வத்திக்கான் தோட்டம் 100 விழுக்காடு இயற்கை முறைக்கு மாற்றம்!
ஜான்சிராணி அருளாந்து - வத்திக்கான்
திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் வெளியிட்ட இறைவா உமக்கே புகழ் சுற்றுச்சூழல் திருமடலின் வழிகாட்டுதலின்படி, வத்திக்கான் தோட்டங்களில் உள்ள Mater Ecclesiae துறவுமடத்திற்கு அருகிலுள்ள காய்கறித் தோட்டம் முழுமையாக இயற்கை முறையில் பராமரிக்கப்படுகிறது.
அதிகபட்ச விளைச்சலைப் பெறுவதைவிட, இயற்கையான வளர்ச்சிச் சுழற்சிகள், மண்ணின் வளம் மற்றும் உயிரினப் பன்மைத்தன்மையைப் பாதுகாப்பதற்கு இத்தோட்டத்தில் முக்கியத்துவம் அளிக்கப்படுகிறது. பயிர்ச் சுழற்சி முறை, சான்றளிக்கப்பட்ட இயற்கை உரங்கள் மற்றும் தாவரப் பாதுகாப்புப் பொருட்களின் குறைந்த பயன்பாடு போன்ற முறைகள் கடைப்பிடிக்கப்படுகின்றன. மண்ணின் வளத்தை இயற்கையாக அதிகரிக்க பருப்பு வகைப் பயிர்களும் பயன்படுத்தப்படுகின்றன. மேலும், தக்காளிப் பயிர்களுக்கு கடற்பாசியை அடிப்படையாகக் கொண்ட உரமும் தற்போது பரிசோதிக்கப்பட்டு வருகிறது.
ஏறத்தாழ 400 சதுர மீட்டர் பரப்பளவைக் கொண்ட இத்தோட்டத்தை அனுபவமிக்க தோட்டப் பணியாளர் ஒருவர் பராமரித்து வருகிறார். அவருக்கு இளம் பணியாளர்களும் உதவி செய்து, பாரம்பரிய தோட்டக்கலைத் திறன்களைக் கற்றுக்கொள்கின்றனர். பருவநிலைக்கு ஏற்ப எந்தப் பயிர்கள் தேவை என்பதை துறவுச்சகோதரிகள் தெரிவிக்கின்றனர். நீர்ப்பாசனமும் இன்றளவும் கைகளால் மேற்கொள்ளப்படுகிறது.
இத்தோட்டத்தில் பருவகால காய்கறிகள், மூலிகைகள், பழங்கள் மற்றும் சிட்ரஸ் வகைப் பழங்கள் விளைவிக்கப்படுகின்றன. ஏறத்தாழ 150 ஆண்டுகள் பழமையான சிட்ரஸ் மரங்கள் எந்தவித இரசாயனப் பொருட்களுமின்றி பராமரிக்கப்படுகின்றன. அவற்றின் பழங்கள் பழச்சாறுகள், பழப்பதப்படுத்தல்கள் மற்றும் இனிப்புப் பண்டங்கள் தயாரிக்கப் பயன்படுத்தப்படுகின்றன. இங்கு விளையும் பொருட்கள் Casa Dono di Maria போன்ற தொண்டு நிறுவனங்களுக்கும் வழங்கப்படுகின்றன.
இந்தத் தோட்டத்தின் வரலாறு 800 ஆண்டுகளுக்கும் மேலானது. 13ஆம் நூற்றாண்டில் திருத்தந்தை மூன்றாம் நிக்கோலஸ் அவர்கள் வத்திக்கான் மதில்களுக்குள் பழத்தோட்டத்தையும் காய்கறித் தோட்டத்தையும் அமைத்தார்.
இன்று, இத்தொன்மையான தோட்டம் உணவு உற்பத்தியைத் தொடர்வதோடு, சுற்றுச்சூழல் பொறுப்பு, நிலைத்த வேளாண்மை மற்றும் படைப்பைப் பாதுகாத்தல் ஆகியவற்றுக்கான நடைமுறை சாட்சியாகவும் திகழ்கிறது.
இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்.