தேடுதல்

காசாவில் மக்களின் நிலை காசாவில் மக்களின் நிலை   (ANSA)

போர்நிறுத்தத்திற்கு மத்தியிலும் காசாவில் தொடரும் உயிரிழப்பு!

குழந்தைகளின் பாதுகாப்பை உறுதிப்படுத்தவும், பொதுமக்களின் அவசரத் தேவைகளைப் பூர்த்தி செய்ய எவ்விதக் கட்டுப்பாடுகளும் இன்றி மனிதாபிமான உதவிகளை அனுமதிக்கவும் அனைத்துலகச் சமூகத்திற்கு வலுவான கோரிக்கையை விடுத்துள்ளது யுனிசெஃப் நிறுவனம்.

ஜான்சி ராணி அருளாந்து - வத்திக்கான்

"காசாவில் கடந்த அக்டோபர் மாதத் தொடக்கத்தில் போர்நிறுத்தம் நடைமுறைக்கு வந்தபோதிலும், குழந்தைகளின் பாதுகாப்பு இன்னும் உறுதி செய்யப்படவில்லை" என்று கவலை தெரிவித்துள்ளது யுனிசெஃப் நிறுவனம்.

ஜனவரி 13, செவ்வாயன்று வெளியிட்டுள்ள அதன் அறிக்கையொன்றில் இவ்வாறு கூறியுள்ள அந்நிறுவனம், "உறுதிப்படுத்தப்பட்ட உயிரிழப்புகளில் குறைந்தது 60 சிறுவர்களும் 40 சிறுமிகளும் அடங்குவர்" என்றும், "கள நிலவரப்படி உண்மையான உயிரிழப்புகளின் எண்ணிக்கை இதைவிட அதிகமாக இருக்கக்கூடும், மேலும் நூற்றுக்கணக்கான குழந்தைகள் படுகாயமடைந்துள்ளனர்" என்றும் சுட்டிக்காட்டியுள்ளது.

இதுகுறித்து, ஜெனீவாவில் உரையாற்றிய யுனிசெஃப் அமைப்பின் செய்தித் தொடர்பாளர் ஜேம்ஸ் எல்டர் அவர்கள், "காசாவில் வன்முறையின் தீவிரம் சற்று குறைந்திருந்தாலும், அது முற்றிலுமாக நிற்கவில்லை" என்று கவலை தெரிவித்துள்ளார்.

மேலும், "அங்குள்ள மக்கள் அடிப்படைத் தேவைகளோ பாதுகாப்போ இன்றி  நெருக்கடிகளுக்குள்ளாகி  வாழ்கின்றனர்" என்றும், "தற்போது அங்கு நிலவுவதாகச் சொல்லப்படும் அமைதி என்பது உலகின் வேறு பகுதிகளில் இருந்தால் அது ஒரு பெரும் நெருக்கடியாகக்  கருதப்படும்" என்றும் எச்சரித்துள்ளார் எல்டர்.

தற்போதைய போர்நிறுத்தம் காசா குழந்தைகளின் துயரத்தை உலகத்தின் பார்வையிலிருந்து மறைத்துவிட்டதாகக் கவலை தெரிவித்துள்ளார் எல்டர்.

காசாவிற்குள் அத்தியாவசியப் பொருள்கள் கொண்டு செல்லப்படுவதில் நீடிக்கும் கடும் கட்டுப்பாடுகள் குறித்துப் பெரும் கவலையை வெளிப்படுத்தியுள்ள அந்நிறுவனம், "போர்நிறுத்தம் அறிவிக்கப்பட்ட பின்னரும், இந்தத் தடைகள் மக்களின் உயிர்காக்கும் சேவைகளை முடக்கி வருகின்றன" என்றும் குறிப்பிட்டுள்ளது.

குழந்தைகளின் பாதுகாப்பை உறுதிப்படுத்தவும், பொதுமக்களின் அவசரத் தேவைகளைப் பூர்த்தி செய்ய எவ்விதக் கட்டுப்பாடுகளும் இன்றி மனிதாபிமான உதவிகளை அனுமதிக்கவும் அனைத்துலகச் சமூகத்திற்கு  வலுவான கோரிக்கையை விடுத்துள்ளது யுனிசெஃப் நிறுவனம்.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

14 ஜனவரி 2026, 14:38