தென் கொரியாவில் முதல் கிறிஸ்தவ–கன்பூசிய கருத்தரங்கு
அபிசேக் ராஜா அலங்காரம் - வத்திக்கான்
முதல் கிறிஸ்தவ-கன்பூசிய தத்துவம் பற்றிய கருத்தரங்கு தென் கொரியாவின் சியோலில் உள்ள சோகாங் பல்கலைக்கழகத்தில் (Sogang University) ஆகஸ்ட் 4 மற்றும் 5 ஆகிய நாள்களில் இடம்பெற உள்ளது.
பல்சமய உரையாடல்களுக்கான திருப்பீடத் துறை ஏற்பாடு செய்துள்ள இக்கருத்தரங்கில், கிறிஸ்தவ மற்றும் கன்பூசிய மரபுகளைச் சேர்ந்த சமயத் தலைவர்கள், அறிஞர்கள், பிரதிநிதிகள் பங்கேற்கின்றனர். இக்கருத்தரங்கு, கொரிய கத்தோலிக்க ஆயர்கள் பேரவை, சோகாங் பல்கலைக்கழகம் மற்றும் கொரிய கன்பூசிய கழகம் ஆகியவற்றின் ஒத்துழைப்புடன் நடத்தப்படுகிறது.
“புதிய வானம், புதிய பூமி மற்றும் டடோங் (சிறந்த நல்லிணக்கமும் ஒற்றுமையும்): இலட்சிய சமூகத்தை உருவாக்குவதற்கான கிறிஸ்தவ–கன்பூசிய உரையாடல்” என்ற கருப்பொருளில் நடைபெறும் இக்கருத்தரங்கு, இன்றைய உலகளாவிய சவால்களை எதிர்கொள்வதில் கிறிஸ்தவமும் கன்பூசிய மரபும் எவ்வாறு இணைந்து செயல்பட முடியும் என்பதை ஆராய்வதை நோக்கமாகக் கொண்டுள்ளது.
இந்த இரண்டு மரபுகளும் வெவ்வேறு இறையியல் மற்றும் தத்துவ அடித்தளங்களில் வேரூன்றியிருந்தாலும், மனித மாண்பிற்கான மரியாதை, அறநெறி சார்ந்த ஒருமைப்பாடு, பொறுப்பான தலைமைத்துவம் மற்றும் பொது நலம் உள்ளிட்ட பொதுவான விழுமியங்களைக் கொண்டுள்ளன என்பதை ஏற்பாட்டாளர்கள் வலியுறுத்தினர்.
சமூகப் பிளவு, அறநெறி சார்ந்த நிச்சயமற்ற தன்மை, சுற்றுச்சூழல் சீரழிவு மற்றும் அமைதிக்கான அச்சுறுத்தல்கள் போன்ற முக்கியப் பிரச்சினைகள் குறித்து பங்கேற்பாளர்கள் விவாதிக்கும் அதே வேளையில், மிகவும் நீதியான, அமைதியான மற்றும் மனிதாபிமானமிக்க சமூகத்திற்கு இவ்விரு மரபுகளும் எவ்வாறு பங்களிக்க முடியும் என்பதற்கான வழிகளையும் அவர்கள் அடையாளம் காண்பார்கள்.
கல்வி, நெறிமுறை உருவாக்கம் மற்றும் அமைதியைக் கட்டியெழுப்புதல் ஆகிய துறைகளில் கிறிஸ்தவ–கன்பூசிய ஒத்துழைப்பை வலுப்படுத்தும் கூட்டு அழைப்புடன் இக்கருத்தரங்கு நிறைவடையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இந்தத் தொடக்கக் கருத்தரங்கு, கிறிஸ்தவர்களுக்கும் கன்பூசிய மரபினரைப் பின்பற்றுவோருக்கும் இடையிலான உரையாடல் மற்றும் ஒத்துழைப்பிற்கான நீடித்த அடித்தளத்தை உருவாக்கி, ஒருவர் மற்றவரை புரிந்து கொள்ளும் மனப்பான்மையையும் உலகளாவிய பொதுநலனையும் மேம்படுத்தும் என்று ஏற்பாட்டாளர்கள் நம்பிக்கை தெரிவித்துள்ளனர்.
இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்.