குழந்தைகளுக்கு எதிரான பாலியல் வன்முறை அதிகரிப்பு!
ஜான்சி ராணி அருளாந்து - வத்திக்கான்
டிசம்பர் 30, செவ்வாயன்று, வெளியிட்டுள்ள புதிய அறிக்கையொன்றில், காங்கோ ஜனநாயகக் குடியரசில் குழந்தைகளுக்கு எதிரான பாலியல் வன்முறைகள் பரவலாக இருப்பதாகவும், அங்கு நிலைமை மேலும் மோசமடைந்து வருவதாகவும் கவலை தெரிவித்துள்ளது யுனிசெஃப் நிறுவனம்.
குறிப்பாக, 2025-ஆம் ஆண்டின் முதல் ஒன்பது மாதங்களிலேயே 35,000-க்கும் மேற்பட்ட வன்முறைச் சம்பவங்கள் பதிவாகியுள்ளன என்பதையும் தனது அறிக்கையில் எடுத்துக்காட்டியுள்ளது அந்நிறுவனம்.
2024-ஆம் ஆண்டில் குழந்தைகளுக்கு எதிராகப் பதிவான ஏறத்தாழ 45,000 வழக்குகள் என்பது, அந்த நாடு முழுவதும் நடந்த மொத்த பாலியல் வன்முறைகளில் ஏறக்குறைய 40 விழுக்காடாகும் என்றும், இது கடந்த 2022-ஆம் ஆண்டின் எண்ணிக்கையோடு ஒப்பிடுகையில் மூன்று மடங்கு அதிகரித்துள்ளது என்றும் சுட்டிக்காட்டியுள்ளது அவ்வறிக்கை.
மோதல்கள் நிலவும் கிழக்கு மாநிலங்களில் இந்த நெருக்கடி மிக அதிகமாக இருந்தபோதிலும், தற்போது நகரப் பகுதிகளிலும் வன்முறையற்ற மற்ற இடங்களிலும் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருவதாக உரைக்கிறது அதன் அறிக்கை.
மேலும் வளரிளம் பெண்கள் இதனால் அதிகம் பாதிக்கப்பட்டுள்ளனர் என்றும், சிறுவர்களும் மாற்றுத்திறனாளி குழந்தைகளும் கூட இத்தகைய ஆபத்தான சூழலுக்குத் தள்ளப்பட்டுள்ளனர் என்றும் குறிப்பிடும் அதன் அறிக்கை, பதிவு செய்யப்படும் வழக்குகள் மிகக் குறைவு என்பதால், உண்மையான பாதிப்புகளின் அளவு இதைவிட பல மடங்கு அதிகமாக இருக்கக்கூடும் என்றும் எச்சரிக்கின்றது.
பாதிக்கப்பட்டவர்களுக்கு வழங்கப்படும் உதவிகள் அதிகரிக்கப்பட்ட போதிலும், நிதிப் பற்றாக்குறை மற்றும் அங்கு நிலவும் பாதுகாப்பற்ற சூழல் காரணமாக, பல பாதுகாப்புச் சேவைகள் மூடப்பட வேண்டிய கட்டாயத்திற்குத் தள்ளப்பட்டுள்ளன என்றும், இதனால் இலட்சக்கணக்கான குழந்தைகளின் உயிருக்குப் பாதுகாப்பு அளிக்கும் ஆதரவு ஏதுமின்றித் தவிக்கும் நிலை ஏற்பட்டுள்ளது என்றும் கூறியுள்ளது இவ்வறிக்கை.
அதேவேளையில், பாதிப்புகள் ஏற்படாமல் தடுப்பதற்காக, பாதுகாப்பு அமைப்புகளை வலுப்படுத்தவும், அதற்குப் போதிய நிதியை ஒதுக்கவும் உடனடி நடவடிக்கை எடுக்குமாறு வலியுறுத்தியுள்ளது யுனிசெஃப் நிறுவனம்
இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்