வாரம் ஓர் அலசல் - ஏப்ரல் 7. உலக நலவாழ்வு நாள்
கிறிஸ்டோபர் பிரான்சிஸ் - வத்திக்கான்
உலக நலவாழ்வு நாள் என்பது ஒவ்வோர் ஆண்டும் ஏப்ரல் 7ல் கொண்டாடப்படுகின்றது. 1948-ம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்ட உலக நலவாழ்வு அமைப்பு, 1950-ம் ஆண்டு முதல் ஒவ்வோர் ஏப்ரல் மாதம் 7-ம் தேதி, உலக சுகாதார தினமாகக் கடைப்பிடிக்கிறது. இது, ஒவ்வொரு தனி மனிதருக்கும் சுகாதார பாதுகாப்பை அளிக்க வேண்டும் என்பதை வலியுறுத்திக் கொண்டாடப்படுகிறது. ஒவ்வொரு மனிதரும் மனதில் தூய்மையாக இருந்தாலே, இந்த ஒட்டுமொத்த பூமியும் நலம் பெறும் என்பது உண்மை. உடலும் மனமும் தூய்மையாக இருந்தாலே, பெரும்பாலான நோய்கள் நம்மை அணுகாமலிருக்கும் என்பதும் அப்பட்டமான உண்மை.
உணவு, குடிநீர், காற்று, இருப்பிடம், வாழும் முறை என எல்லாவற்றிலும் நலவாழ்வு பேணப்படவேண்டும் என்பதை வலியுறுத்தி, இந்த நாள் 75 ஆண்டுகளாகக் கடைப்பிடிக்கப்பட்டு வந்தாலும், பல நாடுகள் நலவாழ்வைப் பொறுத்தவரையில் தன்னிறைவை எட்டவில்லை என்பதே உண்மை. ஏனெனில், நலவாழ்வு என்பது ஒவ்வொரு மனிதரின் அடிப்படை உரிமை என்பதை அனைவரும் இன்னும் ஏற்றுக்கொள்ளவில்லை.
இவ்வாண்டின் நலவாழ்வு தலைப்பு
இவ்வாண்டின், அதாவது 2025ஆம் ஆண்டின் உலக நலவாழ்வு நாளுக்கானத் தலைப்பாக "நலமான துவக்கங்களும், நம்பிக்கையான வருங்காலங்களும்" என்பது, அதாவது, தாய் மற்றும் சிசுவின் நலம் பற்றியது மையக்கருத்தாக எடுக்கப்பட்டுள்ளது. ஒவ்வொரு தாயும் குழந்தையும் வாழவும் வேண்டும், வளரவும் வேண்டும் என்பதுதான் இங்கு சொல்லப்படுவது.
ஏன் இந்த தலைப்பு என கேள்வி கேட்பவர்களுக்கு உதவும் நோக்கத்தில் அண்மை புள்ளிவிவரங்களையும் உலக நல ஆதரவு அமைப்பு வெளியிட்டு நியாயப்படுத்தியுள்ளது. ஒவ்வோர் ஆண்டும் கர்ப்பகாலத்தின்போது, அல்லது குழந்தை பிறப்பின்போது 3 இலட்சம் பெண்கள் உயிரிழக்கிறார்களாம். அதே வேளை, தாங்கள் பிறந்த ஒரு மாதத்திற்குள்ளேயே இறக்கும் குழந்தைகளின் எண்ணிக்கை 20 இலட்சத்திற்கு மேல். இது தவிர, இறந்தே பிறக்கும் குழந்தைகளின் எண்ணிக்கையும் ஏறக்குறைய 20 இலட்சமாக உள்ளது. இவையெல்லாம் தடுக்க வல்லவையே என்ற உண்மையை முதலில் நாம் உணரவேண்டும். அதாவது, தடுக்கவல்லதாக இருந்தாலும் ஒவ்வொரு 7 வினாடிக்கு ஓர் உயிரை நாம் இழக்க அனுமதித்துக் கொண்டிருக்கிறோம் என்பதே உண்மை. காரணம் என்ன?. 2021ஆம் ஆண்டின் கணக்கெடுப்பின்படி, உலகில் குறைந்தபட்சம் 450 கோடி பேர் அடிப்படை நல ஆதரவுச் சேவைகள் கிடைக்காமலேயே உள்ளனர். இது உலக மக்கள் தொகையில் பாதிக்கு மேல் என்னும்போதுதான் அதிர்ச்சியாக இருக்கின்றது.
