உக்ரைன் ஏவுகணைத் தாக்குதலில் ஒன்பது குழந்தைகள் இறப்பு
மெரினா ராஜ் – வத்திக்கான்
கிரிவி ரிஹ் நகரில் நடந்த கொடூரமான ஏவுகணைத் தாக்குதலில் ஏறக்குறைய ஒன்பது குழந்தைகள் கொல்லப்பட்டுள்ளனர் என்றும், மூன்று மாதக் குழந்தை உள்பட பலர் காயமடைந்துள்ளனர் என்றும் யுனிசெஃப் அறிக்கையில் தெரிவித்துள்ளார் ரெஜினா தே டோமினிசிஸ்.
ஐக்கிய நாடுகள் அவையின் தரவுகளின்படி, 2022-ஆம் ஆண்டு பிப்ரவரி முதல், 2,500 க்கும் மேற்பட்ட உக்ரைன் குழந்தைகள் போரினால் கொல்லப்பட்டுள்ளனர் மற்றும் காயமடைந்துள்ளனர் என்று குறிப்பிட்டு ஏப்ரல் 5, சனிக்கிழமை வெளியிட்ட அறிக்கையில் இவ்வாறு தெரிவித்துள்ளார் ஐரோப்பா மற்றும் மத்திய ஆசியாவிற்கான யுனிசெஃப் மண்டல இயக்குநர் ரெஜினா தே டோமினிசிஸ்.
பொதுமக்கள் வாழும் பகுதிகளில் தாக்குதல்களை உடனடியாக நிறுத்த அழைப்பு விடுத்துள்ள யுனிசெஃப் அமைப்பானது, எதிர்காலம் திருடப்படுகின்றது என்பதற்கு அடையாளமாக ஒவ்வொரு குழந்தையும் கொல்லப்படும் செயல் இருக்கின்றது என்றும் கூறியுள்ளது.
உக்ரைன் குழந்தைகளுக்கு அமைதி தேவை, பாதுகாப்பு தேவை என்று வலியுறுத்தியுள்ள ரெஜினா அவர்கள், மற்றொரு துன்பம் மற்றும் துயரத்திற்காக அல்ல, மாறாக, எதிர்நோக்கிற்கான அடையாளத்திற்காக அக்குழந்தைகள் காத்திருக்கின்றார்கள் என்றும் குறிப்பிட்டுள்ளார்.
மக்கள் தொகை அதிகம் கொண்ட பகுதிகளில் வெடிக்கும் தன்மையுள்ள ஆயுதங்களைப் பயன்படுத்தி மனித உயிர்களைத் தாக்குவது மிகவும் கொடியது என்றும், குழந்தைகளுக்கு அதிக அளவில் பாதிப்பை ஏற்படுத்தும் இவ்வன்முறைச் செயல் நிறுத்தப்பட வேண்டும் என்றும் வலியுறுத்தியுள்ளார் ரெஜினா.
மேலும், பொதுமக்கள் வாழும் இடங்கள் மற்றும் ஒன்று கூடும் பொதுவான கூடங்கள் ஆகியவற்றின் மீதான தாக்குதல்கள் முடிவுக்கு வர வேண்டும் என்றும் எடுத்துரைத்துள்ளார் ரெஜினா.
இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்