தேடுதல்

கத்தானியா பேராலயத்தில் பாதுகாக்கப்படும் புனித அகத்தாவின் திருப்பண்டப் பேழை. கத்தானியா பேராலயத்தில் பாதுகாக்கப்படும் புனித அகத்தாவின் திருப்பண்டப் பேழை.  (Saint Agatha)

புனித ஆகத்தாவின் 900-வது ஆண்டு அருளீக்க விழா: கிறிஸ்துவில் வேரூன்றிய வாழ்வுக்கு கர்தினால் பரோலின் அழைப்பு

இத்தாலியின் கட்டானியா நகருக்குப் புனித ஆகத்தாவின் அருளீக்கங்கள் (Relics) கொண்டுவரப்பட்டதன் 900-வது ஆண்டு விழாவை முன்னிட்டு, சிசிலியின் அசி காஸ்தெல்லோவில் நடைபெற்ற திருவிழிப்பு இறைவேண்டல் நிகழ்வுக்குத் திருத்தந்தையின் தூதரான திருப்பீடச் செயலர் கர்தினால் பியத்ரோ பரோலின் அவர்கள் தலைமை தாங்கினார்.

அபிசேக் ராஜா அலங்காரம் - வத்திக்கான்

கிறிஸ்துவுடனான ஆழமான ஒன்றிப்பிலிருந்தே புனித ஆகத்தாவிற்கான பலம் கிடைத்தது என்றும், அதுவே வன்முறை, அச்சுறுத்தல்கள் இருந்த போதும், அதிகாரத்தில் உள்ளவர்கள் ஆசைவார்த்தைகள் கூறிய போதும் அவரை இறை நம்பிக்கையில் நிலைத்திருக்கச் செய்தது என்றும் திருப்பீடச் செயலர் கர்தினால் பியத்ரோ பரோலின் அவர்கள் கூறினார்.

புனித ஆகத்தாவின் அருளீக்கங்கள் இத்தாலியில் உள்ள கட்டானியா நகருக்குத் திரும்பக் கொண்டுவரப்பட்டதன் 900-வது ஆண்டு விழாவைக் குறிக்கும் வகையில் சிசிலியில் இடம்பெற்ற கொண்டாட்டங்களின் போது, அவரது நீடித்து நிலைத்திருக்கும் சான்று வாழ்வை கர்தினால் பரோலின் அவர்கள் பாராட்டினார்.

இந்த ஆண்டு விழாக் கொண்டாட்டங்களுக்காக திருத்தந்தை அவர்களால் திருத்தந்தையின் தூதராக நியமிக்கப்பட்ட கர்தினால் பரோலின் அவர்கள், ஆகஸ்ட் 16, ஞாயிற்றுக்கிழமையன்று அசி காஸ்தெல்லோவில் இடம்பெற்ற  திருவிழிப்பு இறைவேண்டல் நிகழ்வுக்குத் தலைமை தாங்கினார்.

அப்போது புனித ஆகத்தாவின் மறைசாட்சியம் குறித்து எடுத்துக்காட்டிய அவர், "மூன்றாம் நூற்றாண்டில் தனது இறை நம்பிக்கையைக் கைவிட மறுத்ததற்காக தனது பதின்ம வயதிலேயே மறைசாட்சியாகக் கொல்லப்பட்ட புனித ஆகத்தா, திருஅவைக்குத் தொடர்ந்து மனவலிமை மற்றும் இறைப்பற்றின் முன்னுதாரணமாக விளங்குகிறார்" என்று கூறினார்.

மேலும், "இறை நம்பிக்கை இன்னல்களை அகற்றுவதில்லை, மாறாக சோதனைகளை நம்பிக்கையுடன் எதிர்கொள்வதற்கான பலத்தை இறைமக்களுக்கு அளிக்கிறது"  என்று  கர்தினால் பரோலின் அவர்கள் வலியுறுத்தினார்.

முதல் திருப்பாடலை மேற்கோள்காட்டி, இறை நம்பிக்கையில் வேரூன்றியவர்களை "நீரோடையின் ஓரமாய் நடப்பட்ட மரத்திற்கு" ஒப்பிட்ட கர்தினால் பரோலின் அவர்கள், கடினமான சூழ்நிலைகளிலும் அவர்கள் கனி கொடுக்க வல்லவர்கள் என்றும் குறிப் பிட்டார்.

படிப்படியாக கடவுளின்‌ இருப்பை மறந்து வாழும் நிலைக்கு எதிராக எச்சரிக்கை விடுத்த கர்தினால் அவர்கள், மேலும் கடவுளின் வார்த்தையில் உண்மையான சுதந்திரத்தையும் மகிழ்ச்சியையும் கண்டடைய கிறிஸ்தவர்களை ஊக்குவித்தார்.

கிறிஸ்துவில் ஆழமாக வேரூன்றி இருப்பதன் மூலமும், பயம், உலக அழுத்தங்கள் மற்றும் மாயைகளை எதிர்த்து நிற்பதன் மூலமும் புனித ஆகத்தாவின் முன்னுதாரணத்தைப் பின்பற்றுமாறு கர்தினால் இறைமக்களுக்கு அழைப்பு விடுத்துள்ளார். கட்டானியாவில் அவரது அருளீக்கங்களுக்கு வணக்கம் செலுத்திய பின்  ஆயரின் தலைமையில் இடம்பெற்ற திருப்பலியுடன் இந்த கொண்டாட்டங்கள் நிறைவடைந்தன.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்.

18 ஆகஸ்ட் 2026, 14:18