தேடுதல்

கிறிஸ்தவ–கன்பூசிய உரையாடல் கிறிஸ்தவ–கன்பூசிய உரையாடல் 

நல்லிணக்கமான உலகை உருவாக்க கிறிஸ்தவ–கன்பூசிய உரையாடல் அவசியம்!

தென் கொரியாவின் சியோலில் நடைபெற்ற முதல் கிறிஸ்தவ–கன்பூசிய உரையாடல் கருத்தரங்கில் உரையாற்றிய பல்சமய உரையாடலுக்கான திருப்பீடத்துறையின் தலைவர் கர்தினால் ஜார்ஜ் ஜேக்கப் கூவக்காட், கிறிஸ்தவமும் கன்பூசியமும் வெவ்வேறு மரபுகளைச் சார்ந்தவையாக இருந்தாலும், நீதி, அமைதி, நல்லிணக்கம் மற்றும் பொது நன்மை ஆகிய பொதுவான விழுமியங்களை முன்னெடுக்கின்றன என்று தெரிவித்தார்.

அபிசேக் ராஜா அலங்காரம் - வத்திக்கான்

"கிறிஸ்தவத்தின் நோக்கமும், கன்பூசிய இலட்சியமும் வெவ்வேறு மரபுகளில் இருந்து வந்தாலும், அவை இரண்டும் நீதி, அமைதி, நல்லிணக்கம் மற்றும் பொது நன்மையை ஊக்குவிக்கின்றன" என்று கர்தினால் ஜார்ஜ் ஜேக்கப் கூவக்காட் அவர்கள் தெரிவித்துள்ளார்.

தென் கொரியாவின் சியோலில் உள்ள சோகாங் பல்கலைக்கழகத்தில், ஆகஸ்ட் 4, செவ்வாய்க்கிழமையன்று தொடங்கிய முதல் கிறிஸ்தவ–கன்பூசிய உரையாடல் கருத்தரங்கைத் தொடங்கி வைத்து உரையாற்றிய, பல்சமய உரையாடலுக்கான திருப்பீடப் பேரவையின் தலைவர் கர்தினால் ஜார்ஜ் ஜேக்கப் கூவக்காட் அவர்கள் இவ்வாறு கூறியுள்ளார்.

இந்தக் கருத்தரங்கில் பல்வேறு நாடுகளைச் சேர்ந்த கத்தோலிக்க மற்றும் கன்பூசிய அறிஞர்கள், மதத் தலைவர்கள் மற்றும் உரையாடல் நிபுணர்கள் ஒன்றிணைந்துள்ளனர். வத்திக்கானின் பல்சமய உரையாடலுக்கான திருப்பீடத்துறை, சுங்க்யுங்குவான் கன்பூசிய கழகம், கொரியாவின் கத்தோலிக்க ஆயர் பேரவை மற்றும் சோகாங் பல்கலைக்கழகம் ஆகியோரால் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள இந்த இரண்டு நாள் கருத்தரங்கம், மிகவும் இணக்கமான உலகத்தை உருவாக்குவதில் கவனம் செலுத்துகிறது.

இந்நிகழ்வைத் தொடங்கி வைத்துப் பேசிய பல்சமய உரையாடலுக்கான திருப்பீடத்துறையின் தலைவர் கர்தினால் கூவக்காட் அவர்கள், "புதிய வானம் மற்றும் புதிய பூமி" என்ற கிறிஸ்தவ நோக்கமும், "டடோங்" (மாபெரும் ஒருமைப்பாடு) என்ற கன்பூசிய இலட்சியமும் வெவ்வேறு மரபுகளில் இருந்து வந்தாலும், அவை இரண்டும் நீதி, அமைதி, நல்லிணக்கம் மற்றும் பொது நன்மையை ஊக்குவிக்கின்றன என்று கூறினார்.

இந்த உரையாடல் இருதரப்பு மரியாதை, சகோதரத்துவம் மற்றும் பகிரப்பட்ட பொறுப்பு ஆகியவற்றை அடிப்படையாகக் கொண்டிருக்க வேண்டும் என்றும், இதன் மூலம் இரு மரபுகளும் தங்களின் தனித்துவமான அடையாளங்களைப் பாதுகாத்துக் கொண்டே ஒன்றிடமிருந்து மற்றொன்று கற்றுக்கொள்ள முடியும் என்றும் அவர் வலியுறுத்தினார்.

மேலும், கிறிஸ்தவம் கிறிஸ்துவின் மீட்புச் செயலின் மூலம் புதுப்பித்தலைக் காண்கிறது என்றும் அதே வேளையில் கன்பூசியத் தத்துவம் அறநெறி ரீதியாக தன்னைத்தானே பண்படுத்துவதையும் நெறிமுறை வாழ்வையும் வலியுறுத்துகிறது என்றும் அவர் குறிப்பிட்டார்.

இந்தக் கூட்டத்தின் போது கிறிஸ்தவ-கன்பூசிய உரையாடலுக்கான வழிகாட்டுதல்களின் வரைவு சமர்ப்பிக்கப்பட்டது.  இதன் இறுதி வடிவம் கூட்டத்தின் முடிவில் வெளியிடப்பட உள்ளது.

இந்தச் சந்திப்பை பல்சமய உரையாடலில் ஒரு வரலாற்றுச் சிறப்புமிக்க மைல்கல் என்று திருஅவைத் தலைவர்கள் விவரித்துள்ளனர். மோதல்கள், சமத்துவமின்மை மற்றும் சுற்றுச்சூழல் பற்றிய கவலைகள் போன்ற உலகளாவிய சவால்களை எதிர்கொள்வதில் நட்பு, இருதரப்புப் புரிதல் மற்றும் ஒத்துழைப்பு ஆகியவற்றை இது வலுப்படுத்தும் என்றும் அவர்கள் நம்பிக்கை தெரிவித்துள்ளனர்.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்.

05 ஆகஸ்ட் 2026, 15:13