இப்படிப்பட்ட நிலையில், நல ஆதரவு வசதிகள் இன்றி நலப்பிரச்சனைகளை அதிக அளவில் எதிர்நோக்கிவரும் நாடுகள் குறித்து நாம் அறிய விரும்பலாம். நல ஆதரவு பொறுத்தவரையில் கடைசியாக நிற்கும் ஐந்து நாடுகளாக, சொமாலியா, லெசோத்தோ, சாடு, தென் சூடான் மற்றும் மத்திய ஆப்ரிக்க குடியரசை உலக மக்கள்தொகை ஆய்வு அமைப்பு சுட்டிக்காட்டுகிறது. இப்போது மறுபக்கத்தை, அதாவது உலகிலேயே நல்ல திறமையான மருத்துவர்களைக் கொண்டிருக்கும் நாடுகளாக, நாம் எதிர்பார்த்ததுபோல் அமெரிக்க ஐக்கிய நாடு முதலில் வருகின்றது. அதற்கு அடுத்து வருவதோ இந்தியா. அதன்பின் வரிசையாக, பிரிட்டன், ஜெர்மனி, பிரான்ஸ், சுவிட்சர்லாந்து, கானடா, இத்தாலி, ஆஸ்திரேலியா,ஆஸ்திரியா போன்றவை வருகின்றன.
சுவர் இருந்தால் தான் சித்திரம்
நோயற்ற வாழ்வே குறைவற்ற செல்வம் என்பார்கள். இன்றைய சூழலில் உடல் நலத்துக்கு நாம் எந்த அளவுக்கு முக்கியத்துவம் கொடுக்கிறோம் என்பதை சிந்திக்க வேண்டும். உணவு மற்றும் வாழ்வியல் மாற்றங்களால் நாளுக்கு நாள் புதிது புதிதான நோய்கள் அறிமுகமாகிக் கொண்டே இருக்கின்றன.
சுவர் இருந்தால் தான் சித்திரம் வரைய முடியும் என்ற பழமொழிக்கு ஏற்ப நோயற்ற ஆரோக்யமான உடல்நலம் இருந்தால் தான் வாழ்வின் எந்த சவாலையும் நாம் எதிர்கொண்டு நிற்க முடியும் என்பதை உணர்ந்து நாம் செயல்பட வேண்டும்.
அண்மை ஆய்வுகளின்படி, உலகம் முழுவதும் ஏறக்குறைய 32 கோடிக்கும் அதிகமானோர் மன அழுத்த நோயால் பாதிக்கப்பட்டுள்ளனர். இது 2005ல் இருந்து 2015 வரை 18 விழுக்காடு அதிகரித்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மன அழுத்த நோயால் ஆண்களைவிட பெண்கள்தான் அதிகளவில் பாதிப்படைகின்றனர். உலகில் உள்ள ஐந்து பெண்களில் ஒருவரும், இருபது ஆண்களில் ஒருவரும் தீவிர மன அழுத்தத்தால் பாதிக்கப்படுகின்றனர். தனி மனிதனுக்கு ஏற்படும் மன அழுத்தம் ஒரு குடும்பத்தையும், சமூகத்தையும் பாதிக்கும். 2015ஆம் ஆண்டு கணக்கெடுப்பின்படி, அதாவது 10 ஆண்டுகளுக்கு முந்தைய கணக்கெடுப்பின்படி, இந்தியாவில் 5 கோடி பேர் மன அழுத்தத்தாலும் 3 கோடி பேர் மனநலக் கோளாறு நோய்களாலும் பாதிக்கப்பட்டுள்ளனர். மனநலம் பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்துவதும் அதைச் சுற்றியுள்ள களங்கத்தை அகற்றுவதும் முக்கியமாகிறது.
