தேடுதல்

காலநிலை பேரழிவுகளால் பாதிக்கப்பட்ட குழந்தைகள் காலநிலை பேரழிவுகளால் பாதிக்கப்பட்ட குழந்தைகள்  

2025-ஆம் ஆண்டு காலநிலை பேரழிவுகளால் குழந்தைகளுக்குப் பாதிப்பு!

குழந்தைகளின் கல்வி, பாதுகாப்பு மற்றும் ஊட்டச்சத்து உரிமைகளைப் பாதுகாக்க உடனடி நடவடிக்கை எடுக்குமாறு அழைப்பு விடுத்துள்ளது Save the Children எனப்படும் உலகளாவிய குழந்தைகள் நல அமைப்பு.

செல்வராஜ் சூசைமாணிக்கம் - வத்திக்கான்

2025-ஆம் ஆண்டில் ஏற்பட்ட அதிகமான காலநிலை பேரழிவுகள், உலகெங்கிலும் உள்ள குழந்தைகளைக் கடுமையாகப் பாதித்துள்ளன என்றும், தெற்கு சூடானில் ஏற்பட்ட வெப்ப அலைகளால் பள்ளிகளை மூட வேண்டிய கட்டாய நிலை ஏற்பட்டது என்றும் கூறியுள்ளது Save the Children எனப்படும் உலகளாவிய குழந்தைகள் நல அமைப்பு.

டிசம்பர் 30, செவ்வாயன்று வெளியிட்டுள்ள அதன் அறிக்கையொன்றில் இவ்வாறு கூறியுள்ள அந்நிறுவனம், ஆசியா மற்றும் பிலிப்பீன்சில் ஏற்பட்ட பேரழிவு தரும் வெள்ளம் மற்றும் புயல்கள் உள்கட்டமைப்பை அழித்து, குடும்பங்களைத் தற்காலிக தங்குமிடங்களுக்குள் தள்ளியது என்றும் தெரிவித்துள்ளது.

கடந்த 30 ஆண்டுகளில் ஒரு நாளைக்கு ஏறத்தாழ 1,36,000 குழந்தைகள் இந்தக் காலநிலை பேரழிவுகளால் பாதிக்கப்பட்டுள்ளனர் என்று கூறும் அதன் அறிக்கை, 2100-ஆம் ஆண்டுக்குள் புவி வெப்பமடைதலை 1.5°C ஆகக் கட்டுப்படுத்தும் பாரிஸ் ஒப்பந்த இலக்கை அடைந்தால், இருபது இலட்சக் குழந்தைகள் வறட்சியின் கடுமையான விளைவுகளைத் தவிர்க்க முடியும் என்று எடுத்துக்காட்டியுள்ளது அவ்வமைப்பு.

ஆசியாவில் வெள்ளம், கரீபியனில் மெலிசா சூறாவளி மற்றும் பிலிப்பீன்சில் ஏற்பட்ட 23 சூறாவளிகள் ஆகியவை ஏறத்தாழ 200 இறப்புகளை ஏற்படுத்தின என்றும் அவ்வறிக்கை உரைக்கின்றது.

மேலும் மடகாஸ்கர் மற்றும் தெற்கு சூடானில் ஏற்பட்ட வறட்சி, சூறாவளி மற்றும் வெப்ப அலைகள் ஊட்டச்சத்துக் குறைபாட்டை மோசமாக்கியது மற்றும் குழந்தைத் தொழிலாளர் மற்றும் இளவயது திருமண ஆபத்துகளை அதிகரித்துள்ளன என்றும் குறிப்பிடுகிறது அதன் அறிக்கை.

இத்தகைய ஆபத்தான சூழ்நிலையில் குழந்தைகளின் கல்வி, பாதுகாப்பு மற்றும் ஊட்டச்சத்து உரிமைகளைப் பாதுகாக்க உடனடி நடவடிக்கை எடுக்குமாறு அழைப்பு விடுத்துள்ளது இந்த உலகளாவிய குழந்தைகள் நல அமைப்பு.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

30 டிசம்பர் 2025, 13:40