காசாவில் மக்களின் அவல நிலை காசாவில் மக்களின் அவல நிலை  

காசா குறித்த ஐ.நா- அமைப்புகளின் புதிய அறிக்கை

காசாவில் போர்நிறுத்தத்திற்குப் பிறகு, 7,30,000-க்கும் அதிகமான மக்கள் இடம்பெயர்ந்துள்ள நிலையில், அவர்களில் பலர் தற்காலிக முகாம்களில் தங்கியுள்ளனர் என்றும், அவர்கள் மனிதாபிமான உதவிகளையே பெரிதும் நம்பியிருக்கின்றனர் என்றும் கவலை தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஜான்சி ராணி அருளாந்து - வத்திக்கான்

காசாவில் பஞ்சம் முடிவுக்கு வந்துள்ளதை ஐ.நா-வின் முக்கிய அமைப்புகளான உணவு மற்றும் வேளாண்மை அமைப்பு (FAO), யுனிசெப் (UNICEF), உலக உணவுத் திட்ட அமைப்பு (WFP) மற்றும் உலக நலவாழ்வு அமைப்பு (WHO) ஆகியவை வரவேற்றுள்ளன.

அதேவேளையில், போரால் பாதிக்கப்பட்டுள்ள அம்மக்களுக்கு  உதவிகள் தொடராவிட்டால் இந்த நிலைமை மீண்டும் மோசமடையக்கூடும் என்று அவ்வமைப்புகள் மேலும் கவலை தெரிவித்துள்ளன.

போர்நிறுத்தமும் மேம்பட்ட மனிதாபிமான உதவிகளும் பஞ்சத்தைத் தடுத்து நிறுத்தியுள்ள போதிலும்,பசி, ஊட்டச்சத்துக் குறைபாடு மற்றும் நோய்களின் தாக்கம் இன்னும் நீடிக்கின்றன என்றும்  விவசாயக் கட்டமைப்புகள் பெருமளவில் சிதைக்கப்பட்டுள்ளன என்றும்  அவ்வமைப்புகள் குறிப்பிட்டுள்ளன.

காசாவில் நிலவும் கடும் உணவுப் பற்றாக்குறை குறித்து ஐ.பி.சி வெளியிட்டுள்ள அறிக்கை ஒன்றில் 16 இலட்சம் மக்கள் இன்னும் கடுமையான உணவுத்தட்டுப்பாட்டினால் பாதிக்கப்பட்டுள்ளனர் என்றும்  அங்குள்ள நான்கு மாநிலங்களில் நிலைமை இன்னும் சீரடையாமல் அவசரகால நிலையிலேயே உள்ளது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், அடுத்த ஆண்டு ஏப்ரல் மாதம் வரை, ஒரு இலட்சத்திற்கும் அதிகமான குழந்தைகள் மற்றும் 37,000 கர்ப்பிணி மற்றும் தாய்ப்பாலூட்டும் பெண்கள்  கடுமையான ஊட்டச்சத்துக் குறைபாட்டால் பாதிக்கப்படுவார்கள் என்று எதிர்பார்க்கப்படுவதாகவும் கூறப்பட்டுள்ளது.

போர்நிறுத்தத்திற்குப் பிறகு, 7,30,000-க்கும் அதிகமான மக்கள் இடம்பெயர்ந்துள்ள நிலையில், அவர்களில் பலர் தற்காலிக முகாம்களில் தங்கியுள்ளனர் என்றும், அவர்கள் மனிதாபிமான உதவிகளையே பெரிதும் நம்பியிருக்கின்றனர் என்றும் அவ்வமைப்புகள் தெரிவித்துள்ளது.

உணவுப் பொருள்கள் கிடைப்பது அதிகரித்துள்ள போதிலும், வறுமை காரணமாக பெரும்பாலான குடும்பங்களால் ஊட்டச்சத்து நிறைந்த உணவுகளை வாங்கிப் பயன்படுத்த முடியவில்லை என்றும், மேலும் தூய்மையான குடிநீர், மருத்துவச் சேவைகள் மற்றும் அடிப்படைச் நலவாழ்வு வசதிகளுக்கான தட்டுப்பாடு இன்னும் கவலைக்குரியதாகவே உள்ளது என்றும் கூறும் அவ்வமைப்புகளின் அறிக்கை, மக்களின் வாழ்வாதார வாய்ப்புகளும் தொடர்ந்து முடங்கியே கிடக்கின்றன என்று எடுத்துக்காட்டியுள்ளன.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

20 டிசம்பர் 2025, 13:58