நாம்தான் காரணமா?
‘இயற்கையை வணங்கு’ என்று நம் முன்னோர் அறிவுறுத்தியதை அறவே புறக்கணித்து விட்டது இன்றைய சமூகம். நம்மை அறியாமலேயே, நாம் எதையும் கேட்காமலேயே, நாம் உயிர் வாழ எல்லா நன்மைகளையும் செய்து வருகிறது இயற்கை. ஆனால், நாம் இயற்கையை நம் காலடியில் போட்டு மிதித்து நசுக்கிக் கொண்டிருக்கிறோம்.
விளைநிலங்களை எல்லாம் இன்று துண்டு போட்டு வீட்டு மனைகளாக்கி விட்டோம். மணல் குவாரி, மண் குவாரி, கிரானைட் குவாரி மூலம் பூமியைக் குடைந்து வருகிறோம். பிளாஸ்டிக் பொருட்களைப் பயன்படுத்தி தூக்கி எறிந்து என்றுமே மக்காத குப்பையாக மாற்றி பூமியின் வளத்தை அழித்து வருகிறோம். இது மட்டுமா? தண்ணீரில் கலப்படம், குடிநீரில் சாக்கடை நீர் கலப்பது, ஆற்று நீரில் சாயப்பட்டறை மற்றும் தொழிற்சாலையின் கழிவுநீர் கலப்பது போன்றவைகளை அனுமதித்து, காலரா, மலட்டுத்தன்மை மற்றும் தோல் நோய்களுக்கு வழிவகுத்தோம். வாகனங்களிலிருந்தும் தொழிற்சாலைகளில் இருந்தும் வரும் புகை, புகைபிடிப்பதனால் உண்டாகும் புகை, இவைபோன்ற பல காரணங்களால் சுத்தமான காற்று அசுத்தமடைய நாமே காரணமானோம். ஆஸ்துமா, மூச்சுத் திணறல், நுரையீரல் கோளாறுகள் போன்ற நோய்களுக்கு வழிவிட்டோம்.
என்னச் செய்யப் போகிறோம்?
முடிந்த அளவு செயற்கை உரங்களைத் தவிர்த்து, இயற்கை உரங்களை உபயோகிக்க வேண்டும். உணவு முறையில் சிறு தானியங்களுக்கு முக்கியத்துவம் தர வேண்டும். பிளாஸ்டிக் பொருட்களை அறவே ஒழிக்க வேண்டும். புகைப்பிடிப்பதை ஒழிக்க உறுதியெடுப்போம். காடுகளை அழிப்பதைத் தவிர்ப்போம். வீடு, பள்ளி, கல்லூரி, அலுவலகங்கள், அனைத்து பொது இடங்களிலும் மரம் நடுதலைக் கட்டாயமாக்குவோம். மழைநீரை சேகரிப்போம். வீட்டிலும், வெளியிலும் ஒலி இல்லா சமுதாயத்தை உருவாக்க அனைவரும் இணைந்து பாடுபடுவோம்.
