உலகின் மிகப்பெரிய மனிதாபிமான பேரழிவை ஏற்படுத்திய சூடான் போர்
மெரினா ராஜ் - வத்திக்கான்
இரண்டு ஆண்டுகளாக சூடானில் நடைபெற்று வரும் போரினால் கொலை, வறுமை, அழிவு ஆகியவை அதிகமான அளவில் ஏற்பட்டுள்ளன என்றும், 3 கோடிக்கும் அதிகமான மக்கள், அதாவது மொத்த மக்கள் தொகையில் மூன்றில் இரண்டு பங்கு பேர் அவசர உதவி தேவைப்படும் நிலையில் இருக்கின்றனர் என்றும் தெரிவித்துள்ளது காரித்தாஸ் அமைப்பு.
ஏப்ரல் 14, திங்கள்கிழமை வெளியிடப்பட்ட அறிக்கையில் இவ்வாறு தெரிவித்துள்ள சூடான் காரித்தாஸ் அமைப்பானது, ஏப்ரல் 15, செவ்வாய்க்கிழமையுடன் சூடானில் போர் தொடங்கி இரண்டு ஆண்டுகள் நிறைவுறும் வேளையில் இப்போரானது உலகின் மிகப்பெரிய மனிதாபிமான பேரழிவினை ஏற்படுத்தியுள்ளது என்றும் எடுத்துரைத்துள்ளது.
கார்ட்டூம் மற்றும் தர்பூருக்கு இடையில், சூடான் ஆயுதப்படைகள் (SAF) மற்றும் விரைவு ஆதரவுப் படைகள் (RSF) இடையேயான மோதல், முழு நகரங்களையும் இடிபாடுகளின் குவியல்களாக மாற்றியுள்ளது என்றும், 86 இலட்சத்திற்கும் அதிகமான மக்கள் நாட்டிற்குள்ளேயே இடம்பெயர்ந்துள்ளனர் என்றும் அறிவுறுத்தியுள்ளது.
ஏறக்குறைய 39 இலட்சம் மக்கள் புலம்பெயர்ந்து அண்டை நாடுகளுக்கு தப்பிச் செல்ல கட்டாயப்படுத்தப்பட்டுள்ளனர் என்றும், இப்போரினால் அதிகமான பாதிப்புக்கு உள்ளாபவர்கள் குழந்தைகளும் பெண்களும் என்றும் அறிவித்துள்ளது காரித்தாஸ் அமைப்பு.
1கோடியே 70 இலட்சம் குழந்தைகள் கடந்த ஓராண்டிற்கும் மேலாக பள்ளிக்குச் செல்ல இயலவில்லை, 37 இலட்சம் குழந்தைகள் கடுமையான ஊட்டச்சத்து குறைபாட்டால் பாதிக்கப்பட்டுள்ளனர் என்றும், ஐந்து வயதுக்குட்பட்ட மூன்றில் ஒரு குழந்தை தாமதமாக வளர்ச்சியடையும் நிலையில் இருக்கின்றது என்றும் குறிப்பிட்டுள்ளது காரித்தாஸ்.
போரின் மிகக் கொடூரமான விளைவுகளில் ஒன்றான பசியினை ஒவ்வொரு நாளும் 2 கோடியே 40 இலட்சம் மக்கள் எதிர்கொள்கின்றனர் என்றும், விவசாயம் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளதால் மக்களுக்கு மனிதாபிமான உதவிகளை வழங்க இயலாத சூழல் ஏற்பட்டுள்ளது என்றும் தெரிவித்துள்ளது.
60 விழுக்காடு மக்கள் மருத்துவ வசதிகள் இன்றி பாதிக்கப்படுகின்றனர் என்றும், காலரா, மலேரியா, டெங்கு ஆகியவை பரவுவதால், மக்கள் மிகவும் துன்புறுகின்றனர் என்றும் எடுத்துரைத்துள்ள காரித்தாஸ் அமைப்பானது, துன்புறும் மக்களுக்கு உள்ளூர் அமைப்புக்கள் மற்றும் பன்னாட்டு நிறுவனங்களின் உதவியுடன் காரித்தாஸ் அமைப்பானது உதவி வருகின்றது என்றும் தெரிவித்துள்ளது.
இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்