கலை வழியாக இன்றைய உலகின் சவால்களை எதிர்கொள்ளும் கத்தோலிக்கப் பல்கலைக்கழகங்கள்!
ஜான்சிராணி அருளாந்து - வத்திக்கான்
பண்பாடு மற்றும் கல்விக்கான திருப்பீடத்துறையால் முன்னெடுக்கப்படும் அனைத்துலக முன்னெடுப்பான கத்தோலிக்கப் பல்கலைக்கழகங்களின் முத்தரப்பு கலைவிழா, கலைஞர்கள், கத்தோலிக்கப் பல்கலைக்கழகங்கள், கலைக் கண்காணிப்பாளர்கள் மற்றும் பண்பாட்டு நிறுவனங்களை ஒன்றிணைத்து, இன்றைய உலகம் எதிர்கொள்ளும் முக்கிய பிரச்சினைகளுக்குக் கலை எவ்வாறு பதிலளிக்க முடியும் என்பதை ஆராய்கிறது.
2026 மற்றும் 2027ஆம் ஆண்டுகளில் பல்வேறு நாடுகளில் நடைபெறும் இம்முத்தரப்பு கலைவிழா, வெனிசில் நிறைவடையும். இதன் ஒரு பகுதியாகக் கலைக் கண்காட்சிகள், கலைப் படைப்புகளுக்கான ஆக்கப்பணிகள், வெளியீடுகள் மற்றும் பல்வேறு பொது நிகழ்ச்சிகள் இடம்பெறும்.
“பரிவுணர்வுப் பயிற்சிகள்” என்ற தலைப்பிலான இதன் தொடக்க நிகழ்வு ரியோ டி ஜெனீரோ, சாண்டியாகோ, பொகோட்டா, பாஸ்டன், மிலான், லிஸ்பன் மற்றும் லுவாண்டா ஆகிய நகரங்களில் நடைபெறவுள்ளது. உயர்கல்வி, மனித உறவுகள் மற்றும் பரிவுணர்வின் பங்கு குறித்து இம்முன்னெடுப்பு ஆராய்வதுடன், மனித வாழ்வின் அடிப்படை மதிப்புகளைப் பாதுகாப்பதன் பொருள் குறித்த ஆழமான சிந்தனையையும் ஊக்குவிக்கிறது.
பண்பாடு மற்றும் கல்விக்கான திருப்பீடத் துறையின் தலைவர் கர்தினால் ஜோசே தொலென்தினோ தெ மெந்தோன்சா அவர்கள், கத்தோலிக்கப் பல்கலைக்கழகங்களின் அடையாளத்திலும் கல்விப் பணியிலும் பரிவுணர்வு முக்கிய இடம் பெறுகிறது என்று வலியுறுத்தினார். இன்றைய உலகின் சிக்கல்களைப் படைப்பாற்றலுடன் எதிர்கொள்ள மக்களுக்கு உதவும் வகையில், பல்கலைக்கழகங்கள் படைப்பாற்றல், உரையாடல் மற்றும் இணைந்து உருவாக்குதல் ஆகியவற்றின் மையங்களாகத் திகழ வேண்டும் என்றும் அவர் குறிப்பிட்டார்.
திருத்தந்தை பதினான்காம் லியோ அவர்கள் தமது “மகத்தான மானுடம்” என்ற திருமடலில், சமூகங்களை மேலும் நீதியானதாகவும் சகோதரத்துவம் நிறைந்ததாகவும் மாற்ற பல்கலைக்கழகங்கள் படைப்பாற்றலைப் பயன்படுத்த வேண்டும் என்று விடுத்துள்ள அழைப்பையும் இம்முன்னெடுப்பு பிரதிபலிக்கிறது.
முதல் பதிப்பில் ஏழு கத்தோலிக்கப் பல்கலைக்கழகங்கள் பங்கேற்கின்றன. இவற்றின் கலைக்கண்காட்சிகள் 2026 ஆகஸ்ட் முதல் அக்டோபர் வரை தொடங்குகின்றன. கலை மற்றும் பல்துறை உரையாடல் வழியாக, அழகியல் மற்றும் நெறியியலை இணைத்து, ஒருவரையொருவர் மதித்தல், பரிவுணர்வு மற்றும் மனித மாண்பை மேம்படுத்துவதே இம்முத்தரப்பு கலைவிழாவின் நோக்கமாகும்.
பல்கலைக்கழகங்களும் கண்காட்சி நடைபெறும் கால அட்டவணையும்
இந்த முத்தரப்பு கலைவிழாவின் முதல் பதிப்பில் ஏழு கத்தோலிக்கப் பல்கலைக்கழகங்கள் பங்கேற்கின்றன. அவை:
பிரேசில் – ரியோ டி ஜெனீரோவின் கத்தோலிக்கப் பல்கலைக்கழகம்
சிலி – சிலியின் கத்தோலிக்கப் பல்கலைக்கழகம், சாண்டியாகோ
கொலம்பியா – ஜாவெரியானா கத்தோலிக்கப் பல்கலைக்கழகம், பொகோட்டா
அமெரிக்கா – பாஸ்டன் கல்லூரி
இத்தாலி – புனித இதய கத்தோலிக்கப் பல்கலைக்கழகம், மிலான்
போர்த்துக்கல் – போர்த்துக்கீசிய கத்தோலிக்கப் பல்கலைக்கழகம், லிஸ்பன்
அங்கோலா – அங்கோலா கத்தோலிக்கப் பல்கலைக்கழகம், லுவாண்டா
இப்பல்கலைக்கழகங்களில் நடைபெறும் கலைக்கண்காட்சிகளின் தொடக்க மற்றும் நிறைவு தேதிகள் வெவ்வேறாக உள்ளன:
ஆகஸ்ட் 27 – பிரேசில், ரியோ டி ஜெனீரோ கத்தோலிக்கப் பல்கலைக்கழகம் – நவம்பர் 15, 2026 வரை
செப்டம்பர் 3 – சிலி, சாண்டியாகோ கத்தோலிக்கப் பல்கலைக்கழகம் – நவம்பர் 22, 2026 வரை
செப்டம்பர் 9 – கொலம்பியா, பொகோட்டா ஜாவெரியானா கத்தோலிக்கப் பல்கலைக்கழகம் – நவம்பர் 2026 வரை
செப்டம்பர் 23 – அமெரிக்கா, பாஸ்டன் கல்லூரி – டிசம்பர் 2026 வரை
அக்டோபர் 6 – இத்தாலி, மிலான் புனித இதய கத்தோலிக்கப் பல்கலைக்கழகம் – டிசம்பர் 2026 வரை
அக்டோபர் 12 – போர்த்துக்கல், லிஸ்பன் போர்த்துக்கீசிய கத்தோலிக்கப் பல்கலைக்கழகம் – டிசம்பர் 15, 2026 வரை
அக்டோபர் 29 – அங்கோலா, லுவாண்டா அங்கோலா கத்தோலிக்கப் பல்கலைக்கழகம் – டிசம்பர் 20, 2026 வரை
இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்.