மோதல்களால் அவதிப்படும் குழந்தைகள் மோதல்களால் அவதிப்படும் குழந்தைகள்  

தெற்கு சூடானின் குழந்தைகள் ஆபத்தான நெருக்கடியை எதிர்கொள்கின்றனர்!

"தென்சூடானில் மனிதாபிமானத் தேவைகள் தொடர்ந்து அதிகரித்து வருகின்றன, அங்கு ஏறத்தாழ 93 இலட்சம் மக்களுக்கு அவசர உதவி தேவைப்படுகிறது" : யுனிசெஃப் நிர்வாக இயக்குனர் கேத்தரின் ரூஸ்ஸல்

செல்வராஜ் சூசைமாணிக்கம் - வத்திக்கான்

மோதல்கள் காரணமாக, தெற்கு சூடானில் குழந்தைகளைப் பாதுகாக்க உடனடி மற்றும் கணிசமான முதலீட்டிற்கு யுனிசெஃப் நிர்வாக இயக்குனர் கேத்தரின் ரூஸ்ஸல் அவர்கள் அழைப்பு ஒன்றை விடுத்துள்ளார்.

டிசம்பர் 7, ஞாயிறன்று அறிக்கையொன்றில் இந்த அழைப்பை விடுத்துள்ள ரூஸ்ஸல் அவர்கள், மோதல்கள், இயற்கைப் பேரிடர்கள் மற்றும் பெருமளவிலான இடப்பெயர்ச்சி ஆகியவற்றால் அதிகரிக்கும் ஆபத்துக்கள் குறித்து எச்சரித்துள்ளார்.

​​ஐந்து வயதுக்குட்பட்ட 21 இலட்சத்திற்கும் அதிகமான குழந்தைகள் ஊட்டச்சத்து குறைபாட்டால் பாதிக்கப்படும் ஆபத்தில் இருப்பதாகவும், அதேவேளையில் 28 இலட்ச அளவிலான பள்ளி வயது குழந்தைகள் பள்ளிக்குச் செல்வதில்லை என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

மேலும் இது உலகளவில் மிக உயர்ந்த விகிதங்களில் ஒன்றாகும் என்றும், அனைத்துப் பள்ளிகளிலும் பாதிக்கும் மேற்பட்டவை பாதுகாப்பான வகுப்பறைகள், தகுதிவாய்ந்த ஆசிரியர்கள் அல்லது போதுமான தண்ணீர் மற்றும் நலவாழ்வு வசதிகளைக் கொண்டிருக்கவில்லை என்று கவலை தெரிவித்துள்ளார்.

அங்கு மனிதாபிமானத் தேவைகள் தொடர்ந்து அதிகரித்து வருகின்றன என்றும், ஏறத்தாழ 93 இலட்சம் மக்களுக்கு அவசர உதவி தேவைப்படுகிறது என்று குறிப்பிட்டுள்ளார்.

தெற்கு சூடானின் குழந்தைகளின் எதிர்காலத்தைப் பாதுகாக்கவும், அவர்களுக்கு ஏற்படும் துன்பங்களைத் தடுக்கவும் ஆதரவை அதிகரிக்குமாறு அந்நாட்டு அரசையும், பன்னாட்டுத் துணைவர்களையும் வலியுறுத்தியுள்ளார் அவர்.

தெற்கு சூடான் பெண்களில் ஏறக்குறைய பாதி பேர் இளவயது திருமணத்திற்கு கட்டாயப்படுத்தப்படுவதாலும், 65 விழுக்காட்டுப் பெண்கள் மற்றும் சிறுமிகள் வன்முறை அனுபவங்களைப் புகாரளிப்பதாலும், அங்கே பாதுகாப்பு ஆபத்துகள் அதிகரித்து வருவதாக யுனிசெஃப் எச்சரித்துள்ளது.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

08 டிசம்பர் 2025, 09:02