயன்படுத்துவதைத் தவிர்க்க வேண்டும்" என்றும் "குழந்தைகளை அவர்களின் உயிருக்கு ஆபத்தை விளைவிக்கும் அல்லது அவர்களின் சுதந்திரத்தைக் கட்டுப்படுத்தும் எந்தவொரு சூழலிலும் சிக்க வைக்கக்கூடாது" என்றும் வலியுறுத்தியுள்ளார் பிக்பெடர்.

மேலும் "அங்கு நிலவிவரும் தற்போதைய அமைதியற்ற சூழலில், குழந்தைகள் பாதிக்கப்படுவதாகத் தொடர்ந்து வரும் செய்திகள் தங்களை மிகுந்த கவலையடையச் செய்கின்றன" என்றும் குறிப்பிட்டுள்ளார் பிக்பெடர்.

"குழந்தை உரிமைகள் மீதான அனைத்துலக உடன்படிக்கைக்கு இணங்க, ஒவ்வொரு குழந்தையின் உயிர் வாழ்வதற்கான உரிமையும் மதிக்கப்படுவதோடு, அது உறுதிப்படப் பாதுகாக்கப்பட வேண்டும்" என்றும் விண்ணப்பித்துள்ளார் அவர்.

"அனைத்துக் குழந்தைகளும் வன்முறை மற்றும் பாதிப்புகளில் இருந்து பாதுகாக்கப்பட வேண்டும்" என்றும், "குழந்தைகளின் உயிர், சுதந்திரம் மற்றும் அவர்களின் உடல் மற்றும் மன நலம் ஆகியவை எவ்வித ஆபத்திற்கும் உள்ளாக்கப்படக்கூடாது" என்றும் வேண்டுகோள் விடுத்துள்ளது யுனிசெஃப் அமைப்பு.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

13 ஜனவரி 2026, 12:26