கிழக்கு காங்கோவில் அதிகரிக்கும் குழந்தைகளுக்கு எதிரான வன்முறை
மெரினா ராஜ் - வத்திக்கான்
கிழக்கு காங்கோ ஜனநாயகக் குடியரசு நாட்டில், அரைமணி நேரத்திற்கு ஒரு முறை, ஒரு குழந்தை வன்முறையால் பாதிக்கப்படுகின்றது என்றும், நிதி நெருக்கடி அதிகரித்து வரும் காலத்தில், நாட்டில் வன்முறையும் அதிகரித்து வருகின்றது என்றும் அறிக்கை ஒன்றில் தெரிவித்துள்ளார் James Elder
ஏப்ரல் 12, சனிக்கிழமை ஜெனீவாவில் நடைபெற்ற பலாய்ஸ் மாநாட்டில் குழந்தைகள் நலன் மற்றும் பாதுகாப்பு பற்றி எடுத்துரைத்த அறிக்கையில் இவ்வாறு தெரிவித்துள்ளார் யுனிசெஃப் குழந்தைகள் நல அமைப்பின் செய்தித் தொடர்பாளர் James Elder.
குழந்தைகளுக்கு எதிரான பாலியல் வன்முறை விழுக்காடு, இதுவரை இல்லாத அளவுக்கு அதிகமாக உள்ளது என்றும், இந்த (2025) ஆண்டு ஜனவரி மற்றும் பிப்ரவரி மாதங்களில் மட்டும் பதிவான ஏறக்குறைய 10,000 பாலியல் வன்கொடுமை மற்றும் பாலியல் வன்முறை வழக்குகளில் பாதிக்கப்பட்டோர் 35 முதல் 45 விழுக்காடு வரை குழந்தைகள் தான் என்றும் அவ்வறிக்கையில் எடுத்துரைத்துள்ளார் Elder.
கிழக்கு காங்கோ ஜனநாயகக் குடியரசில் ஒவ்வொரு அரை மணி நேரத்திற்கும் ஒரு குழந்தை பாலியல் வன்கொடுமை செய்யப்படுகின்றது என்றும், குடும்பங்களையும் சமூகங்களையும் அழிக்கும் இச்செயல் வன்முறை அதிகரிப்பதற்கான வழிமுறை மற்றும் போரின் ஆயுதம் என்று குறிப்பிட்டுள்ளார் எல்டர்.
ஏறக்குறைய இருபது இலட்சம் குழந்தைகள் ஊட்டச்சத்து குறைபாடு உடையவர்களாக இருக்கின்றனர் என்றும், ஏறக்குறைய 5 இலட்சம் குழந்தைகளுக்கு போதுமான மற்றும் பாதுகாப்பான நீர் இல்லை என்றும் தெரிவித்துள்ளார் எல்டர்.
அச்சம், அவமானம், பாதுகாப்பின்மை ஆகியவற்றை குழந்தைகளிடத்தில் ஏற்படுத்தும் இவ்வன்முறையானது நம் உள்ளத்தைத் தொட வேண்டும் என்று வலியுறுத்தியுள்ள எல்டர் அவர்கள், குழந்தைகள் பாதுகாப்பிற்கான அவசர மற்றும் கூட்டு நடவடிக்கையை செயல்படுத்துவதை நாம் கட்டாயப்படுத்த வேண்டும் என்றும் சுட்டிக்காட்டியுள்ளார்.
திறமையான மற்றும் இரக்கமுள்ள சமூகப் பணியாளர்கள் UNICEF- இன் முதுகெலும்பாக உள்ளனர் என்றும், வன்முறையால் பாதிக்கப்பட்டு உயிர் பிழைத்தவர்களுக்குப் பாதுகாப்பு, மாண்பு மற்றும் நீதியை வழங்கி வருகின்றார்கள் என்றும் தெரிவித்துள்ள எல்டர் அவர்கள், பாலியல் வன்கொடுமையால் பாதிக்கப்பட்டவர்களைக் குணப்படுத்துவதற்கு சிறப்பு கவனம் கொடுத்து வழிநடத்துகிறார்கள் என்றும் எடுத்துரைத்துள்ளார்.
இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்