சூடான் மோதலில் 1 கோடியே 20 இலட்சத்திற்கும் அதிகமான மக்கள் இடம்பெயர்வு!
செல்வராஜ் சூசைமாணிக்கம் - வத்திக்கான்
கடந்த 2023-ஆம் ஆண்டு ஏப்ரல் 15-ஆம் தேதியன்று சூடானில் மோதல் தொடங்கியதிலிருந்து, 1 கோடியே 20 இலட்சத்திற்கும் அதிகமான மக்கள் இடம்பெயர்ந்துள்ளனர் என்றும், இதில் ஏறத்தாழ 40 இலட்சம் பேர் ஏற்கனவே மன அழுத்தத்தில் அண்டை நாடுகளுக்கு இடம்பெயர்ந்து சென்றுள்ளனர் என்றும் கூறுகிறது COOPI எனப்படும் பன்னாட்டு மனிதாபிமான அமைப்பு.
ஏப்ரல் 10, வியாழக்கிழமை இன்று இந்தத் தகவலை அறிக்கையொன்றில் வழங்கியுள்ள இவ்வமைப்பு, சூடானின் மக்கள்தொகையில் மூன்றில் ஒரு பங்கு மக்கள் தற்போது இடம்பெயர்ந்துள்ளனர் என்றும், அவர்களில் பாதி பேர் குழந்தைகள் என்றும் பெரும் கவலை ஒன்றையும் வெளிப்படுத்தியுள்ளது.
மேலும் இந்தப் போர் கடுமையான உணவு மற்றும் தண்ணீர் பற்றாக்குறையை ஏற்படுத்தியுள்ளது என்றும், இதனால் 2 கோடியே 40 இலட்சம் மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர் என்றும் எடுத்துக்காட்டியுள்ளது இவ்வமைப்பு.
அதேவேளையில், கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ள பகுதிகளில் 25 விழுக்காடு நலவாழ்வு வசதிகள் மட்டுமே செயல்பாட்டில் உள்ளன என்றும், அங்கு நிலவிவரும் மோசமான சூழ்நிலைகள் காரணமாக காலரா, டெங்கு மற்றும் மலேரியா உள்ளிட்ட நோய்களின் பரவல் அதிகரித்து வருகிறது என்றும் சுட்டிக்காட்டியுள்ளது.
இந்நிலையில், இதுகுறித்துக் கருத்துத் தெரிவித்துள்ள COOPI அமைப்பின் இயக்குனர் என்னியோ மிக்கோலி அவர்கள், இந்தப் போர் நிறைந்த சூழலில், சூடானின் நெருக்கடி உலக அரங்கில் பெரும்பாலும் புறக்கணிக்கப்படுகிறது என்று எச்சரித்துள்ளார்.
மேலும் கடந்த இரண்டு ஆண்டுகளில், இந்த மோதலில் ஏறக்குறைய 29,000 பேர் கொல்லப்பட்டுள்னனர் என்றும், 480 விழுக்காடு அளவிற்கு குழந்தைகளுக்கு எதிரான கடுமையான விதி மீறல்கள் அதிகரித்துள்ளன என்றும் பெரும் கவலை தெரிவித்துள்ளார் மிக்கோலி.
இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்