ஆப்கானிஸ்தானின் பெண்கள் உரிமை ஆர்வலருக்கு சையத் விருது!
ஜான்சி ராணி அருளாந்து - வத்திக்கான்
2026-ஆம் ஆண்டுக்கான மனித உடன்பிறந்த உறவுக்கான சையத் விருது பல ஆண்டுகளாக நீடித்த மோதல்களை முடிவுக்குக் கொண்டுவந்த அர்மீனியா அஜர்பைஜான் அமைதி ஒப்பந்தம் மற்றும் ஆப்கானிஸ்தான் பெண்களின் கல்விக்காகப் போராடும் உரிமை ஆர்வலர் மற்றும் கல்வியாளர் சர்கா யப்தாலி ஆகியோருக்கு வழங்கப்பட உள்ளது.
அனைத்துலக மனித உடன்பிறந்த உறவு தினத்தை முன்னிட்டு, வரும் பிப்ரவரி 4, புதன்கிழமையன்று அபுதாபியில் உள்ள ஐக்கிய அரபு எமிரேட்ஸின் முதல் அரசுத் தலைவர் ஷேக் சயீத் பின் சுல்தான் அல் நஹ்யான் அவர்கள் நினைவகத்தில் சிறப்பு விருது வழங்கும் விழா நடைபெறவுள்ளது. இது குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு ஜனவரி 19, திங்களன்று வெளியிடப்பட்டது.
இந்த சையத் விருதானது, காக்கசஸ் மாநிலத்தில் பல ஆண்டுகளாக நீடித்த மோதலை முடிவுக்குக் கொண்டுவரும் வகையில், கடந்த 2025 ஆம் ஆண்டு ஆகஸ்ட் 8, வெள்ளியன்று அமெரிக்காவில் அர்மீனியா மற்றும் அஜர்பைஜான் நாடுகளுக்கு இடையே கையெழுத்தான வரலாற்றுச் சிறப்புமிக்க அமைதி ஒப்பந்தத்தை அங்கீகரித்துள்ளது.
"அமைதி என்பது ஒரு கணத்தில் நிகழும் செயலல்ல, அது ஒரு தொடர்ச்சியான பயணம்" என்று வலியுறுத்திய அனைத்துலகக் குழு, "இந்த ஒப்பந்தத்தை உரையாடல், நல்லிணக்கம் மற்றும் இயல்பு நிலைக்குத் திரும்புவதற்கான ஒரு நீடித்த செயல்முறை" என்று பாராட்டியது.
மேலும், அர்மீனியப் பிரதமர் நிக்கோல் பாஷின்யான் மற்றும் அஜர்பைஜான் அதிபர் இலஹாம் அலியேவ் இருவரும் இந்த அங்கீகாரத்தை வரவேற்றுள்ளதுடன் இதன் அடையாள முக்கியத்துவத்தையும், ஷேக் சையத் பின் சுல்தான் அல் நஹ்யானின் பாரம்பரியத்துடனான இதன் இணைப்பையும் சுட்டிக்காட்டியுள்ளனர்.
ஆப்கானிஸ்தானில் பெண் கல்விக்காகத் தொடர்ந்து பாடுபட்டு வரும் சர்கா யப்தாலியின் நீண்டகால அர்ப்பணிப்பு இந்த விருதின் மூலம் அங்கீகரிக்கப்பட்டுள்ளது. இவரது பல்வேறு திட்டங்களின் வாயிலாக, ஓர் இலட்சத்திற்கும் அதிகமான பெண்கள் மற்றும் குழந்தைகளுக்குக் கல்வி, மனநல ஆதரவு மற்றும் அடிப்படைத் தேவைகள் சென்றடைந்துள்ளன.
இது குறித்து கருத்துத் தெரிவித்துள்ள யப்தாலி அவர்கள், "இந்த விருதானது ஆப்கானிஸ்தானியப் பெண்களுக்கு, குறிப்பாகக் கடினமான சூழ்நிலையிலும் கல்வியைத் தொடரும் பெண்களுக்கு, நம்பிக்கை மற்றும் ஊக்கத்தின் வலிமையான செய்தியாக உள்ளது" என்று கூறியுள்ளார்.
இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்