கர்தினால் பியத்ரோ பரோலின் அவர்கள் மெக்சிகோவின் தேசிய அமைதி உரையாடல் பிரதிநிதிகளைச் சந்தித்தார். கர்தினால் பியத்ரோ பரோலின் அவர்கள் மெக்சிகோவின் தேசிய அமைதி உரையாடல் பிரதிநிதிகளைச் சந்தித்தார். 

பிறரின் துயரங்களுக்கு இரக்கம் காட்டுவதிலிருந்து அமைதி தொடங்குகிறது : கர்தினால் பரோலின்

மெக்சிகோவிற்கான தனது பயணத்தின்போது, ஆகஸ்ட் 5ஆம் தேதி திருப்பீடச் செயலர் கர்தினால் பியத்ரோ பரோலின் அவர்கள், அந்நாட்டின் தேசிய அமைதி உரையாடல் பிரதிநிதிகளைச் சந்தித்து, வன்முறையால் பாதிக்கப்பட்ட சமூகங்களில் அமைதியைக் கட்டியெழுப்ப அவர்கள் மேற்கொண்டு வரும் முயற்சிகள் மற்றும் அனுபவங்களைக் கேட்டறிந்தார்.

ஜான்சிராணி அருளாந்து - வத்திக்கான்

மெக்சிகோவிற்கான தனது பயணத்தின்போது, ஆகஸ்ட் 5 அன்று திருப்பீடச் செயலர் கர்தினால் பியத்ரோ பரோலின் அவர்கள், அந்நாட்டின் தேசிய அமைதி உரையாடல் பிரதிநிதிகளைச் சந்தித்து, வன்முறையால் பாதிக்கப்பட்ட சமூகங்களில் அமைதியைக் கட்டியெழுப்ப அவர்கள் மேற்கொண்டு வரும் முயற்சிகளையும் அனுபவங்களையும் கேட்டறிந்தார்.

இச்சந்திப்பில் கல்வியாளர்கள், அரசு அதிகாரிகள், சமயத் தலைவர்கள், காணாமல்போன தங்கள் அன்புக்குரியவர்களைத் தேடும் குடும்பத்தினர், காவல்துறை அதிகாரிகள், தொழில்துறைத் தலைவர்கள் மற்றும் மெக்சிகோவின் பல்வேறு மாநிலங்களின் பிரதிநிதிகள் பங்கேற்றனர்.

துன்புறுவோரின் மீது இரக்கம் காட்டுவதிலிருந்தே அமைதி தொடங்குகிறது என்று வலியுறுத்திய கர்தினால் பரோலின் அவர்கள், காணாமல்போன தனது மகனைத் தேடும் ஒரு தாயின் சாட்சியத்தைச் சுட்டிக்காட்டியதுடன், அமைதி என்பது பொறுமையுடன் நாள்தோறும் கட்டியெழுப்பப்பட வேண்டிய பணியாகும் என்றும் நினைவூட்டினார்.

மேலும் வன்முறையால் பாதிக்கப்பட்ட உலகின் பிற பகுதிகளுக்கும் இவர்களின் அனுபவம் ஊக்கமளிக்கக்கூடும் என்றும், தங்கள் முயற்சிகளில் மனம் தளர வேண்டாம் என்றும் அவர் கேட்டுக்கொண்டார்.

பங்கேற்பாளர்கள், காணாமல்போனவர்களின் குடும்பங்களுக்கும் அரசு அதிகாரிகளுக்கும் இடையிலான ஒத்துழைப்பு, அமைதியை முன்னெடுப்பதில் பல்வேறு கிறிஸ்தவத் திருச்சபைகளின் கூட்டுமுயற்சி, ஆபத்தான பகுதிகளில் பணியாற்றும் குருக்களுக்கு வழங்கப்படும் ஆதரவு உள்ளிட்ட பல்வேறு அமைதிக் கட்டியெழுப்பும் முயற்சிகளைப் பகிர்ந்துகொண்டனர்.

அமைதிக்கான தேசிய உரையாடல், வன்முறையால் பாதிக்கப்பட்ட சமூகங்களுக்கு நம்பிக்கையின் ஊற்றாக விளங்குகிறது என்று கூறிய கர்தினால் பரோலின் அவர்கள், அமைதியைக் கட்டியெழுப்பும் பணியில் தொடர்ந்து ஈடுபட்டு வருபவர்களுடன் தனது ஒருமைப்பாட்டை வெளிப்படுத்தியதுடன், அவர்களுக்கு திருப்பீடத்தின் ஆதரவும் உண்டு என்று உறுதியளித்தார்.

தங்களது பணியை அங்கீகரித்ததற்கும், அமைதியைக் கட்டியெழுப்பும் தங்களின் கூட்டு முயற்சிகளில் தங்களுடன் நெருக்கமாக இருக்க விரும்பியதற்கும் பங்கேற்பாளர்கள் கர்தினாலுக்கு நன்றி தெரிவித்தனர்.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்.

08 ஆகஸ்ட் 2026, 13:34