இன்றைய சமுதாயத்தில் ஒரு பகுதியினர், பண்டைய இந்திய பழக்கங்களில் சிலவற்றை பின்பற்றுவதன் வழியாக, நமது ஒட்டுமொத்த ஆரோக்கியத்தையும் நல்வாழ்வையும் மேம்படுத்தலாம் என நம்பிச் செயல்படுகின்றனர். அவர்களின் கருத்தெல்லாம், உலகம் முன்னேறுவதற்கு, முன்னேற்றமும் தொழில்நுட்பமும் தேவை, ஆனால் நம் வாழ்வையும் ஆரோக்கியத்தையும் மாற்றுவதற்கு நம் முன்னோர்களின் அனுபவத்தையும் ஞானத்தையும் பயன்படுத்துவதே சிறந்த வழி என்பதாக உள்ளது. இவர்கள், தண்ணீர் குடிக்க செம்பு பாத்திரங்களைப் பயன்படுத்துகிறார்கள். சமைப்பதற்கும் சாப்பிடுவதற்கும் மண் பாண்டங்களைப் பயன்படுத்துகிறார்கள். வீட்டில் சாப்பிடுகிறார்கள், மற்றும் குப்பை உணவை, அதாவது ஜங்க் உணவைத் தவிர்க்கிறார்கள். இயற்கை தயாரிப்புகளைப் பயன்படுத்துவது மட்டுமல்ல, தரையில் கால் மேல் கால் போட்டு அமர்ந்து உணவு உண்ணப் பழகுகிறார்கள். பதட்டம் மற்றும் மன அழுத்தம் என்ற விளைவுகளைத் தவிர்க்க சரியான அளவு, அதுவும் சரியான நேரத்தில் தூங்குகிறார்கள். இன்றைய காலகட்டத்தில் கைபேசிகள் பலரின் தூக்கத்துக்கு எதிராக இருக்கின்றன என்பதை உணர்ந்ததால் அதனை அளவோடு பயன்படுத்துகிறார்கள். வீட்டில் தாவரங்களை வளர்க்கும் பழங்கால நடைமுறைக்கு மீண்டும் உயிர் கொடுக்கிறார்கள். வீட்டு வேலைகள், உடற்பயிற்சிகள் போன்ற சுறுசுறுப்பான வாழ்க்கை முறைக்கு இவர்கள் திரும்பிக் கொண்டிருக்கிறார்கள். இவர்களின் குழந்தைகள் பல நண்பர்களோடு வெளியில் விளையாடிக் கொண்டிருக்கிறார்கள். இக்குழந்தைகள் கணினிகள், கைபேசிகள் மற்றும் தொலைக்காட்சிப் பெட்டிகளில் தங்கள் நேரத்தை வீணாக்குவதில்லை. இதனால், உடல் பருமன், இதய நோய் மற்றும் மன அழுத்தம் போன்ற உடல்நலப் பிரச்சினைகளுக்கு இவர்கள் உள்ளாவதில்லை.
நடைபயிற்சி அல்லது மிதமான உடற்பயிற்சி போன்ற எளிய நடவடிக்கைகள் இவர்களின் வாழ்வில் பெரிய மாற்றத்தைக் கொணர்கின்றன. ஆரோக்யமான உணவை சரியான நேரத்துக்கு உட்கொள்வதோடு, தங்கள் குழந்தைகளுக்கும் அதை கற்றுக் கொடுக்கிறார்கள். பழங்கள், காய்கறிகளை அதிகம் சேர்த்துக் கொள்வதோடு, உப்பு மற்றும் சர்க்கரை அளவை கட்டுப்பாட்டுக்குள் வைத்திருக்கத் தெரிந்திருக்கிறார்கள். சரியான இடைவெளியில் உடல் பரிசோதனை செய்து கொண்டு அதற்கு ஏற்றார்போல் உடல்நலத்தை கவனித்துக் கொள்ளக் கற்றிருக்கிறார்கள். உடலில் நீர்ச்சத்தை சீராக வைத்திருத்தலுக்கு சரியான நேரத்தில் தேவையான தண்ணீர் குடிப்பதும், கால நிலைக்கு ஏற்றவாறு பழச்சாறு குடிப்பதும் அவசியம் என்பதை உணர்ந்து செயல்படுகிறார்கள். எல்லாவற்றிற்கும் மேலாக, புகை, மது போன்ற பழக்கங்களை அடியோடு விட்டொழித்து, வருங்காலத் தலைமுறைக்கு ஓர் எடுத்துக்காட்டாக நிற்கிறார்கள்.
இவர்களின் வழியை நாம் பின்பற்ற ஆவல் கொள்கிறோமா? அல்லது இன்றைய நவீன உலகின் வழியையா? வருங்காலம் நம் கையில்தான் உள்ளது.
இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்